புதினங்களின் சங்கமம்

வறுமையின் கோரப் பிடிக்கு பெரும்பான்மையும் தெரியாது,சிறுபான்மையும் தெரியாது…(Photos)

01.09.2019 வவுனியா குட்செட் வீதியில், வீதியோரமாக விரித்த உரப்பையில் அமர்ந்தபடி ஐயா ஒருவர் மண்வெட்டிப் பிடி விற்றுக் கொண்டிருக்கின்றார்.

நான்கு மண்வெட்டிப் பிடிகள், துருப் பிடித்த பழைய துவிச்சக்கரவண்டி, இருவேறு நிறங்களில் “பாட்டா” செருப்புகள் என அவரது வறுமையைச் சொல்லும் அடையாளங்கள் பல…

மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த நான் அவரது முதுமையிலும் பிச்சை எடுக்காமல் உழைக்கும் மனோபாவத்தை மதித்து அருகில் சென்றேன்.

“ஐயா மண்வெட்டிப் பிடி என்ன விலை?”

“நூறு ரூபாய்”

மண்வெட்டிப் பிடி கை மாறுகிறது.

“ஐயா காசு காணுமோ ?”

“ஓம்”

“இது என்ன மரம்?”

“விண்ணாங்கு”

“அப்ப நூறு ரூபாய் காணுமோ?”

“காணும்; நீங்கள் கேட்கிற படியா தேத்தண்ணி குடிக்க ஐம்பது ரூபாய் தந்திட்டுப் போங்கோ.”

பணம் கொடுத்தேன்.

“ஐயாக்கு இப்ப எத்தனை வயது?”

“அறுபத்தைஞ்சு”

“நீங்க எந்த இடம்?”

“மாமடு றோட், அற்றம்பகஸ்கட”

“ஐயா நீங்க சிங்களமா?”

“ஓம்”

“உங்களுக்கு என்ன பெயர் ?”

“பியதாச”

“எப்படி நல்லாத் தமிழ் கதைக்கிறீங்க?”

“நான் பிறந்தது வவுனியாவிலதான். பக்கத்தில் சின்னக்குளம், கள்ளிக்குளம் தமிழ் ஆக்களோட பேசிப் பழகி வந்த தமிழ்.”

இரு மொழித்திறன் இருந்தும் கள்ளமில்லா கிராமத்து மண்வாசனை…இதில் பெரும்பான்மை என்ன? சிறுபான்மை என்ன? அவரது வயதிற்கும், முயற்சிக்கும் மதிப்பளித்து வணங்கி விடைபெற்றேன்.

அன்புடன் … N. K. Kajarooban