புதினங்களின் சங்கமம்

யாழில் கடும் சித்திரவதையின் பின் படுகொலை செய்யப்பட்டு ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட சதீஸ்குமாரும் பாபுவும்!! கதறிய தாயார்! வம்பனின் புலனாய்வுத் தொடர் 8

1996ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சுண்டுக்குளி மகளீர் கல்லுாரி மாணவி கிருசாந்தி படையினரால் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, கிருசாந்தி கொலைக்கு முன்னரும், கிருசாந்தி கொலைக்குப் பின்னரும் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக செம்மணி மற்றும் அரியாலைப் பகுதிகளில் நடந்த சம்பவங்கள் சிலவற்றை நாம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். அதன் 8 வது பகுதி இங்கு தரப்பட்டுள்ளது.

7ம்  பகுதியையும் கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்…..

செம்மணியில் கிருசாந்தியைக் கொடூரமாகக் கற்பழித்துக் கொன்றதற்கு காரணம் படையினர் பாவித்த பாலியல் லேகியமா? தேவராணி எங்கே? வம்பனின் புலனாய்வுத் தொடர் 7

கிருசாந்தியும் அவளது தாய், சகோதரன், அயலவன் ஆகியோரும் சடலமாக மீட்கப்பட்ட பின் ஓரிரு நாட்களில் யாழ்ப்பாண பாடசாலை மாணவர்கள் பஸ்கரிப்புப் போராட்டத்தில் குதித்தார்கள். கிருசாந்தி சடலமாக மீட்கப்பட்ட அடுத்த நாள், யாழ் சென்ஜோன்ஸ் கல்லுாரி மாணவர்களின் பெற்றோர்கள், தமது பி்ள்ளைகளான மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை, பாடசாலை பஸ்கரிப்பு போராட்டத்தை நடாத்தமுயன்றார்கள். அதற்காக, அடுத்தநாள் குறித்த பாடசாலையில் கற்கும் மாணவர்களின் பெற்றோர் சந்திப்பு ஒன்றை நடாத்த முடிவு செய்தனர். அந்தத் தகவலை செய்தியாக்கக் கோரி உதயன் பத்திரிகை அலுவலகத்துக்கு சென்றுள்ளார்கள். மாணவர்கள் பஸ்கரிப்பு செய்ய முற்படும் செய்தியை ஒரு போதும் பிரசுரிக்க முடியாது என்றும், வேண்டுமென்றால் விளம்பரமாக அதுவும் பெற்றோர் கூட்டம் என்று மட்டுமே பிரசுரிக்க முடியும் என்றும் உதயன் நிர்வாகத்தால் கூறப்பட்டது.

அதன் பின்னர் அங்கு உதயன் ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னரே உதயன் அந்தச் செய்தியை முதலாம் பக்கத்தில் பிரசுரிக்காது வேறு ஒரு பக்கத்தில் சிறிய பகுதி ஒன்றில் பிரசுரித்தாகவும் பெற்றோர்கள் அக் காலப்பகுதியில் குற்றம் சாட்டியிருந்தார்கள்.

குறித்த செய்தி மாணவர்களின் பெற்றோருக்கு சரியாகச் சென்றடையாத காரணத்தாலும், சென்ஜோன்ஸ் கல்லுாரி நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்காததன் காரணமாகவும், பஸ்கரிப்பு தொடர்பான தீர்மானங்கள் தீர்க்கமானதாக எடுக்க முடியாது போனது. அத்துடன் கிருசாந்தி மற்றும் பிரணவன் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக, ஏற்கனவே யாழ் குருநகர்ப் பகுதியிலிருந்து தென்மராட்சிப் பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்லாது  படையினரின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வந்த ஒரு சிலர், தாமும் மாணவர்களின் பெற்றோரே என கூறி அந்தப் பகுதிக்கு வந்து குறித்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னரே அங்கு குழப்பம் ஏற்படுத்த முற்பட்டதாகத் தெரியவருகின்றது.

