யாழில் படையினரால் கொடூரமாக வல்லுறவுக்குள்ளான சகுந்தலா! வம்பனின் புலனாய்வுத் தொடர் 6
1996ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சுண்டுக்குளி மகளீர் கல்லுாரி மாணவி கிருசாந்தி படையினரால் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, கிருசாந்தி கொலைக்கு முன்னரும், கிருசாந்தி கொலைக்குப் பின்னரும் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக செம்மணி மற்றும் அரியாலைப் பகுதிகளில் நடந்த சம்பவங்கள் சிலவற்றை நாம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். அதன் 6 வது பகுதி இங்கு தரப்பட்டுள்ளது.
5ம் பகுதியையும் கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்…..
கிருசாந்திக்கு செம்மணியில் நடந்தது என்ன?
12.30 மணிக்கு வீட்டுக்கு வர வேண்டிய கிருசாந்தி வந்து சேரவில்லை என தேடத் தொடங்கிய கிருசாந்தியின் தாயார் கைதடி – மானிப்பாய் வீதியில் உள்ள தனது வீட்டிலிருந்து அருகே உள்ள கைதடிச் சந்திக்கு நடந்து வந்து சந்தியில் நின்று தேடத் தொடங்கிய போது அவ்வழியால் வந்த ஒருவர் கிருசாந்தியை செம்மணி சந்தியில் படையினர் மறித்து வைத்திருப்பதாக கூறியுள்ளார். உடனடியாக ரியூசனால் வந்து கொண்டிருந்த மகனை மட்டும் அழைத்துக் கொண்டு செம்மணிப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
2.30 மணி அளவில் செம்மணி முகாம் மற்றும் ஞானந்தியின் மரணச்சடங்கு நடந்த பகுதிக்கும் வந்து தேடியதாகவும் அதன் பின்னர் மீண்டும் செம்மணி சோதனைச்சாவடியில் நின்று படையினருடன் தர்க்கம் புரிந்த போதும் படையினர் தாம் கிருசாந்தியைக் கைது செய்யவில்லை என கூறியதாகவும் தெரியவருகின்றது. இதையடுத்து மீண்டும் கைதடிச் சந்திக்கு திரும்பவும் சென்ற போது அங்கு நின்ற மற்றொருவரும் கிருசாந்தியை படையினர் செம்மணியில் மறித்து வைத்திருப்பதைக் கண்டதாகக் கூறியதால் அதன் பின்னர் மீண்டும் தனது மகனுடன் செம்மணிக்குச் சென்றதாக கிருசாந்தியின் அயலவர்களில் சிலர் அந் நேரம் தெரிவித்திருந்தார்கள். செம்மணி சோதனைச்சாவடியில் கிருசாந்தியி்ன் தாயார் மாலை 4.30 மணியளவில் பெரும் குரலில் படையினருடன் சத்தமிட்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தாக அப்பகுதியால் சென்றவர்கள் கைதடிச் சந்தியில் நின்றவர்களுக்கு கூறியிருந்தார்கள். கிருசாந்தியின் சைக்கிள் படைமுகாமுக்குள் நிற்கின்றது என்பதை உள்ளே திடீரென நுழைந்து பார்த்த தாயார் அதன் பின்னர் அங்கு நின்ற படையினர் சிலர் மறிக்க மறிக்க , முகாமுக்குள் சென்று தேடுதல் நடாத்திய பின்னரே வீதியில் நின்று கத்திக் கொண்டிருந்ததாகவும் ”சைக்கிள் நிற்கின்றது. மகளைக் காணாவில்லை” என புலம்பிக் கொண்டிருந்தாகவும் அப்பகுதியால் சென்றவர்கள் கைதடிச் சந்தியில் தெரிவித்துள்ளார்கள்.
இவற்றை எலலாம் கேட்டுக் கொண்டிருந்துள்ளார் கிருசாந்தி வீட்டின் அயலவரான சிதம்பரம் கிருபாமூர்த்தி. இவர் கைதடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் உதவியாளராக கடமையாற்றுபவர். கிருசாந்தியைத் தேடி தாயாரும் தம்பியும் சென்று 5 மணியாகியும் திரும்பி வராததால் அவர்களைத் தேடி கிருபாமூர்த்தியும் செம்மணி நோக்கித் தனியாகச் சென்றுள்ளார்.
கிருபாமூர்த்தி

கிருசாந்தியின் சைக்கிள் தம்மிடம் இருப்பதை கண்டுபிடித்த இராசம்மாவையும் பிரணவனையும் படையினர் முகாமுக்குள் தந்திரமாக அழைத்துச் சென்று அவர்களை பிடித்து கை, கால், வாயைக் கட்டி காவலரணி பின் பகுதியில் வைத்திருந்துள்ளனர். இந் நிலையில் மாலை 5 மணியளவில் கிருபாமூர்த்தியும் அங்கு சென்று விசாரித்ததால் அவரையும் உள்ளே அழைத்து கட்டி வைத்திருந்துள்ளனர்.
