யாழில் கணவனைக் கட்டி வைத்து அவன் முன் பலரால் கொடூர வல்லுறவுக்குள்ளான 23 வயது சுமதி!! கொதித்தெழுந்த நீதிபதி இளஞ்செழியன்!! வம்பனின் புலனாய்வுத் தொடர் 9
1996ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சுண்டுக்குளி மகளீர் கல்லுாரி மாணவி கிருசாந்தி படையினரால் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, கிருசாந்தி கொலைக்கு முன்னரும், கிருசாந்தி கொலைக்குப் பின்னரும் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக செம்மணி மற்றும் அரியாலைப் பகுதிகளில் நடந்த சம்பவங்கள் சிலவற்றை நாம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். அதன் 9 வது பகுதி இங்கு தரப்பட்டுள்ளது.
8ம் பகுதியையும் கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்…..
கிருசாந்தியின் கொடூரக் கற்பழிப்புக்கும் கொலைக்குக்கும், அவளது தாய், தம்பி, அயலவன் ஆகியோரது கொலைக்கும் காரணமானவர்கள் என்று கருதப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களில் முதலாவது குற்றவாளியான லான்ஸ்கோப்ரல் சோமரத்னராஜபக்ச, தனக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டவுடன் பரபரப்பு தகவல்களை நீதிமன்றில் வழங்கியிருந்தான். உயரதிகாரிகளின் கட்டளைகளின்படிதான் செம்மணியில் பலரைக் கொலை செய்ததாகவும், ஆனால் உயரதிகாரிகள் தப்பிவிட்டார்கள் எனவும் கொலை செய்தபின் அச் சடலங்களைப் புதைத்த கடமையைச் செய்த நாங்கள் மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ளோம் என்றும் நீதிமன்றில் கூறியதால் இலங்கையில் மட்டுமல்ல உலகரீதியாகவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிருசாந்தி மற்றும் அவளது தாய், தம்பி அயலவன் ஆகியோரைக் கொன்ற குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றம் ”ட்ரயல் அட் பார்”விசாரணைக்குப் பின்னர் 03.07.1998ம் ஆண்டு அன்று 6 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கியது. அந்த 6 பேரில் முதலாவது குற்றவாளியாக காணப்படுபவனே லான்ஸ்கோப்ரல் சோமரத்னராஜபக்ச. மற்றையவர்களான லான்ஸ்கோப்ரல் முதியான்ஸ்லாகே ஜெயசிங்க, லான்ஸ்கோப்ரல் இந்திரஜித்குமார,சிப்பாய் பிரியசாந்தபெரேரா, சிப்பாய் டி.எம். ஜெயதிலக்கா ஆகிய இராணுவத்தைச் சேர்ந்த 5 பேரும் பொலிஸ் காண்ஸ்டபில் பிரதீப் பிரியதர்சன ஆகியோரும் மரணதண்டனை வழங்கப்பட்ட ஏனையவர்களாவா்.
இவர்களில் லான்ஸ்கோப்ரல் இந்திரஜித்குமார பிடிபடாது தப்பி ஓடியதும் குறிப்பிடத்தக்கது. இவன் கடைசிவரை பிடிபடவில்லை. இவனே செம்மணிப் புதைகுழி பற்றிய முக்கிய விடயங்களை அறிந்தவன் ஆவான். இவன் உயரதிகாரிகளை காப்பாற்றும் நோக்கில் அரச பாதுகாப்புடன் வெளிநாட்டுக்கு அனுப்பட்டிருக்கலாம். தற்போது கிளறப்பட்டுக் கொண்டிருக்கும் புதைகுழிகள் தொடர்பாக இவனே முழுமையான தகவல்களை அறிந்தவனாக காணப்படுகின்றான் என்ற சந்தேகம் எழுகின்றது.