ஆனாலும் யாழ் குடாநாட்டு மாணவர்கள் பாடசாலையை பஸ்கரிக்கத் தொடங்கினார்கள். சுமார் 2 வார காலம் வரை பஸ்கரிப்பு நடைபெற்றது. அதே நேரம் மாணவர்கள் சிலரால் யாழ் நகரப்பகுதியில் பஸ் ஒன்றும் எரிக்கப்பட்டது. குறித்த பஸ் எரிப்புக்கு காரணமானவர்கள் எனத் தெரிவித்து யாழ் நகரப்பகுதியைச் சேர்ந்த பிரபல இரு பாடசாலைகளின் 1996ம் ஆண்டு ஏ.எல் பிரிவு மாணவர்கள் 4 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

சி.வி.கே சிவஞானமும் ஜனகபெரேராவும் காணாமல் போனோரும்…….

தற்போதைய அரசியல்களத்தில் மட்டுமல்ல சாதாரண பொதுமகன் வரையில் சி.வி.கே சிவஞானத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சி.வி.கே சிவஞானம் அண்மையில் செம்மணியில் அவமானப்படுத்தப்பட்டார். அந்தச் சம்பவம் உலக தமிழர்கள் மத்தியில் சி.வி.கே சிவஞானத்தை ஏதோ ஒரு வகையில் அடையாளப்படுத்தியது.

வெடுக்குநாறி மலையில் சி.வி.கே ஏறிய காட்சி

புலிகள் உருவாகிய காலம் தொடங்கி புலிகளுக்கும் ஏனைய போராளிக் குழுக்களுக்கும் இடையில் ஏற்பட்ட சகோதரச் சண்டை நடந்து முடிந்த பின்னரும், சி.வி.கே சிவஞானம், ஏனைய அரச அதிகாரிகளை விட புலிகளுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்ட ஒருவர். அவர் ஒரு அரச அதிகாரியாக , யாழ் மாநகரசபை ஆணையாளராக  நீண்டகாலம் பணிபுரிந்து வந்தவர். அத்துடன் தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் ஏனைய அதிகாரிகளைப் போல் அதிகாரத்தைக் காட்டி அச்சுறுத்தும் செயற்பாடும் அவரிடம் இருப்பதில்லை. ”ஆடுகிற மாட்டை ஆடிக் கறப்பது போல்” வேலை வாங்கும் திறனும் அவருக்குள்ளது. தற்போதும் யாழ் மாநகரசபையில் சி.வி.கேயின் நிர்வாகத்திறனை பலரும் கதைப்பதுண்டு.

அதே நேரம் நல்லுார், கல்வியங்காடு போன்ற பிரதேசங்களில் பொதுவான நிர்வாக சபைகளில் சி.வி.கே மிக முக்கிய பதவிகள் வசித்து வந்தார். அதாவது சுடுகாடு தொடங்கி கோவில் நிர்வாகசபை வரை அவரது செல்வாக்கு காணப்படும்.

 எந்த விடயத்தையும் மிக நுட்பமாக ஊகித்து அறியும் திறன் அவரிடம் உள்ளது. சி.வி.கே சிவஞானம் தனக்கான மரியாதையை உரிய முறையில் எதிர்பார்க்கும் ஒருவர். அவரது ஆளுகைக்கு உட்பட்ட  பிரதேசங்களில் அல்லது விடயங்களில் அவரைப் பேயன் விசரன் என நினைத்து யாராவது செயற்பட முற்பட்டால் ‘அச்சிவனுறைரதம் அச்சது பொடிசெய்த …… அதிதீரா’ என்பதைப் போல  குறித்த செயற்பாடுகளைச் செய்ய முற்படுபவர்களின் நடவடிக்கைகளை ( அது பொதுமக்களுக்கு நன்மை தரும் செயற்பாடாக இருந்தாலும் கூட) தடுத்து நிறுத்துவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு அவற்றை நிறுத்தியும் விடுவார்.