இவ்வளவு சம்பவம் நடைபெற்ற போதும் கிருசாந்தி அந்த முகாமில் இல்லை என்பதே உண்மை. ஏனெனில் கிருசாந்தி 2.30 மணியளவில் கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் கோவிலுக்கு கிழக்குப் பக்கமாக காணப்பட்ட படையினிரின் தற்காலிக முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டாள். அன்று சனிக்கிழமை மாலையிலிருந்து அங்கு வைத்து அவள் அரியாலை, கொழும்புத்துறை, பாசையூர், நல்லுார் கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு பொறுப்பாக அந்நேரம் செயற்பட்ட இராணுவ லெப்டினன் கேணல் உட்பட்டவர்களால் வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளாள். அன்று இரவு செம்மணி காவலரணின் பின் பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்த இராசம்மாவும் பிரணவனும் கிருபாமூர்த்தியும் ஆடைகள் களையப்பட்டு கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட பின்னர் பிரணவனும் கிருபாமூர்த்தியும் ஒரு குழியிலும் இராசம்மா மற்றொரு குழியிலும் புதைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் கிருசாந்தி அன்று கொல்லப்படவில்லை. அவள் ஞாயிறு இரவு அல்லது திங்கள் இரவே செம்மணிப் பகுதிக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டு அங்கு நின்ற தற்போது துாக்குத்தண்டனை பெற்று சிறையில் இ்ருக்கும் படையினராலும் பொலிசாராலும் மீண்டும் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பின் கொல்லப்பட்டிருக்கலாம்.
ஏனெனில் படையினரின் வாகனத்தால் அடித்துக் கொல்லப்பட்ட கிருசாந்தியின் நண்பியான ஞானந்தியின் சடலம் ஞாயிறு பகலே சித்துப்பாத்தி மயானத்தில் எரிக்கப்பட்டது. அன்றைய தினம் குறித்த கொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவில் பகுதி முகாமில் படையினர் பலர் காணப்பட்டதுடன் அங்கு லெப்டினன் கேணல் பயன்படுத்தும் எல்வ் ரக ஜீப் வண்டியும் காணப்பட்டதாக மரணச்சடங்கிற்கு சென்ற பலர் தெரிவித்திருந்தார்கள். அந் நேரம் அரியாலைப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அந்த லெப்டிணன் கேணலின் செயற்பாடும் தெரியும். அவனும் அவனுக்கு கீழ் பணியாற்றிய கொழும்புத்துறை, புங்கங்குளம் அரஸ்கோ கட்டடத்தில் செயற்பட்ட இராணுவ முகாம் பொறுப்பதிகாரிகளும் கொடூரமான செயற்பாடுடையவர்கள் என்பது அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு தெரிந்திருந்தது. (அரஸ்கோ கட்டடத்திற்கு முன்னாலேயு ஞானந்தியின் வீடும் உள்ளது)
கிருசாந்தி மற்றும் தாயார், தம்பி, அயலவரான கிருபாமூர்த்தி காணாமல் போனதால் கைதடி பரபரப்பானது. இராசம்மாவின் உறவினராக இருந்த அப்போதைய யாழ் பிரதம தபாலதிபர் கோடீஸ்வரன் ( டக்ளஸ்தேவானந்தாவின் நெருங்கிய சகாவான ருசாங்கனின அப்பா), கிருபாமூர்த்தியின் மனைவி உட்பட மேலும் பலர் இவர்களை பல இடங்களிலும் தேடத் தொடங்கினர்.
சுப்பிரமணியம் கோடீஸ்வரன் (தற்போது அமரர்)

கோடீஸ்வரன் புங்கங்குளம் இராணுவ முகாம் மற்றும் பல இராணுவ முகாம்களிலும் சென்று விசாரித்துள்ளார். அத்துடன் இராணுவ மேலதிகாரிகளிடமும் முறையிட்டதுடன் பொலிசாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டது. அதே நேரம் கிருசாந்தியின் தாய் இராசம்மாவின் அ்ண்ணான ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் நவரட்ணம் கொழும்பில் வசித்துவந்தார். அவருடனேயே கிருசாந்தியின் அக்கா பிரசாந்தி தங்கி கற்று வந்தார். இராசம்மாவின் அண்ணனான நவரட்ணம் தமிழர்விடுதலைக்கூட்டணியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோசப்பரராசசிங்கத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர். தனது தங்கை மற்றும் குடும்பத்தினர் காணாமல் போன விடயம் தொடர்பாக அவருக்குத் தெரியப்படுத்திய பின் பாராளுமன்றத்தில் யோசப்பரராஜசிங்கம் கர்ச்சிக்கத் தொடங்கினார்.
