கனடாவில் வாழும் பல இளம் தமிழர்களுக்கு சொந்த ஊரில் உள்ள அல்லது அருகில் இருக்கும் பெற்றோருக்கு பணம் அனுப்புவது அன்பின் அடையாளமாகவும் தவிர்க்க முடியாத கடமையாகவும் இருக்கின்றது. ஆனால் சரியான நிதித் திட்டமிடல் இல்லாமல் அனுப்பப்படும் இந்தப் பணம் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சத்தமில்லாமல் பாதிப்பதாக கனடா தமிழ் குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்கும் நிதி ஆலோசகர் சென் கணேசராஜா எச்சரித்துள்ளார்.
முதல் தலைமுறை பெற்றோர் அன்றாடத் தேவைகளுக்காகப் போராடியதால் அவர்களுக்கு நீண்ட கால நிதித் திட்டமிடல் சாத்தியமில்லாமல் போனது. ஆனால் இன்று பிள்ளைகள் தங்கள் குழந்தைகளுக்கான எதிர்காலத்தையும் சொந்த ஓய்வு காலத்தையும் உருவாக்குவதை, பிள்ளைகள் தங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தைத் தவிர்க்கும். இந்த இரண்டு இலக்குகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.
உதாரணமாக, ஆண்டுக்கு 55 ஆயிரம் டாலர் சம்பாதிக்கும் ஒரு இளைஞருக்கு வரிகள் மற்றும் பிடித்தங்கள் போக மாதத்திற்குச் சுமார் 3,600 முதல் 3,700 டாலர் மட்டுமே கையில் இருக்கும். இதில் மாதம் 500 டாலர் அனுப்புவது உண்மையான வருமானத்தில் சுமார் 14 சதவீதமாகும். எனவே குடும்பத்திற்கு உதவும் முன்பும் இளைஞர்கள் தங்கள் அடிப்படை நிதியை பலப்படுத்த வேண்டுமென நிதி ஆலோசகர் சென் கணேசராஜா அறிவுறுத்தியுள்ளார்.
முதலில் ஒரு மாதச் செலவுக்கு அவசர கால நிதி சேர்த்து, பின்னர் அதை மூன்று மாதச் செலவாக உயர்த்துங்கள். அதிக வட்டி கொண்ட கடன்களை முடியுங்கள். 500 டாலருக்குப் பதிலாக 250 டாலர் போன்ற நிலையான தொகையைக் குடும்பத்திற்கு ஒதுக்குங்கள். மாதம் 100 டாலர் என்றாலும் வரிவிலக்கு சேமிப்புக் கணக்கில் (TFSA) சேமியுங்கள். பெற்றோர் அந்தப் பணத்தை முழுமையாக நம்பியிருந்தால் குறைந்த கட்டண ஆயுள் காப்பீட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.
பணம் அனுப்ப முடியாத போது ஏற்படும் குற்ற உணர்ச்சி இயல்பானது. அதற்காகக் கடன் அட்டைகள் அல்லது கடன் வரம்புகளைப் பயன்படுத்தி பணம் அனுப்புவது மிகவும் ஆபத்தானது. அதற்குப் பதிலாக, எது நடந்தாலும் ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி என்னால் 350 டாலர் அனுப்ப முடியும் என்ற நிலையான வாக்குறுதியை அளிப்பது பெற்றோருக்கு நம்பிக்கையையும் நிம்மதியையும் தரும். சம்பளம் வந்தவுடன் குடும்பப் பணத்தைத் தனி கணக்கில் மாற்றுவதும், ஒவ்வொரு பரிமாற்றத்தையும் குறித்து வைப்பதும், அந்தப் பணத்தால் நாம் இழக்கும் மற்ற வாய்ப்புகளைப் புரிந்து கொள்வதும் நீண்ட கால உதவிக்கு வழிகாட்டும் என நிதி ஆலோசகர் சென் கணேசராஜா மேலும் தெரிவித்துள்ளார்.




