புதினங்களின் சங்கமம்

அனுராதபுரம் மூத்த பிக்குவால் 14 வயதுச் சிறுமி பல தடவைகள் துஸ்பிரயோகம்! பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு! நடந்தது என்ன?

அனுராதபுர அட்டமஸ்தானத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூத்த பிக்கு ஒருவரும், மேலும் ஒருவரும் இணைந்து சிறுமியொருவருக்கு மேற்கொண்டதாகக் கூறப்படும் கடுமையான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவத் தொடரைச் சார்ந்த வழக்கு, நேற்று (2026.05.04) அனுராதபுர நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான மற்றும் முக்கியமான தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

சில தரப்புகள் இந்தச் சிறுமியின் வயதை 15 எனக் குறிப்பிட்டிருந்தாலும், தற்போது உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி, அவளின் உண்மையான வயது 14 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் ஆகும்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இதுவரை பொறுப்புடன் செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விசேட அறிக்கை ஒன்றை அனுப்பி, குற்றச்சாட்டுக்குட்பட்ட பிக்குவை உடனடியாக கைது செய்யவும், கைது செய்யாததற்கான காரணங்களை விளக்கும்படியும் கேட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபர்களுக்கு எதிராக வெளிநாடு பயணத் தடை விதிக்குமாறு அண்மையில் அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட பிக்கு அல்லது வேறு யாரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக சந்தேகநபர்களாக பெயரிடப்படாத நிலையில், சட்ட அமுலாக்கத்தில் பொலிஸார் தயக்கம் அல்லது அழுத்தம் காரணமாகச் செயல்படாமல் உள்ளனர் எனக் கவனிக்கப்படுகிறது.

சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் படி, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவளது தாய் ரூபாய் ஒரு லட்சம் பெறுமதிக்கு, அட்டமஸ்தானத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அந்தப் பிக்குவிடம் அவளை ஒப்படைத்துள்ளார். அப்போது அந்தப் பிக்கு அவளுக்கு ரூபாய் 2000 வழங்கியிருந்தார். அதன் மூலம் அவள் ஒரு டி-ஷர்ட் மற்றும் வளையல் வாங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னரும் பல முறை அவள் அந்தப் பிக்குவை சந்தித்துள்ளதாகவும், ஒருமுறை அவரால் கைப்பேசியும் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அந்தப் பிக்கு தங்கியிருந்த அறை, அதில் உள்ள கதவுகள் மற்றும் அலுமாரிகள் குறித்து சிறுமி வழங்கிய விவரங்கள், சம்பவ இட ஆய்வின்போது துல்லியமாகப் பொருந்தியுள்ளன. தன்னிடம் நடந்தவற்றை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என அந்தப் பிக்கு அவளை எச்சரித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கு மேலாக, சிறுமியும் அவளது தாயும் தேன் விற்பனைக்காக தம்புள்ளை பகுதிக்கு சென்றபோது, மேலும் ஒரு துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளது. தாய் விற்பனையில் ஈடுபட்டிருந்த வேளையில், கழிப்பறைக்கு சென்றிருந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். பின்னரும் அவர் பலமுறை அவளை துஷ்பிரயோகம் செய்ததுடன், இதை யாரிடமும் தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்திற்கான இட ஆய்வு நாளை நடைபெறவுள்ளது. அங்கு சென்றால் அந்த நபரை அடையாளம் காண முடியும் என்றும் அவள் கூறியுள்ளது.

பின்னர் அனுராதபுரத்தைச் சேர்ந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த இந்தச் சிறுமி, ஒரு நாள் மாலை 4.15 முதல் 6.00 மணி வரை அவரைச் சந்தித்து திரும்பும் வழியில் தவறுதலாக கொழும்பு நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்து பணியாளர் (கொண்டக்டர்) அவளுக்கு உணவு மற்றும் பானம் வழங்கி உதவியதுடன், அவரால் எந்தவிதத் துஷ்பிரயோகமும் செய்யப்படவில்லை.

பாதை தவறிய நிலையில், நிட்டம்புவ பகுதியில் வசிக்கும் ‘சுது பபா’ என அழைக்கப்படும் மற்றொரு இளைஞரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவன் இருப்பிடத்திற்குச் சென்றுள்ளார். பின்னர் அவருடன் விடுதியில் தங்கியிருந்தபோது, பொலிஸார் அந்தச் சிறுமியை காவலில் எடுத்துள்ளனர்.

சில முக்கிய ஊடகங்கள் இந்தச் சிறுமியை ‘பெண்’ எனக் குறிப்பிட முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பொலிஸார் முறையான விசாரணை மேற்கொண்டு சந்தேகநபர்களை அதிகாரப்பூர்வமாக பெயரிட்டு, வழக்கை விரைவாக முன்னெடுக்கத் தவறினால், மேலதிக சட்ட ஆலோசனைக்காக இந்த வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி நிகழ்ந்தால், சட்ட ஆலோசனைகள் பெற 4 முதல் 5 ஆண்டுகள் வரை தாமதம் ஏற்பட்டு, இந்தக் கடுமையான குற்ற வழக்கு மங்கிப் போகும் அபாயம் இருப்பதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.