இதனையடுத்தே புலனாய்வு பொலிசாரிடம் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் கிருசாந்தி தொடர்பாக எந்தவித முன்னேற்றமும் இன்றி 3 வாரங்கள் கழிந்தன. 1996 ஒக்ரோபர் மாத தொடக்கத்தில் கைதடியிலிருந்து யாழ் இந்துக்கல்லுாரி மற்றும் யாழ் மத்திய கல்லுாரிக்கு சைக்கிளில் சென்று வந்த நாகேந்திரன் சசிதரன் (தற்போது வெளிநாடு), உருத்திரசிங்கம் தவபாலன் ( யாழ் பல்கலைக்கழக உத்தியோகத்தர்) ஆகியோர் குறித்த வழியால் பாடசாலை செல்லும் போது, அரியாலை தபால்கட்டை சந்திக்குச் சற்று தொலைவில் காணப்பட்ட சைக்கிள் கடை ஒன்றில் தொங்க விடப்பட்டிருந்த சைக்கிள் செயின் கவர் ஒன்றை கண்டுள்ளனர். அது கிருசாந்தியின் தம்பி பயன்படுத்தும் சைக்களின் பாகம் என்பதை அதில் ஒட்டப்பட்டிருந்த ஸ்ரிக்கரை வைத்து அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக இது தொடர்பாக சசிதரனின் மாமனாரான பிரதமதபாலதிபர் கோடீஸ்வரனுக்கு தெரியப்படுத்தி கோடீஸ்வரன் உடனடியாக கிருசாந்தி காணாமல் போன வழக்கை விசாரணை செய்து வந்த புலனாய்வுப் பொலிசாருக்கு தெரியப்படுத்திய பின்னரே கிருசாந்தி மற்றும் அவளது குடும்பத்தினருக்கு நடந்த கொடூரம் வெளிவந்தது.
ஒக்டோபர் முதல் வாரத்தில் கொழும்பிலிருந்து வந்த புலனாய்வுப் பொலிசாரின் விசாரணைகளின் போது குறித்த பகுதியில் அந்நேரத்தில் செயற்பட்டு வந்த இராணுவத்தினரும் பொலிசாரும் வெவ்வேறு பிரதேசங்களுக்கு இடமாற்றப்பட்டிருந்ததை அறிந்து அவர்களை தேடிக் கண்டுபிடித்து தமது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து கிருசாந்தி, தாய், தம்பி, அயலவன் புதைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டு பிடித்து ஒக்டோபர் 22ம் திகதி புதைகுழி தோண்டப்பட்டது.
குறித்த புதைகுழிகள் அப்போதைய யாழ் மாவட்ட நீதிபதி என்.அருள்சாகரன் முன்னிலையில் யாழ் போதனாவைத்தியசாலை ஊழியர்களைக் கொண்டே தோண்டப்பட்டது. பிரணவன் மற்றும் கிருபாமூர்த்தி ஆகியோரின் சடலங்கள் நிர்வாணமாக ஒன்றாக ஒரு புதைகுழியிலும் இராசம்மா மற்றும் கிருசாந்தியின் சடலங்கள் தனித்தனியான புதைகுழிகளிலுமிருந்து மீட்கப்பட்டன. இவர்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் செருப்புக்கள் போன்றவை மற்றொரு புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டது.
கிருசாந்தி செம்மணியில் மறிக்கப்பட்டமை ஏற்கனவே படைப்புலனாய்வாளர்களால் திட்டமிட்ட செயலா? அல்லது குறித்த காவலரணில் நின்றவர்களின் காமப் பசிக்காக எதேற்சையாக மறிக்கப்பட்டு இரையாக்கப்பட்டாளா? என்பதே தற்போது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். ஏனெலில் அப்பகுயில் கடமையாற்றிய சில படையினருடன் குறித்த கொடூர சம்பவத்திற்கான தீர்ப்பு வழங்கப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு குற்றப் பின்னணியோ அல்லது புலிகளின் தொடர்புகளோ அற்ற அப்பா வியான கிருசாந்தியை தமது காம இச்சைக்காக செம்மணியில் செயற்பட்ட படைக் காமுகர்கள் வேட்டையாடி கொன்றார்கள் எனின் அவர்கள் அதற்கு முன்னரும் கிருசாந்தி கொல்லப்பட்டு புதைக்கப்பட்டு அவளது உடல் மீட்கும் வரையான காலப்பகுதியிலும் அவ்வாறான செயற்பாடுகளை தொடர்ச்சியாக நிச்சயம் செய்தவர்களாகவே இருப்பார்கள். அது தொடர்பாக ஏன் விசாரணைகள் மேற்கொள்ளவில்லை?
கிருசாந்தியைக் காணவில்லை என பாராளுமன்றில் தமிழர் விடுதலைக்கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் யோசப்பரராசசிங்கம் அமளிதுமளியாக கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த போது செம்மணிப்பகுதியில் செயற்பட்ட படையினர் உடனடியாக வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டார்கள். அத்துடன் லெப்டிணன் கேணலும் செம்டம்பர் இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்தை விட்டு அகற்றப்பட்டுள்ளார்.
எனவே கிருசாந்தி கொடூரமாக கற்பழித்துக் கொல்லப்பட்ட விடயம் உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் தெரிந்துள்ளது. அதனாலேயே அவர்களை இடமாற்றம் செய்துள்ளார்கள். ஏன் அவர்கள் விசாரணைக்குட்படுத்தவில்லை?
கிருசாந்தி கொலை வழக்கின் முக்கிய சாட்சியான குறித்த சைக்கிள் கடைக்காரன் தன்னிடம் குறித்த செம்மணி படைமுகாமிற்கு சென்று வரும் ஒருவரே பல தடவைகள் சைக்கிள் உதிரிப்பாகங்களை தனக்கு விற்றுள்ளதாகத் தெரிவி்த்தும் அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.
