யாழில் ஃபோன் அடிச்சா காலுக்குள் பொலிஸ் நிற்குமா? கஞ்சாக்காரன் நிற்பானா? பொத்திப் பொத்தி வளர்த்த மேகலை… வெக்கம் விட்டுப் போகலை…
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்….
யாழ். நகரை மையமாகக் கொண்டு பொலிஸாரின் விசேட சேவை மையம் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
வீதி போக்குவரத்து பிரச்சினைகள், சிறு குற்றங்கள் என்பவற்றை தவிர்க்கும் வகையில் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமால் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் சேவையை பெற்றுக்கொள்ள 021- 222 2221 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு பொதுமக்கள் முறையிடுவதன் மூலம் பொலிஸார் குறித்த பகுதிக்கு விரைந்து சென்று, பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உண்மையில் நல்ல ஒரு திட்டம்தான். வரவேற்கத்தக்கது. அனால் பொலிஸுக்கு ஃபோன் அடிச்சா பொலிஸையும் விட வேகமாக கஞ்சாக்காரன் வருவானோ என்றும் மக்களுக்கு பயம் இருக்கிறது. ஏனெனில் இடம்பெறும் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக மக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தும்போது அந்த குற்றங்களை புரிபவர்களிடம், முறைப்பாட்டாளர்களை காட்டி கொடுக்கின்ற நிலைமையும் காணப்படுகின்றது. இதனால்தான் இவ்வாறான குற்றங்களை தெரியப்படுத்தவும் மக்கள் முன்வருவதில்லை. குற்றங்கள் புரிபவர்களுடன் தொடர்புகளை பேணும் சில பொலிஸாரால் ஒட்டுமொத்த பொலிஸ் தரப்புக்கும் அவப்பெயர்.
பொலிஸ் அவசர சேவைகளுக்கு என்று இதுவரை பல பொலிஸ் பிரிவுகளும், தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. ஆனால் அவற்றின் நோக்கம் முழுமையாக ஈடேறியுள்ளதா என்றால் கேள்விக்குறிதான்.
ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் பொதுவான தொலைபேசி இலக்கங்கள் காணப்பகின்றன. ஒருவர் மீது வாள்வெட்டு சம்பவம் இடம்பெறப்போது என்றும், அதனை தடுத்து நிறுத்துங்கள் என்றும் கூறுவதற்கு பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பு மேற்கொண்டால், பொலிஸார் அந்த தொலைபேசிக்கு பதிலளிப்பதற்குள் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்று, பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையும் பெற்றுவிட்டு வீடு திரும்பியிருப்பார்.
அதற்கு பின்னர்சரி தகவல் கிடைத்தவுடன் விரைந்து வருவார்களா? இல்லை. “பொத்தி பொத்தி வளர்த்த புள்ளை மேகலை, அதற்கு இன்னும் வெட்கம் விட்டுப் போகலை” என்று வடிவேலு கூறுகின்ற சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது. மணமேடைக்கு செல்கின்ற புதுப்பெண் வெட்கத்துடன் வளைந்து நெளிந்து, ஆடி அசைந்து செல்வதுபோல் ஒரு நீல நிற முச்சக்கர வண்டி அல்லது நீல நிற ஜீப் வரும். அவர்கள் அங்கு வந்து சேருவதற்குள் பொலிஸுக்கு ஃபோன் பண்ணியவனுக்கு தான் ஃபோன் பண்ணிய விடயமே மறந்துபோயிருக்கும்.
இவ்வாறு அசண்டையீனமாக செயற்படுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், குற்றங்களை புரிபவர்களுடன் தொடர்புகளை பேணுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் முதலில் தகுந்த தண்டனை வழங்கவேண்டும். வெறுமனே இடமாற்றம் என்று கூறிக்கொண்டு நெடுந்தீவுக்கும், மருதங்கேணிக்கும் அனுப்புவதால் பெரிதாக ஒன்றும் நிகழப்போவதில்லை. ஏன் நெடுந்தீவு, மருதங்கேணி எல்லாம் சீர்திருத்த நிலையமா? தகுந்த தண்டனை வழங்கினால் மட்டுமே ஏனைய பொலிஸாரும் திருந்த வாய்ப்புகள் உள்ளன.
எந்த அரச சேவையிலும் உள்ள குறைபாடுகள் இதுதான். விரைவான விசாரணைகள் இன்மை, தகுந்த தண்டனை இன்மை, ஆமையின் அரை வேகத்தில் இடம்பெறும் நடவடிக்கைகள். இவை அனைத்தும்தான் அரச திணைக்களங்கள் உருப்படாமைக்கு காரணங்கள். இந்த விடயங்களுக்காகத்தான் பெரும்பாலானோர் அரச வேலைகளுக்காக போராடுகின்றனரோ தெரியவில்லை.
“சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்க மாட்டார்” என்று ஒரு பழமமொழி உள்ளது. அநுர என்னதான் ஊழல்களையும், இலஞ்சத்தையும், வேறு முறைகேடான விடயங்களையும் ஒழிக்க வேண்டும் என்ற வெறியோடு இருந்தாலும் இவ்வாறான அதிகாரிகள் திருந்தாவிட்டால் என்ன செய்வது?
எது எவ்வாறாயினும் ஆரம்பித்துள்ள புதிய சேவையானது சமகாலத்துக்கு தேவையான ஒன்று. அந்த சேவையானது எவ்வளவு தூரத்திற்கு மக்களுக்கு பயனுள்ளதாக இதண்டப்போகின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