எந்த ஒரு ஊழலும் செய்யாமல் வடக்கு மாகாணசபையில் ஊழல் பட்டம் சூட்டப்பட்டு வெளியேறிய வடக்கு மாகாண விவசாய அமைச்சராக செயற்பட்ட ஐங்கரநேசன் தொடங்கி பதவியில் இருக்கும் வரை சி.வி.கே அவர்களினால் ‘சிப்பிலி ஆட்டப்பட்ட’ முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் வரை பலர் அச்சிவ னுறைரதம் அச்சது பொடிசெய்த …… அதிதீரா என்ற நிலைக்கு அவரால்  ஆட்கொள்ளப்பட்டவர்கள்தான்.  சிவஞானத்தை பேயன் விசரன் என நினைத்தமையே அதற்கு காரணம்…..

அதே நேரம் சிவஞானத்துடன் தொடர்புள்ள அல்லது சிவஞானத்திற்கு பரீட்சார்த்தமுள்ள எந்ந விடயத்தையும் செயற்படுத்துவதற்கு யாராவது அவரிடம் ஆலோசனை கேட்டு  செயற்பட்டால் அவர்களுக்கு தனது அதி உச்ச ஆதரவையும் ஊக்குவிப்பையும் கொடுப்பதிலும் வல்லவர்.

1980ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து தமிழர்களின் போராட்டங்களுடன் நெருங்கிச் செயற்பட்ட சிவஞானத்தை 1988ம் ஆண்டு இந்திய இராணுவகாலப்பகுதியில் யாழ் மாநகரசபை அலுவலகத்திற்குள் வைத்து  இனந்தெரியாத நபர்கள் சுட்டுக் கொலை செய்ய முற்பட்டிருந்ததும், அவர் மயிரிழையில் உயிர்தப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 1990 ஆண்டு காலப்பகுதிக்குப் பின்னர் புலிகளின் பிடியிலிருந்து தனது மகனை மிக நுட்பமாக வெளியேற்றி வெளிநாட்டுக்கு அனுப்புவதில் வெற்றியும் கண்டார்.  புலிகளின் யாழ் மாவட்டத் தளபதியாகவிருந்த மாத்தையாவுடன் நெருங்கிச் செயற்பட்டதால், 1993ம் ஆண்டு காலப்பகுதிக்கு பின் மாத்தையா புலிகளினால் கைது செய்யபட்ட போது சிவஞானமும் புலிகளால் கைது செய்யப்பட்டு பங்கருக்குள் வைக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் விசாரணைகளின் போது அவர் மீது குற்றம் கண்டு பிடிக்க முடியாத காரணத்தாலும் புலித்தலைவர் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை காரணமாகவும் அவர் சில காலங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டதாகவும் புலிகள் தரப்புத் தகவல்கள் தெரிவித்திருந்தன.

1989ம் ஆண்டு காலப்பகுதிக்குப் பின் இந்திய இராணுவம் வெளியேறிய நேரத்தில் திலீபனுக்கு நினைவு துாபி அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் சி.வி.கே சிவஞானம் என்பது குறிப்பிடத்தக்கது. 

கூட்டுறவுச் சங்க சீனி ஊழல், அரசசார்பற்ற நிறுவனத்தில் ஊழல்,  அந்த ஊழல் இந்த ஊழல் என அவர் மீது பலரும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் சுமத்த்திருந்ததும் இவ்வாறான செயற்பாடுகளால் அவருக்கு ”சிவிக்கத் தெரிஞ்ச சிவஞானம்” என்று பெயர் சூட்டியதும் குறிப்பிடத்தக்கது. சி.வி.கே சிவஞானம் தொடர்பான இன்னுமொரு பக்கத்தை அறிவதற்கு பலரும் ஆசைப்பட்டால் நல்லுார் வடக்கு வாலையம்மன் கோவிலில் ருத்திரதாண்டவம் ஆடிவரும் முன்வீட்டு அம்மாவிடம் போய் கேட்டால் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

சி.வி.கேயைப் பற்றி ரொம்ப விபரித்துவிட்டோம் போல் தோன்றுகின்றது… விடயத்துக்கு வருவோம்…. 