கிருசாந்தி அணிந்திருந்த தோடு மற்றும் தாயார் அணிந்திருந்த சங்கிலி பிரணவன், கிருபாமூர்த்தி ஆகியோரின் மணிக்கூடுகள் எங்கே?
இவை சாட்சிப் பொருட்களாக பொலிசாரால் நீதிமன்றில் சான்றுப்படுத்தப்படவில்லை. அதே நேரம் கிருசாந்தியின் தாயார் இராசம்மா தாலிக்கொடியுடன் சென்றதாகவும் அந்த தாலி கிருசாந்தி வழக்கில் துாக்குத்தண்டனை பெற்ற ராஜபக்சவின் தங்கையிடம் காணப்பட்டது எனவும் பலர் சமூகவலைத்தளத்தில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றார்கள். ஆனால் கிருசாந்தியின் தாயார் கணவனை இழந்த பின் தாலி அணிவதில்லை. அத்துடன் நகைகளும் அவர் அணிவதில்லை. ஒரு சங்கிலி மற்றும் காது தோட்டைத் தவிர வேறு எந்தவிதமான நகைகளும் அவர் கடைசிவரை அணிந்திருப்பதில்லை என உறவினர்கள் கூறுகின்றார்கள்.
ஆனால் இராசம்மாவின் சகோதரி பொலிஸ் விசாரணை ஒன்றின் போது தனது சகோதரியின் 2 லட்சம் ரூபாக்கு மேற்பட்ட நகைகளைக் காணவில்லை என்றும் அவை எங்கே என கேட்டதாக தெரியவருகின்றது. அந் நேரம் ஒரு பவுண் நகை 5 ஆயிரம் ரூபாவுக்கு குறைவாகவே பெறுமதியுடன் காணப்பட்டது. கிட்டத்தட்ட 40 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகளை கிருசாந்தியின் தாயார் தனது மகள்களுக்காக சேகரித்து வைத்திருந்திருக்கலாம். குடும்பமாக அவர்கள் கொல்லப்பட்டதால் அந்த நகைகளை கிருசாந்தியின் தாயார் எங்கு வைத்திருந்தர் என்பதை அறிய முடியாது உறவுகள் திண்டாடிக் கொண்டிருந்திருக்கலாம் என்பது உண்மையே.
ஆனால் தாயார் இராசம்மாவின் தாலி கிருசாந்தி வழக்கு கொலையாளி ராஜபக்சவின் சகோதரியிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக கிருசாந்தி கொலைவழக்கில் ஆயரான அரச சட்டத்தரணியான பிரசாந்தியால் தெரிவிக்கப்பட்டதாக பலர் கூறுகின்றார்கள். ஆனால் கிருசாந்தியை கற்பழித்துக் கொன்றவனான ராஜபக்ச அவள் கொலையாகி 5 வாரங்களுக்கிடையில் பிடிபட்டான். அதற்கிடையில் அவன் தனது வீட்டுக்குச் சென்றிருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் குடாநாட்டில் காணப்பட்ட இராணுவத்தினரின் போக்குவரத்து விமானம் மூலமாகவே இடம்பெற்றது. ஆனால் அவன் கிருசாந்தி அல்லாத வேறு ஒரு பெண்ணைக் செப்டம்பா் மாதத்துக்கு முன்னைய மாதங்களில் கொலை செய்து தாலிக் கொடியை தங்கையிடம் கெர்டுத்திருக்கலாம். அது தொடர்பாகவும் யாரும் விசாரணை செய்யவில்லை.
கிருசாந்தி தொடர்பான மேலும் பல தகவல்கள் தொடர்ச்சியாக அடுத்த அடுத்த தொடர்களில் தருவோம்.
நாம் இ்ங்கு தந்து கொண்டிருக்கும் புலனாய்வுத் தொடரின் சம்பவங்கள் அனைத்தும் 1996ம் ஆண்டு 51வது படையணி கட்டளைத்தளபதி ஜெனகபெரேவின் கீழ் செயற்பட்ட 512வது பிரிகேட் அணியின் அடுத்தடுத்து வந்த இ்ரு பிரிகேடியர்களின் கீழ் 1996 மே மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் அரியாலை, பாசையூர், கொழும்புத்துறை, நல்லுார் கிழக்கு ஆகிய பகுதிகளில் நடந்த சம்பவங்களின் தகவல்களையே பகிர்ந்து கொண்டிருக்கின்றோம்.
படையதிகாரிகளின் தராதரங்களின் படி அந் நேரத்தில் பிரிகேடியர் மற்றும் கேணல், லெப்டிணன் கேணல் போன்றவர்கள் மட்டுமே தமக்கான வாகனங்களைப் பயன்படுத்தி வந்தனர்.
கொட்டுக்கிணற்றடி படை முகாம் உயர் அதிகாரிகளின் உல்லாசபுரியாக இருந்துள்ளது. குறித்த முகாம் படையினின் ஒரு தற்காலிக தங்குமிடமாகவே காணப்பட்டது. கொட்டுக்கிணற்றடி முகாம் அமைந்திருந்த பகுதியில் 1995ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து 2 வீடுகளே கல்வீடுகளாக காணப்பட்டன. அந்த வீடுகளும் அதனைச் சுற்றி தற்காலிகமாக படையினரால் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களும் அப்பகுதியில் காணப்பட்டாலும் அங்கு படையினர் தொடர்ச்சியாக தங்குவதில்லை.