ஏனெனில் கிருசாந்தி கொலை வழக்கில் கிருசாந்தியை பிடித்து வைத்திருந்து 2 நாட்கள் தொடர்ச்சியாக வல்லுறவு்ககுள்ளாக்கிய உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும் ஆனால் அவர்களைக் குற்றப்புலனாய்வுப் பொலிசார் விடுவித்த பின் கிருசாந்தியின் உ்டலைப் புதைத்த எமக்கே மரணதண்டனை தந்துள்ளார்கள் என்றும் லான்ஸ்கோப்ரல் சோமரத்னராஜபக்ச செம்மணிப் புதைகுழி தோண்டிக் கொண்டிருக்கும் போது மன்னார் மேலதிக நீதிபதியாகவும் செம்மணிப் புதைகுழி வழக்கில் விசேடமாக நியமிக்கப்பட்டிருந்த நீதிபதியுமாகிய இளஞ்செழியனுக்கு வாக்குமூலம் வழங்கியிருந்தான்.
அத்துடன் முதலாவது குற்றவாளியான லான்ஸ்கோப்ரல் சோமரத்னராஜபக்சவும் ஒரு தடவை தப்பியோடி பின்னர் சில மாதங்களின் பின் பிடிபட்டதும் குறிப்பிடத்தக்கது. மற்றுமொரு தடவை தப்பியோட முற்பட்ட போது நீதிமன்றிலேயே பிடிபட்டுமுள்ளான்.
இலங்கை இராணுவப் படைகளின் அதிகாரரீதியான பதவி மட்டங்களை நாம் இங்கு வழங்குகின்றோம்.
1) பீலட் மார்ஷல் – (சரத் பொன்சேகராவுக்கு மட்டுமே இப்பதவி கொடுக்கப்பட்டது. )
2) ஜெனரல் 3) லெப்டினன் ஜெனரல் 4) மேஜர் ஜெனரல் 5) பிரிகேடியர் 6) கேர்ணல் 7) லெப்டினன்ட் கேர்ணல் 8) மேஜர் 9) கப்டன் 10) லெப்டினன்ட் 11) கோப்ரல் 12) லன்ஸ்கோப்ரல்
ஆகவே கிருசாந்தி கொலைச் சம்பவத்தின் பிரதான முதலாவது குற்றவாளியான லான்ஸ் கோப்ரல் சோமரத்னராஜபக்ச இலங்கை இராணுவ படை அதிகார மட்டத்தின் மிகக் கடைசி நிலையில் உள்ள பதவிக்குரியவனாவான். இலங்கையின் இராணுவக்கட்டமைப்பின் கீழ் லான்ஸ் கோப்ரல் ஒருவரின் கட்டளைக்குக் கீழ் போர் நடவடிக்கைகளின் போது கிட்டத்தட்ட 6 தொடங்கி 12 இராணுவத்தினர் பணியாற்றுவார்கள்.
லன்ஸ்கோப்ரல் சோமரத்னராஜபக்ச யாரின் கட்டளைகளுக்கு கீழ் பணியாற்றினான்?
1996ம் ஆண்டு யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்ட பின்னர் 51வது கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜனகபெரேராவின் கீழ், 1996ம் ஆண்டு யூலை மாதம் 4ம் திகதி வரை செயற்பட்ட 512 வது பிரிகேட் தளபதியான பிரிகேடியர் ஆனந்தஹமன்கொடவின் கீழும் ( 1996 யூலை 4ம் திகதி தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலி) அதன் பின்னர் யாழ் நகர கட்டளைத் தளபதியாக 1996ம் ஆணடு நவமபர் 5ம் திகதி நியமிக்கபட்ட பிரிகேடியர் நந்தா மல்லவராட்சி பதவிக்கு வரும் முன்னருமே அரியாலை இராணுவத்தின் கீழ் செயற்பட்டான். 1996 யூலை 4ம் திகதிய தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் பலியான பிரிகேடியர் ஆனந்தஹமன்கொடவின் மரணத்தின் பின்னரே அரியாலைப் பகுதியில் கிருசாந்தி, சுமதி உட்பட்டவர்கள் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன் குறித்த காலப்பகுதியிலேயே பலரும் அப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டார்கள். குறித்த அந்த 90 நாட்களுமே அரியாலை அதகளமான காலமாகும். அக் காலப்பகுதியில் 512 வது யாழ் நகரப் பிரிகேடியராக காமினிஜெயசுந்தர கடமையாறியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. ஏனெனில் கிருசாந்தி கொலை வழக்கில் இவனே முதலாவது சாட்சியாகவும் உள்ளான். ( குறித்த பிரிகேடியர்கள் பின்னர் ஜேயர் ஜெனரல்களாக பதவியுயர்வு பெற்றுள்ளனர்)
மேஜர் ஜெனரல் ஜனகபெரேரா மனைவியுடனும் தனியேயும்