1996ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து யாழில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பொதுமக்களுக்கு படையினர் கடும் தொல்லைகள் கொடுக்க தொடங்கினர். அந் நேரத்தில் படைக்கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களுக்கும் படையினருக்குமான தொடர்பாளர்களாக எந்த ஒரு அரச, தனியார் அமைப்புக்களோ அல்லது குழுக்களோ இருக்கவில்லை. யாழில் இருந்த ஒரே ஒரு பத்திரிகையான உதயன் பத்திரிகையும் பயந்து பயந்தே செய்திகளை தணிக்கை செய்து வெளியிட்டு வந்தது. இந் நிலையிலேயே சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான மக்கள் குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இக்குழு ஆரம்பிக்கப்பட்டதை வலிகாமம் பகுதியில் செயற்பட்ட இளம் புலி உறுப்பினர்கள் அறியவில்லை. இது தொடர்பாக போன தொடரில் விபரமாகத் தெரிவித்திருந்தோம்.

இந்தக் குழுவின் தலைவராக சி.வி.கே சிவஞானமும் உபதலைவர்களாக  குமரேசனும், R.அருமைநாயகமும் செயலாளராக செல்வராஜா என்ற ஒரு கிறிஸ்தவ பாதிரியாரும் மற்றும் பல உறுப்பினர்களும் செயற்பட்டிருந்தனர். குறித்த குழு யாழ்ப்பாணம் ஆயர் மற்றும் நல்லை ஆதினம் போன்றவர்களின் ஆலோசனையில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவினரே  யாழ் 51வது கட்டளைத் தளபதி ஜெனகபெரேராவை சந்தித்தவர்கள் ஆவர். அவர்கள் சந்தித்த பின் புலிகள் என்ன செய்தார்கள் என்பதை முன்னைய பதிவில் தந்திருந்தோம். நல்லை ஆதீனம் தகவல்களைத் தெரிவிக்காததால் சி.வி.கே சிவஞானத்தை சந்தித்து விடங்களை அறிந்து, அவரை எச்சரிப்பதற்கு புலிகளின் உள்ளூர் உறுப்பினர்கள் ஆயத்தமானார்கள். அதற்கு முன்னர் குறித்த குழுவில் இருந்த இன்னொருவரைப் புலிகள் சந்தித்திருந்தார்கள் ( பெயர் குறிப்பிட முடியாது). அவர் ஜனகபெரேராவிடம் தாங்கள் தெரிவித்த கருத்துக்களையும் ஜெனகபெரேரா கூறிய கருத்துக்களையும் ஒன்றும் விடாது கூறினார். அத்துடன் சி.வி.கே அவர்கள் ஜெனகபெரேரா ”காணாமல் போன இளைஞர் யுவதிகள் புலிகளுடன் சேர்ந்திருக்காலம்” என்று கூறிய கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காது மௌனம் சாதித்ததாகவும் ஆனால் காணாமல் போன சில பெண்கள் தொடர்பாகவும் பெண்களை படையினர் கௌரவமாக சோதனை செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் ஜனகபெரேரவுடன் கதைத்தாகவும் கூறினார்.

குறித்த குழு உறுப்பினரை புலிகள் சந்தித்த பின் சில நாட்களில் சட்டநாதர் வீதியின் முன் பக்க வீதியில் அமைந்திருந்த சி.வி.கே வீட்டுக்கு புலிகளின் இளம் உறுப்பினர்கள் இருவர் சைக்கிளில் சென்றனர்.  பல தடவைகள் பெல் அடித்தும் சி.வி.கே வெளியே வரவில்லை. அவரது மனைவி மெதுவாக வெளியே வந்து ”அவர் இல்லை” என கூறியதுடன் அங்கு நின்ற புலி உறுப்பினர்களுடன் துார நின்றே மிகுந்த அவதானதுடன் கதைத்திருந்தார்.

