புதினங்களின் சங்கமம்

யாழ் LB finance இல் பச்சைக்கள்ளனை காட்டிக் கொடுக்க மறுத்த அதிகாரிகள்!! றிப்போட்டர் கஜியின் தலைக்கு மேல் நடந்த கதி!!

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும். அதனை அப்படியே தந்துள்ளோம்…
மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும் என்று பாடலாசிரியர் பா.விஜய் வரிகள் எழுத, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பென்னி டயல், அர்ச்சித் மற்றும் தர்ஷனா கே.டி ஆகியோர் பாடலுக்கு குரல் கொடுத்தனர்.
ஆனால், இங்கு “யாழ்ப்பாணம் போகாதடி அங்கே ஹெல்மெட் கள்வன் நிற்பானடி” என்று வரிகளையும் நானே எழுதி, இசையையும் நானே அமைத்து, குரலையும் நானே கொடுக்கவேண்டி உள்ளது.
கடந்த மாதம் எனக்கு தெரிந்த ஒருவர் வைத்தியசாலை ஒன்றில் உயிரிழந்துவிட்டார். ஆகையால் நான் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலை வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றுவிட்டு மீண்டும் வெளியே வந்து பார்த்தவேளை எனது தலைக்கவசத்தை காணவில்லை. அதை யாரோ ஒரு சில்லறை திருடன் திருடிச் சென்றுவிட்டான்.
சரி போகட்டும் என்று 4500 ரூபாவிற்கு புதிய தலைக்கவசம் ஒன்றினை அன்றையதினமே வாங்கினேன். தலைக்கவசமும் கொடுத்த விலைக்கு நன்றாகத்தான் இருந்தது.
இன்றையதினம் LB finance நிதி நிறுவனமானது வடக்கு மாகாணத்தில் தடம்பதித்து 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அந்த கொண்டாட்டமானது யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வு குறித்து செய்தி அறிக்கையிடுமாறு சில ஊடக நிறுவனங்கள் எனக்கு கூறியதையடுத்து நானும் அங்கே சென்றேன்.
நிறுவனத்திற்கு முன்புறத்தில் ஒரு ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தலைக்கவசத்தை மோட்டார் சைக்கிளிலேயே வைத்துவிட்டு உள்ளே சென்றேன். நிகழ்வுகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் வெளியே வந்து பார்த்தவேளை எனது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்ட இடத்தில் வேறு மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எனது மோட்டார் சைக்கிளானது ஏற்கனவே நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 4-6 மீட்டர்கள் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. வடிவேல் சொன்னது போல “அதேதான் அதேதான்”, மறுபடியும் தலைக்கவசத்தை காணவில்லை.
சிறிதுநேரம் தேடிவிட்டு உள்ளே சென்று LB finance அதிகாரி ஒருவரிடம் விடயத்தை கூறினேன் அவரும் அந்த இடத்தில் வந்து பார்த்துவிட்டு உள்ளே சென்றார். சிசிடிவி கேமராவை பரிசோதனை செய்து பார்க்குமாறு கோரினேன். ஆனால் அவரோ அசண்டையீனமாக இருந்தார். ஹெல்மெட் தொலைந்ததற்கு நிறுவனம் பொறுப்பல்லதான். ஆனால் அவர்களது நிறுவனத்தின் செய்தி சேகரிப்புக்காகவே சென்றேன் என்ற அடிப்படையில் சிசிடிவி கேமராவை ஒருதடவை பரிசோதித்து பார்த்திருக்கலாமே… அதுசரி, ஹெல்மெட் அவர்களுடையது இல்லை தானே என. ஹெல்மெட் இல்லாமல் வீதியில் வந்தால் பொலிஸ்காரன் வேறு மறித்து பொழுதுபோக்குவான். புதிய ஹெல்மெட் வாங்குவதற்கு கையில் பணமும் இல்லை. பணப்பையும் (purse) கொண்டு செல்லவில்லை.
பின்னர் எனது நண்பன் ஒருவருக்கு அழைப்பு மேற்கொண்டு விடயத்தை கூறியவேளை பணம் கொண்டுவருவதாக அவன் கூறினான். பின்னர் சிறிது நேரத்தில்தான் லைசன்ஸ் கவருக்குள் ஏ.டி.எம் காட் இருக்கின்ற விடயம் நினைவு வந்தது. பிறகு நண்பனுக்கும் விடயத்தை சொல்லி வரவேண்டாம் என்று கூறிவிட்டு கடைக்கு சென்று புதிய தலைக்கவசம் ஒன்றினை 4700 ரூபாவுக்கு வாங்கி விட்டு வீடு வந்தேன்.
ஹெல்மெட் திருடர்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன், ஏன் நீங்கள் மோட்டார்சைக்கிளை விற்றுவிட்டு அந்த பணத்திற்கு ஒரு ஹெல்மெட் வாங்கக்கூடாது? பல இலட்சம் கொடுத்து மோட்டார் சைக்கிள் வாங்கும் உங்களிடம் ஒரு ஹெல்மெட் வாங்க 5000 ரூபாவிற்கு வக்கில்லையா? திருடப்போகின்றவர்களே உங்களது பெயர் விபரங்களை என்னிடம் தாருங்கள். முதலில் உங்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு ஹெல்மெட் வாங்கி தந்துவிட்டு இறுதியாக நான் எனக்கு என்று ஒன்றை வாங்குகிறேன்.
தலைக்கவசம் திருடப்பட்டால், அந்த நேரத்தில் கையில் பணமும் இல்லை என்றால் அவர்கள் எவ்வளவு அசௌகரியங்களை அவர்கள் எதிர்நோக்குவார்கள் தெரியுமா? தூரத்தில் இருந்து வருபவர்கள் எவ்வாறு வீடு செல்வது? திருடுகின்ற தற்குறிகள் சற்றேனும் இதுகுறித்து சிந்திப்பார்களா?
யாழ்ப்பாணத்தில் உள்ள LB finance நிறுவனத்திற்கு செல்பவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு, உங்களது தலைக்கவசத்தை நீங்களே பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். நிறுவன உத்தியோகத்தர்கள் வட்டி கணக்கு பார்ப்பதில் கவனமாக இருப்பதனால் உங்களது உடமைகள் களவாடப்படுகின்றமை குறித்து சிசிடிவி கேமரா பார்ப்பதற்கு கூட அவர்களுக்கு நேரம் கிடைக்காது. ஆகையால் கவனம் மக்களே…
May be an image of motorcycle