புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் களைகட்டும் மாவா என்னும் போதைப்பொருள் வியாபாரம்.!

வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியோரமாக குடியிருப்பு தென்னந்தோப்பு பகுதியிலும் மற்றும் பூந்தோட்டம் கல்வியியற் கல்லூரி வீதியில் பூந்தோட்டம் சந்தைக் கடைத் தொகுதியில் ஒரு கடையிலும் போதைவஸ்துக்களான மாவா, கஞ்சா போன்றவை விற்பனை செய்யப் படுகின்றன. இந்த விற்பனை நிலையங்களில் கூடும் சமூக விரோதிகள் வீதியில் செல்லும் பாடசாலை மாணவிகள் வேலைக்குச் செல்லும் பெண்கள் போன்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதோடு வீதி விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை, மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதும் அன்றாடம் இடம்பெறும் செயல்களாகும். இந்த மாவா போன்ற போதைவஸ்துக்களை பயன்படுத்தும் சமூக விரோதிகளான இந்த இளைஞர்கள் தான் வவுனியாப் பகுதிகளில் இடம்பெறும் வன்முறைகளுக்கும் காரணமாக உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
போதையை ஒழிக்கும் நாட்டின் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு விரோதமான இந்த செயற்பாடுகளை போலீசாரோ அல்லது வன்னி மாவட்ட அரச பாராளுமன்ற உறுப்பினர்களோ கண்டும் காணாதவர்கள் போலவே செயற்படுகின்றனர். இவர்களது அனுசரனைகளுடனா இந்த மாவா விற்பனை இடம்பெறுகின்றன எனவும் மக்கள் கருதுகின்றனர். ஆகவே இந்த போதை வியாபாரிகளை அடியோடு ஒழித்து பொதுமக்கள் மன நிம்மதியோடு வாழவும் தங்களது பிள்ளைகள் பாதுக்காப்பான சமூகத்தில் வாழுவதற்கும் இந்த அரசாங்கம் வழிவகை செய்தாலன்றி தொடர்ந்தும் மக்கள் மௌனிகளாக இந்த அரசாங்கத்தை கண்மூடித்தனமாக ஆதரிக்க மாட்டார்கள் என்பதும் மக்களின் கருத்தாக இருக்கின்றது.