1996ம் ஆண்டு யூலை 4ம் திகதி வரை 512 வது பிரிகேட் தளபதியாக கடமையாற்றிய பிரிகேடியர் ஆனந்தஹமன்கொட

1996ம் ஆண்டு நவம்பர் 5ம் திகதி 512 வது பிரிகேட் தளபதியாக கடமையைப் பொறுப்பேற்ற பிரிகேடியர் நந்தா மல்லவராட்சி

1996ம் ஆண்டு கிருசாந்தி கொலை வழக்கின் முதலாவது சாட்சியாக காணப்பட்ட பிரிகேடியராக காமினிஜெயசுந்தர

512வது பிரிகேட் ஆளுகைக்கு உட்பட்ட, கிழக்குப் பிராந்தியத்து்ககுப் பொறுப்பான கேணல் ஒருவனின் கீழான (பெயர் அறியப்பட முடியவில்லை) பிரதேசத்தில் பாசையூர், கொழும்புத்துறை, அரியாலை, நல்லுார் கிழக்கு போன்றவற்று்ககுப் பொறுப்பாக இருந்த லெப்டினன் கேணல் (பெயர் அறியப்பட முடியவில்லை) ஒருவனுக்கு கீழ் செயற்பட்ட முகாம்களில் மேஜர் வீரக்கொடி, மேஜர் குணசேகரா ஆகியோர் பொறுப்பாக இருந்த முகாம்களில் ஒன்றான 7வது படையணி முகாமான துண்டி முகாமிலேயே குறித்த லான்ஸ் கோப்ரல் சோமரத்னராஜபக்ச கடமையாற்றியுள்ளான். அந்த முகாமின் சிவில் அதிகாரியாக இருந்தவன் கப்டன் லலித்ஹேவா. அப் பகுதிகளில் காணப்பட்ட முகாம்களின் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக கப்டன் லலித்வீர, கப்டன் சிறிஜெவர்த்தனா ஆகியோர் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். சோமரத்னராஜபக்ச பொதுமக்களுடன் தொடர்புகளைப் பேணுவதற்காகவும் அவர்களுக்கு மத்தியில் புலிகளின் செயற்பாடுகள் எவ்வாறு காணப்படுகின்றன என்பவற்றை ஆராய்ந்து புலனாய்வு செய்வதற்காகவுமே அவனுக்கு கடமைகள் வழங்கப்பட்டிருந்தது.
அரியாலைப் பகுதியில் வசித்து வந்தவர்களின் பெயர் விபரங்களுக்கான பதிவுப் புத்தகத்திற்கு இவனே பொறுப்பாக காணப்பட்டான். அதே நேரம் இவன் அப்பகுதி எங்கும் சைக்கிளில் சென்று சம்பத் என்ற பெயரில்அப்பகுதி பொதுமக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி புலனாய்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்திருந்தான்.
நாங்கள் ஏற்கனவே புலனாய்வுத் தொடர் நான்கில் குறிப்பட்ட, சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் போது புலிளுடன் செல்லாது அரியாலையில் தங்கியிருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அரியாலை மேற்கு காந்திசனசமூகநிலையத்தை அண்டிய பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள் ஆவர்.அவர்களில் சிலர் EPRLF அமைப்பின் உறுப்பினர்களின் உறவினர்களும் அடங்குவர். குறிப்பாக யாழ் மாநகரசபை உறுப்பினராக 1998ம் ஆண்டு EPRLF அமைப்பில் போட்டியிட்டு வென்ற மங்களநேசன் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட்டவர்கள் ( பின்னர் மங்களநேசன் EPDP யுடன் சேர்ந்து இயங்கியமை குறிப்பிடத்தக்கது). அங்கு வாழ்ந்து வந்தவர்களில் சிலரின் துணையுடன் சம்பத் என்று அழைக்கப்பட்ட சோமரத்னராஜபக்ச உட்பட்டவர்கள் அரியாலை மக்களை தரம்பிரிக்கத் தொடங்கியிருந்தார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் யூலை மாத இறுதிப்பகுதியில் அரியாலையில் பாரிய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு வீடுகளிலிருந்த மிக வயதானவர்கள் உட்பட்ட அனைவரும் அரியாலை நெடுங்குளம் பகுதிக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்கள். அங்கு வைத்து பவள் கவசவாகனத்திற்குள் காணப்பட்ட 2 தலையாட்டிகளுக்கு முன் அவர்கள் நிறுத்தப்பட்டு 50 மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கபப்ட்டனர். அவர்கள் அனைவரையும் வீடியோவாக பதிவு செய்யபட்டு விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டார்கள்.
சுற்றிவளைப்பை செய்தவன் 512ம் படையணியின் கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான எல்வ்ப் வாகனத்தில் திரியும் லெப்டினன் கேணலே ஆவன். அவனின் கீழ் செயற்பட்ட மேயர் வீரக்கொடி, மேயர் குணசேகர ஆகியோரின் மேற்பார்வையிலேயே குறித்த பாரிய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. குறித்த சுற்றவளைப்பு நடைபெற்று மக்களை முகமூடிகள் பிரித்தெடுத்துக் கொண்டிருந்த போது குறித்த லெப்டினன் கேணல் அதே எல்வ் வாகனத்தில் அங்கு வந்ததை அங்கிருந்த அனைவரும் கண்டிருந்தார்கள். ஜே61, ஜே 91 தொடங்கி ஜே 96 வரையான 7 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் வாழ்ந்த கிட்டத்தட்ட 5000 ற்கும் மேற்பட்ட அரியாலை வாழ் மக்கள் குறித்த சுற்றிவளைப்பில் சிக்கித்தவித்திருந்தார்கள். குழந்தைகள் முதியவர்கள் அடங்கலாக அனைவரும் சுற்றிவளைக்கப்பட்டு நெடுங்குளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்தே களையெடுப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் முகமூடிகளின் துணையுடன் செய்யப்பட்டன.
சுற்றி வளைப்பின் பின் வீடியோ எடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களே ஒவ்வொரு நாளும் பிடிக்கப்பட்டு கடும் சித்திரவதைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டவர்களாவர். நடராஜா சகுந்தலா, நிர்மலாவும் அவளுடைய சித்தி ( இவர்கள் தொடர்பான விபரங்கள் முன்னைய பதிவுகளில் உள்ளன) போன்றவர்களின் பெயர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காணாமல் போனார் பட்டியலில் காணப்படவில்லை. ஆனால் அவர்கள் தொடர்பான விபரங்கள் புலிகளினால் தயாரிக்கப்பட்ட காணாமல் போனோர் ஆவணத்திலேயே காணப்படுகின்றது.
சகுந்தலா மற்றும் நிர்மலாவும் அவளது சித்தியும் கப்டன் சிறிஜெவர்த்தனாவின் கட்டுப்பாட்டில் இயங்கிய கொட்டுக்கிணற்றடி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு கொடூர பாலில்வல்லுறவின் பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம். குறித்த முகாமை லன்ஸ்கோப்ரல் சோமரத்னராஜபக்ச முகாம் ‘சி’ என நீதிமன்ற விசாரணைகளின் போது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தான்.
பல நாட்கள் படை அதிகாரிகளால் கொடூர கற்பழிப்பின் கொல்லப்பட்ட இளம் குடும்பப் பெண் சுமதி! கொல்லப்பட முன்னரும் பலரால் கணவன் முன் கற்பழிக்கப்பட்டாள்!!
லன்ஸ்கோப்ரல் சோமரத்னராஜபக்ச நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட போது