சி.வி.கே ‘அலேட்’ ஆகிவிட்டார் என புலிகளுக்கு விளங்கிவிட்டது. புலிகளின் மேலிட உத்தரவு இல்லாது புலிகள் யாரையும் தண்டிப்பதில்லை. சி.வி.கேயின் செயற்பாட்டுக்கு புலிகளின் மேலிட உத்தரவு அவ்வாறு வரவில்லை. ஆனால் அவரை எச்சரிக்குமாறு மேலிடம் புலிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்ததாக ஊடகத்தரப்பினரிடம் அக் காலப்பகுதியில் புலிகள் தெரிவித்திருந்தார்கள்.

சி.வி.கேயை சந்திக்க முடியாதுள்ளது தொடர்பாகவும் சி.வி.கே வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளதாகவும் ஏற்கனவே சந்தித்த குழு உறுப்பினரிடம் புலிகள் தெரிவித்த போது… அது தொடர்பாக தான் சி.வி.கேயிடம் கேட்ட போது ”அடேயப்பா உவங்கள் சின்னப் பெடியல்..என்னைப் பற்றி பிரபாகரனுக்கு தெரியும்…உவங்களுக்கு என்ன தெரியும்…. விசயம் தெரியாமல் சுட்டுப் போட்டுப் போடுவாங்கள்… ” என தனக்கு கூறியதாக குறித்த குழு உறுப்பினர் புலிகளுக்குத் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் சி.வி.கே சிவஞானம் அந்த குழுவின் தலைமைப்பதிவியிருந்து ஒரு சில நாட்களில் ராஜினமா செய்து விலகியமை குறிப்பிடத்தக்கது. பொதுவானவர்களின் பார்வையில் சி.வி.கே குறித்த குழுவின் தலைவராக செயற்பட்டு பொதுமக்களுக்கு நன்மை செய்ய முற்பட்டவர் என்று கருதினாலும் புலிகளின் பார்வையில், சி.வி.கே குறித்த குழுவில் செயற்பட்டு புலிகளுக்கு சங்கடங்களை உருவாக்குகின்றார் என்பதாகவே கருதப்பட்டது.

யாழில் படையினரால் கைது செய்யப்பட்ட ஸ்ரான்லிக் கல்லுாரி மாணவன் பார்த்தீபன் எங்கே?

யாழ் கனகரத்தினம் மகாவித்தியால மாணவனான செல்வராசா பார்த்தீபன் 1996.08.09 அன்று புங்கங்குளம் சந்திக்கு சற்றுத் தொலைவில் புளியடிச்சந்தி என கூறப்படும் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டான். கனகரத்தினம் மகாவித்தியாலயத்தில் 1995ம் ஆண்டு வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று ஏ.எல் பரீட்சை எழுதிய பின் பல்கலைக்கழகத்திற்கு முதலாவது விண்ணப்பபடிவம் அனுப்பிவிட்டு காத்திருந்த மாணவனே காணாமல் போனான். குறித்த மாணவன் தனது நண்பர்களுடன் விளையாடிவிட்டு தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டான். அவன் படையினரால் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டிருப்பதை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சிவதாசன் என்பவர் உடனடியாக அவனது தாயிடம் சென்று கூறியுள்ளார். ஆனால் அங்கு தாய் செல்வதற்கிடையில் அவனை படையினர் முகாமினுள் கொண்டு சென்று விட்டார்கள். அதன் பின்னர் தாய் இன்பராணி மற்றும் உறவுகள் குறித்த முகாம் மற்றும் ஏனைய முகாம்களுக்கும் அலைந்து திரிந்து களைத்து ஓய்ந்து போய் உள்ளார்கள்.

ஸ்ரான்லிக் கல்லுாரி மாணவன் பார்த்தீபன்

அரியாலை ரவி கராஜில் வேலை செய்த சதிஸ்குமாருக்கும் பாபுவுக்கும் நடந்த கதி…

அரியாலைப் பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் இடம் ஒன்றில் மெக்கானிக்காக பணியாற்றி வந்த மீசாலை வேம்பிராய்ப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளம் குடும்பஸ்தரான இராசையா சதீஸ்குமார் என்பவரும் 23 வயதான மகேந்திரன் பாபு என்பவரும் 1996.08.19 ம் திகதி வேலை முடித்து வரும் வழியில்  காணாமல் போனார்கள்.