நாம் ஏற்கனவே 2 வது புலனாய்வுத் தொடரில் நிர்வாண நிலையில் கை, கால்கள், வாய் கட்டப்பட்டு கொட்டுக்கிணற்று வீட்டுக்குள் பெண் புலிகளைப் பிடித்து வைத்திருக்கின்றாங்கள் என சின்னப்பொடி என்பவன் கூறிய ஒரு சம்பவத்தை தெரிவித்திருந்தோம். அத்துடன் படையினர் விற்றுத் தரச் சொன்னதாக கூறி சில ஜோடி காற்சலங்கைகளை சின்னப்பொடி விற்க திரிந்ததையும் கூறியிருந்தோம்.
சின்னப்பொடிக்கு நடந்தது என்ன?
சின்னப்பொடிக்கு அந்நேரம் கிட்டத்தட் 55 வயது. நாயர்மார்கட்டு சந்திக்கு அருகில் தற்போது தண்ணீர்த் தாங்கி அமைந்துள்ள வீதியின் முடிவுப்பகுதிக் குடியிருப்பு ஒன்றிலேயே சின்னப்பொடியும் (முழுப் பெயர் தெரியவில்லை) அவனது மனைவி மற்றும் பிறப்பிலேயே அங்கவீனமான 25 வயது மதிக்கத்தக்க மகனும் வசித்து வந்தார்கள். சின்னப்பொடி குடும்பம் அப்பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள் அல்ல. வலிகாமம் வடக்கு பகுதியைச் சேர்ந்தவன் . நாயன்மார்கட்டு மற்றும் கல்வியங்காடு போன்ற இடங்களில் வீடுகளில் ஏதாவது கொண்டாட்டம் என்றால் சின்னப்பொடியையே ஆடு அறுத்து இறைச்சியாக்குவதற்கு அழைப்பார்கள். இவனே இராணுவக்கட்டுப்பாடு வந்த பின் செம்மணிப் பகுதி படையினருடன் நெருக்கமாகச் செயற்பட்டு குறித்த பகுதி வயல்களில் மேய்ந்து கொண்டு திரிந்த மாடுகளை பிடித்து இறைச்சியாக்கி விற்று வந்தவன். அத்துடன் படையினருக்கு கசிப்பு விற்பனையும் செய்து வந்தவன்.
காற்சலங்கைகளை விற்கச் சென்ற போது சின்னப்பொடி கூறிய தகவல்களை பின்னர் அப்போதைய மேலதிக அரச அதிபராக காணப்பட்ட பத்தினியம்மாவிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் பின்னர் ஒரு வாரத்திக்குள் அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டார்.
படையினரின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட பிரதேசத்துக்கு மாடு பிடிப்பதற்காக ஓகஸ்ட் மாத இறுதிப்பகுதியில் சென்ற சின்னப்பொடி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.சின்னப்பொடியின் மனைவி அரியாலை தபால்கட்டை சந்தியில் காணப்பட்ட காவலரண் பகுதியில் நின்று பல தடவைகள் படையினருடன் தனது கணவன் தொடர்பாக முரண்பட்டு வந்ததாகத் தெரியவருகின்றது.
கொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவில் பகுதியில் சின்னப்பொடி பார்த்தாக கூறிய நிர்வாண நிலையில் காணப்பட்ட பெண்கள் சில வேளைகளில் வீதியால் சென்றவர்களாகவோ அல்லது புலிகளுக்கு தெரியாது வன்னியிலிருந்து புறப்பட்டு படகுமூலம் அரியாலையில் வந்து இறங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். அந்தப் பெண்களும் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட பின்னர் செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கலாம்.
செம்மணியில் காணாமல் போன பலர் தம்முடன் பணம் மற்றும் நகைகள் வைத்திருந்ததால் காணாமல் போனார்கள்..
நகைகள் மற்றும் பணங்களுடன் சென்றவர்களே செம்மணியில் சந்தியில் பிடிபட்டு காணாமல் போனவர்களில் பலர். குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த வந்து அரியாலை கிழக்கில் இறங்கி செம்மணிப் பகுதியை நோக்கி நடந்து வந்த பல குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு அக் குடும்பங்களில் காணப்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டு குழந்தைகள் சிறுவர்கள் எனப் பார்க்காது குடும்பம் குடும்பமாக செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் கொன்று புதைக்கபட்டிருக்கலாம். அவர்களின் எலும்புக்கூடுகளே தற்போது மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
யாழ் குடாநாட்டில் 1996ம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனவர்களின் உறவுகள் 1997ம் ஆண்டு நடுப்பகுதியில் நல்லுார் கோவில் முன்றலிலும் மற்றொரு தடவை யாழ் புனித யுவானியார் தேவாலய முன்றலிலும் உண்ணாவிரதப் போராட்டங்களை நடாத்தியிருந்தனர். அங்கு அவர்களில் பலர் தமது உறவுகள் செம்மணிப் பகுதியிலேயே காணாமல் போனதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தனர்.