எ9 வீதியிலிருந்து நெடுங்குளம் செல்லும் வீதியில் 23 வயது இளம் குடும்பப் பெண் சுமதியும் அவளது கணவனான 26 வயது சுரேஸ்வரனும் 5 வயது மகள் தஜீபா மற்றும் 3 வயது மகன் பிரகாஸ் ஆகியோருடன் குடியிருந்தார்கள். சுமதியின் சொந்த இடம் ஊரெழு. தனது சொந்த மச்சானையே சுமதி திருமணம் முடித்திருந்தாள். சுமதி இயற்கையிலேயே அழகானவள். நீண்ட தலைமுடியும் வெள்ளை நிறமானவள். சுமதியின் அழமை அச்செழு பூனைசிட்டி அம்மன் கோவிலுக்கு சற்று தொலைவில் வசிக்கும் சுமதியின் தாயார் சொக்கலிங்கம் இரத்தினம் தற்போதும் அழுதழுது அவளை வர்ணிப்பார்.
சுமதியின் கணவன் அரியாலை முத்தையா பேக்கரியில் இரவு வேலை செய்வது வழமை. அத்துடன் தனது மனைவியின் தம்பியான 18 வயதான செல்வாவுடன் பகல் வேளைகளில் கடல் அட்டை பிடிப்பதுடன் தனது வீட்டிலேயே சைக்கிள் கடையும் நடாத்தி வந்துள்ளார். சுமதியின் தங்கையும் சுமதியின் தாயும் அடிக்கடி ஊரெழுவிலிருந்து சுமதியைப் பார்ப்பதற்காக அரியாலைக்கு வருவது வழமை. அவ்வாறான நேரங்களில் சைக்கிளில் வீதியுலா செல்லும் குறித்த பகுதிக்குப் பொறுப்பான லெப்டினன் கேணலின் கண்களில் சுமதி மற்றும் அவளது தங்கை சிக்கிவிட்டார்கள்.
ஜெயா பில்டிங்கில் செயற்பட்ட கப்டன் சிறிஜெவர்த்தனவிடம் குறித்த பெண்கள் தொடர்பான விபரங்களை அறிந்த பின் அவர்களை தமது காம இச்சைக்கு பயன்படுத்த ஆயத்தமானான் லெப்டினன் கேணல். அரியாலை அரஸ்கோ பில்டிங்கில் பணிபுரிந்த கப்டன் லலித்ஹோவகே மற்றும் சம்மாந்துறைப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட முஸ்லீமான அப்துல்நசார் என்ற பொலிஸ்காண்ஸ்டபில் மற்றும் ஹமித்சமரசிங்க என்ற கோப்ரல் ஆகியோருடன் அப்பகுதி மக்களுக்கு சம்பத் என்ற பெயரில் அறிமுகமான லான்ஸ்கோப்ரல் சோமரத்னராஜபக்ச ஆகிய 4 பேரும் சேர்ந்து சுமதியின் வீட்டுக்கு இரவு சென்றுள்ளார்கள். அங்கு சுமதி மற்றும் கணவர்கள் இல்லாததால் அருகில் இருந்த வீட்டுக்காரரான 40 வயதான குமாரவேலு குமாரகுலசிங்கம் என்பவரின் வீட்டில் விசாரணை செய்த போது சுமதி மற்றும் அவளது கணவனும் தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பதாக கூறினார் குமாரகுலசிங்கம். அங்கு சுமதியின் தங்கையையும் அவர்கள் விசாரித்துள்ளார்கள். அவள் அங்கு இல்லை என அறிந்து அதன் பின்னர் கணவன் சுரேஸ்வரனையும் மனைவி சுமதியையும் கதறக் கதற இழுத்துச் சென்றனர். சுமதி துாக்கி வைத்திருந்த 3 வயது மகனை இழுத்துப் பறித்து அவனது ஒற்றைக் கையைப் பிடித்து துாக்கி வீதியில் வீசிச் சென்றதாக சுமதியின் மூத்த மகளான தஜீபா ( தற்போது 35 வயது) ஊடகச் செயற்பாட்டாளர்களிடம் அண்மையில் அக் காலப்பகுதியில் தனது நினைவில் நின்ற சம்பவத்தை கூறியிருந்தார். சுமதி மற்றும் கணவனை கைது செய்யச் சென்றவர்கள் தமது இராணுவ அடையாளங்களை மறைத்து கறுப்பு உடையுடனேயே முகத்தை மறைத்துக் கொண்டே அவர்களைக் கடத்தியிருந்தனர்.
சுமதியின் மகள் தஜீபாவும் மகன் பிரகாசும்… புகைப்படம் 1999 ஆண்டு தஜீபாவுக்கு 7 வயதான போது எடுக்கப்பட்டது.