இந் நிலையில் கிருசாந்தி கொலைக் குற்றவாளியான லான்ஸ்கோப்ரல் சோமரட்ண ராஜபக்ச செம்மணியில் புதை குழி இருப்பதாகக் கூறி அடையாளம் காட்டிய புதைகுழிகளில் ஒன்றில் இருவரது சடலங்களும் எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டன. குறித்த எலும்புக்கூடுகளில் இராசையா சதீஸ்குமார் என்பவரின் எலும்புக்கூட்டை அவரது உள்ளாடை மற்றும் ரீசேட் ஆகியவற்றை அடையாளமாக வைத்து அவரது மனைவி தனது கணவனுடையது என உறுதிப்படுத்தினார். அத்துடன் குறித்த சடலத்தின் பற்களில் வெற்றிலைக் கறை காணப்பட்டதை காட்டி சதீஸ் வேலை செய்த கராஜ் உரிமையாளரான சுப்பையா ரவி என்பவரும் அடையாளம் காட்டினார்.

மகேந்திரன் பாபு என்பவரின் எலும்புக்கூட்டையும் ரவியே அடையளம் காட்டினார். வேலைத்தளத்திலிருந்து கடைசியாக சதீஸ் வெளியேறிச் செல்லும் போது அணிந்திருந்த பச்சை நிற நீளக்காற்சட்டை மற்றும் ரீசேட், கழுத்தில் அணிந்திருந்த வெள்ளியிலான பென்ரன் போன்றவற்றை வைத்து அது பாபுடையது என்பதை உறுதிப்படுத்தினார் ரவி.

மீசாலையைச் சேர்ந்த சதீஸ்குமார் அரியாலை கராஜில் வேலை செய்வதற்காக கல்வியங்காட்டில் வீடு ஒன்றை வாடகை்ககு எடுத்து தங்கியிருந்தார். அக் காலப்பகுதியில் மீசாலை வேம்பிராய் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வந்து செல்வது பாதுகாப்புக் கெடுபிடிகளுடன் கூடிய மிகவும் சிரமமான காரியமாக இருந்தது.

செம்மணிப் பகுதிக்கு புதை குழி தோண்டும் போது சதீஸ்குமாரின் மனைவி தனது கைக்குழந்தையுடன் அந்த இடத்திற்கு வந்திருந்தார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாது அவர் தனது குழந்தையுடன் அங்கு நின்றதாகவும் அதனை அவதானித்த நீதிபதி இளஞ்செழியன் அவரை  நிழலான பகுதியில் சென்று நிற்குமாறு கூறிய போதும் அவர் கடு்ம் பதற்றத்தில் அங்கு நின்ற போது தனது கணவனின் ஆடைகளுடன் கூடிய எலும்புக்கூடு மீட்கப்பட்டுக் கொண்டிருந்த போது அவர் அங்கு கத்திக் குளறியது அப்பகுதியை மிகுந்த சோகத்துக்கு உள்ளாக்கியதாக அங்கு அப்போது நின்றிருந்த ஊடகவியலாளர்கள் அந் நேரம் தமது ஊடகங்களுக்கு அறிக்கையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு அடையாளம் காண்பதற்காக யாழ் பொலி்ஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட போது சதீஸ்குமாரின் தாயார் தலையில் கை வைத்தவாறு கதறிய புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது. 

May be an image of 2 people

மகேந்திரன் பாபு

மிகவும் வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த 23 வயதான மகேந்திரன் பாபு கச்சேரி நல்லுார் வீதியைச் சொந்த இடமாகக் கொண்டவர். 5 பெண் பிள்ளைகளுக்கு ஒரே ஒரு ஆண்பிள்ளையாக இருந்தவர். நான்கு சகோதரிகள் திருமணம் செய்த நிலையில் தனது தங்கை மற்றும் நோயாளியான தந்தை மற்றும் தாயை தனது உழைப்பிலேயே பராமரித்து வந்தார் பாபு. பாபுவுக்கு அந்த நேரத்தில் நாள் ஒன்றுக்கு 200 ரூபா சம்பளம் கொடுத்து வந்தார் கராஜ் முதலாளியான ரவி.

