யாழ். தென்மராட்சி மீசாலை வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் கூரிய வாள்கள் மற்றும் கோடரிகளுடன் உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த கணவனையும், மனைவியையும் கட்டி வைத்துவிட்டுப் பல இலட்சம் ரூபா பெறுமதியான 40 பவுண் தாலிக் கொடி உள்ளிட்ட தங்கநகைகள், ஒரு இலட்சம் ரூபா பணம், வீட்டு உரிமையாளரின் பெறுமதியான மோட்டார்ச் சைக்கிள் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(28) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டின் உரிமையாளரான நடுத்தர வயதுக் கணவனைக் கட்டி வைத்துள்ளனர். பின்னர் அவரது வாய்க்குப் பிளாஸ்ரராலும் ஒட்டியுள்ளனர். இதனையடுத்து மனைவியின் கழுத்தில் சடுதியாக கோடாரியை வைத்து அச்சுறுத்திய கொள்ளையர்கள் அவரைக் கட்டி வைத்துவிட்டு வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர்.
கணவன்- மனைவி ஆகிய இருவரும் அவர்கள் அணிந்திருந்தஉடைகளாலேயே கட்டப்பட்டுள்ளனர்.
இதன்போது வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 40 பவுண் தங்கநகைகள், ஒரு இலட்சம் ரூபா பணம், வீட்டு உரிமையாளரின் பெறுமதியான மோட்டார்ச் சைக்கிள் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
திருடர்கள் அங்கிருந்து தப்பித்த்துச் செல்லும் போது காலை-05 மணிக்குப் பின்னரே வெளியே வர வேண்டுமெனவும் கடுமையாக அச்சுறுத்திச் சென்றுள்ளனர். அத்துடன் வீட்டு உரிமையாளரின் மோட்டார்ச் சைக்கிள் திறப்பைப் பெற்ற கொள்ளையர்கள் குறித்த மோட்டார்ச் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்றுக் காலை வீட்டில் ஆள் நடமாட்டமில்லாமையால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது கணவனும், மனைவியும் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