தற்போதும் தஜீபா மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகின்றார். அது தொடர்பான பதிவு கீழே தரப்பட்டுள்ளது.
சுரேஸ்வரனை தபால்கட்டைச் சந்தியில் உள்ள ஜெயாபில்டிங்கில் கை,கால்களைக் கட்டி போட்டுவிட்டு சுமதியை ‘சி’ முகாம் என்று கூறப்படும் கொட்டுக்கிணற்றடி முகாமி்ற்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவள் சில நாட்கள் தொடர்ச்சியாக படைஉயர் அதிகாரிகளின் காமப் பசிக்கு தீனியாக்கப்பட்டாள். படை உயரதிகாரிகளின் காமப்பசி தீர்க்கப்பட்ட பின்னர் சுமதியையும் கணவனையும் கொலை செ்ய்யுமாறு அவர்களை பிடித்தவர்களுக்கு உயரதிகாரிகளால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜெயா பில்டிங்

கொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவிலும் அதற்கு கிழ்ககுப் பகுதியில் புதிதாக தெரு போடப்பட்டுள்ள ‘சி’ முகாம் என அழைக்கப்பட்ட சித்திரவதை முகாம் அமைந்திருந்த குடியிருப்பு பகுதியும்

இதனையடுத்து ஜெயா பில்டிங்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுஸே்வரனையும் கொட்டுக்கிணற்றடி பகுதியில் வல்லுறவுக்குள்ளான நிலையில் கட்டி வைக்கப்பட்டிருந்த சுமதியையும், கண்டி வீதியிலிருந்து நல்லுார் நோக்கிச் செல்லும் செம்மணி வீதியின் வடக்குப் பக்கமாகச் செல்லும் வரம்பு போன்ற வீதியால் உப்பளப்பகுதிக்கு ஒரே நேரத்தில் கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு வைத்தே கப்டன் லலித்ஹோவகே சுமதியை முழு நிர்வாணமாக்கி அவளது கணவனின் முன் வல்லுறவுக்கு உள்ளாக்கினான். அதன் பின்னர் கப்டன் எஸ்.பெரேரா , கான்ஸ்டபிள் அப்துல்நசார், கோப்ரல் ஹமித்சமரசிங்க, லான்ஸ்கோப்ரல் சோமரத்னராஜபக்ச ஆகியோரும் அவளை அங்கு வைத்து வல்லுறவுக்குள்ளாக்கிய பின் லலித்ஹோவகேயும் ஏனைய 4 படையினரும் கணவன் மனைவி இருவரையும் மண்வெட்டிப் பிடியால் அடித்து கொலை செய்து அப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப்புலிகள் வெட்டி வைத்திருந்த பழைய ‘பங்கர்’ ஒன்றில் போட்டு மூடியுள்ளார்கள்.கிருசாந்தியும் இவ்வாறே படை உயரதிகாரிகளால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின் இவ்வாறு கொலை செய்ய உத்தரவு கொடுத்த பின் கடை நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களாலும் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தாள்.
கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலயத்தின் தற்போதய தோற்றம்

கிருசாந்தி விவகாரத்தில் மரணதண்டனை பெற்ற லான்ஸ்கோப்ரல் சோமரத்னராஜபக்ச நீதிமன்றில் தெரிவித்த கருத்துக்களின் படி அவனால் சுமதி மற்றும் அவளது கணவன் ஆகியோரைப் புதைத்த புதைகுழிகள் துல்லியமாக அடையாளம் காட்டப்பட்டன. அவன் அவ்வாறு துல்லியமாக அடையாளம் காட்டியதற்கு அப்பகுதியில் புலிகளால் பயன்படுத்தப்பட்ட பங்கருக்கு அருகில் தென்னை மரக்குற்றி ஒன்று நடப்பட்டிருந்தது. அவன் அந்த குற்றியை அடையாளமாக வைத்தே அங்கு மளமளவென சென்றதாக செம்மணிப் புதைகுழியைத் தோண்டுவதற்கு முற்பட்ட போது அங்கு நின்ற ஊடகவியலாளர்கள் கூறியிருந்தார்கள்.
சுமதியின் அம்மா – சொக்கலிங்கம் இரத்தினம் அவர்களின் 81 வயதான தற்போதைய தோற்றம்.

