புதினங்களின் சங்கமம்

கோர விபத்தில் கர்ப்பிணித் தாய் உட்பட இருவர் பலி!! 61 பேர் பலி!!

வலப்பனை – நுவரெலியா பிரதான வீதியில் மாஹா ஊவாபத்தன, பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் கர்ப்பிணி தாய் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் 61 பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பேருந்து ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணியளவில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

நுவரெலியாவிலிருந்து வலப்பனை வழியாக அம்பாறை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா பேருந்து வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அம்பாறை செல்லும் வழியில் குறித்த பேருந்து, பாரிய வளைவு பகுதியில் பாதையை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, பேருந்தில் பயணித்த 61 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வலப்பனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதோடு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதன்போது நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்தோடு வலப்பனை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த 28 வயது மதிக்கத்தக்க அம்பாறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதோடு, சிலர் நுவரெலியா ஆதார வைத்தியசாலையிலும், சிலர் கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கவலைக்கிடமாக இருந்தவர்கள் சிலர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா மற்றும் வலப்பனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறிய வலப்பனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.