அவர்களில் சிலர் தெரிவித்திருந்த கருத்துக்களின் படி காணாமல் போகும் போது பணம், நகைகளுடனேயே காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவன் செல்வநாயகம் வசந்தமோகன் உரும்பிராயிலிருந்து யாழ் நகர் நோக்கிச் செல்லும் 1996ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28ம் திகதி போயா தினத்தின் போது திருநெல்வேலிக்கும் கந்தர்மடம் பகுதிக்கும் இடையில் வெள்ளைவானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளான். அவன் கடத்தப்படும் போது தந்தை தனது வாகனத்திற்கு ரயர் வாங்குவதற்காக கொடுத்த 15 ஆயிரம் ரூபா பணத்துடன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டான். மகன் காணாமல் போனமை தொடர்பாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பல தடவைகள் சென்று முறையிட்டும் அவர் எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. பல இராணுவ முகாம்களில் மகனை தேடித் தேடி அலைந்தேன் என தந்தை ஊடகவியலாளர்களிடம் அந்த நேரம் தெரிவித்திருந்தார்.
கஸ்துாரியார் வீதியில் செயற்படும் கணேசாநகை மாடத்தில் வேலை செய்து வந்த 22 வயதான வடிவேலு கண்ணதாசன் 1996ம் ஆண்டு 8ம் மாதம் 26ம் திகதி 6 சோடி காப்பு, தோடுகள் மற்றும் 15 ஆயிரம் ரூபா பணமும் கொண்டு நகை ஓடர் கொடுத்தவர்களுக்கு கொடுப்பதற்காக சாவகச்சேரி செல்லும் வழியில் செம்மணி சோதனைச்சாவடியில் காணாமல் ஆக்கப்பட்டான். அவன் கையில் ஒரு பாம்பு மோதிரமும் கழுத்தில் 2 பவுண் சங்கிலியும் அணிந்திருந்தான். இந்த தகவலை 50 வயதாக கண்ணதாசனின் தாயார் வடிவேலு நாகம்மா கூறியிருந்தார்.
மனைவியையும் தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக வெளிநாட்டிலிருந்து வந்திருந்த அரியாலையைச் சேர்ந்த 46 வயதான சுப்பையா மகாதேவனும் 1996ம் ஆண்டு யூலை 7ம் மாதம் அரியாலை ஏ9 வீதியில் வைத்து கைது செய்யப்பட்டு காணாமல் போனார். இந்தத் தகவலை மகாதேவனின் 49 வயதான அக்கா சோதிலிங்கம் கமலேஸ்வரி கூறினார்.
கைதடிக் கந்தசாமி கோவில் குருக்கள் கணேசசர்மாவின் மகனான 22 வயது சிறிராம் 1996ம் ஆண்டு 8ம் மாதம் 9ம் திகதி செம்மணி சோதனைச்சாவடியில் காணாமல் ஆக்கப்பட்டார். அவரும் சங்கிலி மற்றும் கைச்சங்கலி போன்றவற்றை போட்டிருந்துள்ளார். இந்தத் தகவலை கணேசசர்மாவின் மனைவி சுசிலாதேவி கூறினார். இது தொடர்பான செய்தி ஒன்றை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். அதன் இனைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
செம்மணியில் பிளாஸ்டிக் பூமாலையுடன் காணப்பட்ட எலும்புக்கூடு கைதடி சிறிராம் ஐயருடையதா? Photos
நல்லுார் முன் வீதியில் உள்ள ஒழுங்கை ஒன்றில் வசித்து வந்த 27 வயதான நவரட்ணம் யோகநேசன் , 29 வயதான செல்லத்துரை சாந்தகுமார் ஆகியோர் 23.07.1996 அன்று பகல் 512வது றெஜிமெண்டைச் சேர்ந்த 15ற்கும் மேற்பட்ட படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார்கள். யோகநேசன் மெக்கானிக் என்பதுடன் சாந்தகுமார் சலுான் கடை நடாத்துபவர். அத்துடன் இருவரும் மச்சான் முறையானவர்கள். பல இராணுவ முகாம்களுக்கம் அலைந்து திரிந்தும் பலனில்லை என்றும் அவர்கள் இழுத்துச் செல்லப்பட்ட பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது என அழுதழுது கூறினார் நவரட்ணம்.