செம்மணியில் சுமதி மற்றும் கணவன் உட்பட்டவர்களையும் ஏனைய பொதுமக்களையும் கொடூர சித்திரவதையின் பின் கொன்று புதைத்தார்கள் என கிருசாந்தி கொலை வழக்கில் மரணதண்டனை பெற்ற 5 இராணுவத்தினரும் தமக்கு மேல கடமை புரிந்த 14 படை மேலதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடமும் நீதிமன்றத்திலும் வாக்குமூலம் கொடுத்திருந்தார்கள். சம்பவம் நடைபெற்று 4 ஆண்டுகள் நெருங்கிய நிலையில் யாழ்ப்பாணத்தில் செம்மணி வழக்குக்காக மேலதிக நீதவானாக கடமையாற்றிய இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கு விசாரணைகளின் போது செம்மணியில் குற்றம் புரிந்த ஒருவரைக் கூட கைது செய்யாமல் வாக்குமூலத்தை மட்டும் பெற்றுவிட்டு விடுவித்தார்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினர். ஏனெனில் கிருசாந்தி கொலைக் குற்றவாளிகள் கூறியது போல் தாம் விசாரித்த படை அதிகாரிகள் தவறு செய்யவில்லை என தமது விசாரணைகளில் தாம் அறிந்து கொண்டதாக குறித்த குற்றப்புலனாய்வாளர்கள் நீதிபதிக்கு கூறினார்கள். இதனால் கடும் கோபத்துக்குள்ளான நீதிபதி இளஞ்செழியன் ” ”நீங்கள் குறித்த சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் ஒப்படைக்காவிட்டால் நான் இந்த வழக்கை இத்துடன் முடித்துவிடுவேன். அதே நேரம் வழக்கை எதற்காக மூடினேன் என்ற ஆதாரத்தை பொதுவெளியில் பகிர்ந்து கொள்வேன்” என திறந்த நீதிமன்றில் பகிரங்கமாக அரச சட்டத்தரணியையும் பொலிசாரையும் எச்சரித்திருந்தார்.
நீதிமன்ற வரலாற்றில்முதல் முதலாக ஊடகவியலாளர்கள் நீதிமன்றத்தின் உள்ளே சென்று அமர்வுகளைப் புகைப்படம் எடுத்த சம்பவம் செம்மணி புதைகுழி விசாரணையின் போதுதான் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
செம்மணிப் புதைகுழி விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது

நீதிபதியின் எச்சரிக்கையை அடுத்து கிருசாந்தி கொலைக் குற்றவாளிகளான 5 படையினரும் குறிப்பிட்ட படை அதிகாரிகளில் 5 பேர் மற்றும் பொலிஸ்கான்ஸ்டபிலும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரில் 3 பேர் இராணுவ உடையிலும் பொலிஸ் கான்ஸ்டபில் சிவில் உடையிலும் நீதிமன்றில் இளஞ்செழியனுக்கு முன் நிற்கும் காட்சி

சக்கர நாற்காலியில் நீதிமன்றில் அமர்ந்திருப்பவன் யட்டகம கமகே அத்துல்ல

இவர்கள் மீது இளம் தம்பதிகளான சுரேஸ்வரன், சுமதி ஆகியோரை தாக்கிக் கொலை செய்தமை, இராசையா சதீஸ், மனோகரன் பாபு ஆகியோரைத் தாக்கிக் கொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக, 1வது சந்தேகநபராக கப்டன் ஹோவகே ஜெயசிங்க லலித்துசித குமாரையும், 2 வது சந்தேகநபராக யட்டகம கமகே அத்துல்ல உதயகுமாரவையும் 3வது சந்தேக நபராக பொலிஸ்கான்ஸ்டபிள் பி.ஏ.சமரவிக்ரமவையும் 4வது சந்தேகநபராக கப்டன் விஜயதாமகே டில்சான்சாஷிக பெரேராவையும் 5வது சந்தேகநபராக கப்டன் சஜிந்த விஜயசிறிவர்த்தனாவையும் 6வது சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் அப்துல்நாசாரையும் குறிப்பிட்டு அவர்களில் 5 பேரை நீதிமன்றில் ஆயர்படுதினார் அரச சட்டவாதி ஜசந்த கோத்தாகொட. அவர்களில் அப்துல் நாசார் தப்பி ஓடியதால் அவனைப் பிடிக்க முடியவில்லை எனவும் அவர் நீதிமன்றில் தெரிவி்த்திருந்தார்,
பெற்றோரை இழந்த நிலையில் தஜீபாவும் அவளது தம்பியும் அம்மம்மாவுடன் ஊரெழுப் பகுதியில் வாழ்ந்து வந்த குடிசை

தொடரும்….

