பிரான்ஸின் Seine-Saint-Denis மாவட்டத்தில் உள்ள Aulnay-sous-Bois நகரில் இடம்பெற்ற விபத்தில், 18 வயதுடைய தமிழ் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நவம்பர் 23ஆம் திகதி திங்கட்கிழமை காலை, தனது தோழியுடன் மின்சார ஸ்கூட்டரில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, பாரவுந்து ஒன்று மோதியதில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்கு அருகிலுள்ள வீதிச் சந்திப்பில் இடம்பெற்ற விபத்தில், அவசர சிகிச்சைப் பிரிவினர் மாணவியைக் காப்பாற்ற தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவரை உயிர் பிழைக்கச் செய்ய முடியவில்லை.
அவருடன் பயணித்த மற்றைய மாணவி காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உயிராபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய பாரவுந்தின் சாரதி பொலிஸாரால் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மது மற்றும் போதைப்பொருள் பரிசோதனைகளில் பாதிப்புக்குரிய முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