யாழ் சென்ஜோன்ஸ் கல்லுாரி 19 வயது மாணவன் துரைசிங்கம் செந்தில்நாதன் ஏ.எல் பரீட்சை எடுப்பதற்கு 15 நாட்களுக்கு முன் கொழும்புத்துறை முகாம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு காணாமல் போனான். அவன் கைது செய்வதற்கு முன் சில வாரங்களாக கொழும்புத்துறைப் பகுதியில் உள்ள முகாம் ஒன்றில் சந்தேக நபராக கையொப்பம் இட்டு வந்தவன் என்றும் ஒவ்வொரு முறையும் அவன் அந்த முகாமுக்கு கையொப்பம் இடச் செல்லு்ம் போதும் தானும் கூடச் சென்று வந்ததாகவும் அவனது தாயார் கமலாதேவி கூறினார். ஆவணி மாத நடடுப்பகுதியில் அவனுடன் தான் முகாமுக்குச் சென்ற போது அவனை சிறு விசாரணையின் பின்னர் விடுவிப்பதாக கூறி தன்னை துரத்தினார்கள் என்றும் தனது கண் முன்னேயே அவனை முகாமுக்குள் கொண்டு சென்றார்கள் என்றும் அதன் பின்னர் அவன் தொடர்பாக எந்தத் தகவல்களும் இல்லை என்றும் அடுத்தநாள் தான் அங்கு சென்ற போது அவனை தாங்கள் கைது செய்யவே இல்லை என்று கூறி தனது கண்ணுக்கு முன் கைது செய்தவனை கூட காணவில்லை என கூறுகின்றார்கள் என அழுதார் அவனது தாயார் கமலாதேவி
துரைசிங்கம் செந்தில்நாதன்

சின்னையா சோமஸ்கந்தன் என்னும் 25 வயதான யாழ் பல்கலைக்கழக மாணவன் யாழ்ப்பாணத்திலிருந்து வீடு நோக்கிச் செல்லும் வழியில் செம்மணிப் பகுதியில் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் போனான்.
நடராஜா சகுந்தலாவுக்கு நடந்த கொடூரம்
தீவுப்பகுதியைச் சொந்த இ்டமாகக் கொண்ட நடராஜா குடும்பத்தினர் தென்மராட்சியிலிருந்த வந்து அரியாலை மலர்மகள் வீதியில் தற்காலிகமாக குடியேறியிருந்தார்கள். 4 பிள்ளைகளின் தந்தையான 64 வயதான நடராஜா பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர். அவரது மனைவி தங்கேஸ்வரி ஓய்வு பெற்ற ஆசிரியை. நடராஜவின் ஏனைய 3 பிள்ளைகளும் புலம்பெயர்ந்து வெளிநாட்டில் திருமணம் முடித்து வசித்து வந்துள்ளார்கள். நடராஜாவின் கடைசிமகளான 29 வயதான சகுந்தலா திருமணம் முடிக்காது தந்தை தாயுடன் இ்ருந்துள்ளார். தந்தையின் நோய்த் தாக்கம் காரணமாக இ்வர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கு பாஸ் பெறுவதற்காக புங்கங்குளம் இ்ராணுவ முகாமுக்கு பல தடவைகள் சென்று வந்துள்ளார்கள்.
1996ம் ஆண்டு யூன் மாத இ்றுதிப்பகுதியில் நள்ளிரவு 11 மணியளவில் சகுந்தலா வீடு படையினர் சிலரால் முற்றுகையிடப்பட்டது. இ்ரவிரவாக சகுந்தலாவின் கதறல் கேட்டவண்ணமிருந்துள்ளது. அதிகாலை 3 மணியளவிலேயே அங்கிருந்து படையினர் விலகிச் சென்றார்கள். அன்று காலை 6 மணியளவில் ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் பெண் உறுப்பால் குருதி வடிந்த நிலையில் சகுந்தலா காணப்பட்டு அயல் பகுதியைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள்.
படையினர் மேற்கொண்ட குறித்த கொடூரச் செயல் தொடர்பாக எந்தத் தகவலும் யாருக்கம் கொடுக்க வேண்டாம் என யாழ் போதனா வைத்தியசாலையின் அப்போதய பதில் பணிப்பாளர் சகுந்தலா மற்றும் தாயாரை அச்சுறுத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதே நேரம் சகுந்தலாவின் தாயாரும் எந்தவித முறைப்பாடும் யாருக்கும் கொடுக்கவில்லை. சகுந்தலாவுக்கு விடுதியில் சிகிச்சையளித்த வைத்தியர் மற்றும் தாதிக்கும் படைத்தரப்பு கடும் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தல்களை விடுத்தாக தெரியவந்தது.
சிகிச்சை பெற்று சில நாட்களில் வெளியேறிய சகுந்தலா யூலை மாத நடுப்பகுதியில் மீண்டும் வீட்டுக்கு வந்த படையினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டார். முகாம் முகாமாக அலைந்து திரிந்த சகுந்தலாவின் தாயாருக்கு சகுந்தலா கொழும்பு சிறையில் உள்ளதாக யாரோ தெரிவித்த தகவலை வைத்து சகுந்தலாவின் தாயார் தனது நோயாளியான கணவருடன் பெருமளவு பணம் லஞ்சமாகக் கட்டி பாஸ் எடுத்து கொழும்பு சென்றார். அதன் பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
2002ம் ஆண்டு புலிகள் அரசியல் நடவடிக்கைக்காக யாழ் வந்த போது சகுந்தலாவின் சகோதரி ஒருவர் புலம்பெயர் நாட்டிலிருந்து வந்து சகுந்தலா காணாமல் போனமை தொடர்பாக அவர்களிடம் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
நடராஜா சகுந்தலா

வித்தியாதரன் என்ற சகுணியின் விளையாட்டு
1996ம் ஆண்டு யாழில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வெளியாகிக் கொண்டிருந்த உதயன் பத்திரிகை படையினரின் போர்ச் செயற்பாடான செய்திகளை மட்டும் தணிக்கை செய்யவில்லை. படையினரால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மிக மோசமான செயற்பாடுகளையும் தணிக்கை செய்து எந்தவொரு தகவலும் வெளிவராது படையினரைக் காப்பாற்றி வந்தது.