பாபு காணாமல் போன நாள் தொடங்கி அவனது தாயார் சரஸ்வதி செல்லாத இடமே இல்லை எனலாம். யாழ் ஆயர் தொடங்கி நல்லுார் ஐயர் வரையும் தனது பிள்ளை திரும்பி வருவானா என்று கேட்பதற்காக அலைந்து திரிந்தார். சாத்திரங்கள் பார்ப்பதற்காக அவர் செல்லாத ஜோதிடர்களே இல்லை என்றார்கள் அவரது மகள்கள். தனது மகனைக் காணவில்லை என்ற சோகத்தில் சாப்பாடு மறந்து நித்திரை மறந்து தமது தாய் மனப்பிறழ்வுக்கு வருமளவுக்கு மிகவும் வேதனைப்பட்டதாக பாபுவின் சகோதரிகள் கூறினர். தனது மகன் இருக்கின்றானா இல்லையா என்பதைக் கூட அறியாத நிலையில் மகனின் நினைவாகவே 1997 மே 31ம் திகதி தாய் சரஸ்வதி நோய்வாய்ப்பட்டு மரணமானார்.

சரஸ்வதியி்ன் இறப்புக்குப் பின் 62 வயதான பாபுவின் தந்தை எஸ் மகேந்திரன் பாபுவைத் தேடுவதை தொடர்ந்தார். பாபு காணாமல் போய் 3 வருடங்கள் ஆன நிலையில் 1999ம் ஆண்டு நடுப்பகுதியில் பாபுவின் எலும்புக்கூடு மீட்கப்பட்டு யாழ் பொலிஸ் நிலையத்தில் அவன் அணிந்திருந்த ஆடை அணிகலன்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. “பொலிஸ் நிலையத்தில் செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் உள்ளன… போய் பார்த்து வாருங்கள்” என பாபுவின் கராஜ் முதலாளியான ரவி, மகேந்திரனிடம் பாபு இறந்துவிட்டான் எனக் கூறாது அங்கு செல்லுமாறு கூறிய போது, மகேந்திரனும் கடைசிச் சகோதரி வனிதாவும் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்கள். ”எனது மகன் உயிருடன் பலாலியில் இருக்கின்றான். அவன் சாகவில்லை. நான் ஏன் போகப் போகின்றேன்” என மகேந்திரனும் ”அண்ணா உயிருடன் இருப்பதாக அம்மா சாத்திரம் கேட்ட போது சாத்திரி கூறினார். அண்ணா சாகவில்லை” என சகோதரி வனிதாவும் ரவியிடம் கூறியுள்ளார்கள். இருப்பினும் ரவியும் அயலவர்களும் அவர்களை சென்று பார்த்து வருமாறு கூறிய போது அவர்கள் தமது உறவு உயிருடன் இருப்பதாக எண்ணியே பொலிஸ் நிலையம் சென்றார்கள்.

அங்கு சென்ற அவர்களை பொலிஸ் அதிகாரிகள் எலும்புக்கூடுகள் காணப்பட்ட இடத்திற்கு கொண்டு சென்று காட்டிய போது ”தனது அண்ணன் அணிந்திருந்த வெள்ளிப் பென்டன் மற்றும் ரீசேட், ஜீன்ஸ் ஆகியவற்றை அடையாளம் கண்ட சகோதரி வனிதா கதறத் தொடங்கினார். அத்துடன் தந்தையும் குக்குரல் இட்டுக் கத்தத் தொடங்கவே ஏனைய எலும்புக்கூடுகள் தங்களுடைய பிள்ளையுடையதாக இருக்குமா என்ற சந்தேகத்தில் அப்பகுதியில் நின்ற காணாமல் போனவர்களின் உறவுகளும் சேர்ந்து ஒப்பாரி வைக்கத் தொடங்கினார்கள். அப்பகுதி பெரும் சோகத்தில் ஆழ்ந்தது…..

தொடரும்….