1996ம் ஆண்டு மே மாதத்தின் பின் குறிப்பாக முல்லைத்தீவு முகாம் தாக்குதல்களின் பின் யூன் மாத இ்றுதிப் பகுதியிலிருந்து 1996 நவம்பர் மாத தொடக்க காலம் வரையான காலப்பகுதிவரை யாழ் போதனா வைத்தியசாலையில் அந் நேரத்தில் பணிபுரிந்த இ்ளம் துடிப்பு மிக்க வைத்தியர் ( தற்போது வைத்தியநிபுணராக உள்ளார்) ஒருவரின் தகவல்களின் படி, அக் காலப் பகுதியில் ஒரு கிழமையில் 3 அல்லது 4 பாலியல் வல்லுறவுகளால் ஏற்பட்ட சித்திரவதைக் காயங்களுடன் யுவதிகள், குடும்பப் பெண்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் படையினரால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவர்கள். யாழ் போதனா வைத்தியசாலையில் அந் நேரத்தில் பதில் பணிப்பாளர் ஒருவரே செயற்பட்டார். அவர் மிகுந்த ஊழல் பேர்வழி என்றும் மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த அந் நேரத்தில் பெருமளவு மருந்துகளை தனியார் வைத்தியசாலைகளுக்கு விற்றவர் என்பதுடன் படையினருடன் மிக நெருக்கமான உறவுகளைப் பேணியவர் என்றும் அந் நேரம் யாழில் செயற்பட்ட புலிகளுக்கு தகவல்கள் கிடைத்திருந்தன.
பெரும்பாலான வல்லுறவுச் சம்பவங்களால் காயப்பட்டு குருதிப் பெருக்குடன் அனுமதிக்கப்பட்ட பெண்கள் தமக்கு ஏற்பட்ட கொடூரத்தை பொலிசாரிடம் முறையிட விரும்பவில்லை. அதே நேரம் பொலிசாரிடம் முறையிட சில பெண்களின் உறவினர்கள் முயன்ற போது குறித்த பணிப்பாளர் அவர்களை அச்சுறுத்தி முறைப்பாடு செய்ய விடவில்லை என்றே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.
பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் விடயங்கள் உதயன் நிர்வாகத்தினருக்குத் தெரியப்படுத்தினாலும் அவர்கள் அதனை ஒரு போதும் பிரசுரிப்பதில்லை. அந் நேரத்தில் இ்ளம் புலி உறுப்பினர்களால் ஊடகவியலாளர்கள் என்று கூறிச் செயற்பட்ட சிலருக்கு படையினரின் கொடூர செயற்பாடுகள் தொடர்பாக வழங்கப்பட்ட தகவல்கள் எதுவும் உதயனில் வெளிவருவதில்லை. இ்து தொடர்பாக அந் நேரத்தில் செயற்பட்ட ஊடகச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்களின் மனத்தில் உதயனின் சகுனிச் செயற்பாடுகள் தற்போதும் ரணமாக உள்ளது. அவ்வாறான கொடூர செயற்பாடுகள் அந்தக் காலத்தில் எப்பகுதியில் நடந்தன என்பதையும் அவற்றை உதயன் எவ்வாறு பிரசுரித்திருந்தது என்பதையும் அறிந்து உதயன் பிரசுரித்த ஒரு சம்பவத்தை பல நாட்களாக நுாலகம் இ்ணையத்தில் தேடிப் பார்த்தபோது அது எமது கண்களுக்கு அகப்பட்டது. அதனை நாம் இங்கு தருகின்றோம்…..
சாவகச்சேரிப் பகுதியில் படையினரால் ஊமைப் பெண் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர கூட்டுப் பாலியல் வல்லுறவை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் உட்பட உதயன் பத்திரிகை நிர்வாகவும் சேர்ந்து எவ்வாறு பிரசுரித்து படையினரைக் காப்பாற்றியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளோம்.
உதயன் கூறும் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் யார்?
ஊமைப் பெண்ணின் பெண் உறுப்பிலிருந்து பாலியல் வல்லுறவின் பின் தொடர்ச்சியாக இ்ரத்தப் பெருக்கு ஏற்பட்டதால் அந்த உறுப்பில் பாலியல் வல்லுறவு மேற்கொண்டவர்களின் விந்து காணப்படாததால் பாலியல்வல்லுறவு என்று நிரூபிக்க முடியாது எனவும் பெண் உறுப்பு கிழிந்து போனதற்கு காரணம் முனை மழுங்கிய நீண்ட உறுப்பு அல்லது பொருள் பெண் குறிக்குள் திணிக்கப்பட்டு குறியை கிழித்துள்ளதே தவிர பாலியல் வல்லுறவு என கூற முடியாது எனவும் உதயன் செய்தி வெளியிட்டிருந்தது…..

தொடரும்

