யாழில் 22 வயது யுவதி ரஜனி வாய்க்குள் உள்ளாடையை அடைந்து படையினரால் கொடூரமாக கற்பழிப்பு!! வம்பனின் புலனாய்வுத் தொடர் 4
1996ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சுண்டுக்குளி மகளீர் கல்லுாரி மாணவி கிருசாந்தி படையினரால் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, கிருசாந்தி கொலைக்கு முன்னரும், கிருசாந்தி கொலைக்குப் பின்னரும் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக செம்மணி மற்றும் அரியாலைப் பகுதிகளில் நடந்த சம்பவங்கள் சிலவற்றை நாம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். அதன் 4 வது பகுதி இங்கு தரப்பட்டுள்ளது.
மூன்றாம் பகுதி பகுதி கீழே
யாழ் குடாநாடு முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாக 1996ம் ஆண்டு மே தினத்தில் சந்திரிக்கா செருக்குடன் கூறிய பின் யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு படையினரால் நடந்த மிகக் கேவலமான கொடூரமான செயற்பாடுகள் ஏராளமானவை….
19 வயதான கிருசாந்தி, ஜேசுநாதர் இறந்து உயிர்த்தெழுந்தது போல் தற்போதும் மக்களின் மனத்தில் ஆறாத நினைவாக உயிர்வாழ்வது மட்டுமல்ல, அவளது இறப்பின் பின் குடாநாட்டில் வாழ்ந்த ஏராளமான பெண்கள் மறைமுகமாக ஓரளவேனும் பாதுகாக்கப்பட்டார்கள்.
கிருசாந்தி தொடர்பான தகவல்கள்களை நாம் தொடர்ச்சியாக தரவுள்ளோம். அதற்கு முன்,
கிருசாந்தி கொடூர வல்லுறவின் பின் கொல்லபபட்டதற்கும் ஈ.பி.டி.பிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கிருசாந்தி கொல்லப்பட்டது 1996ம் ஆண்டு செப்டம்பர் 07ம் அல்லது 8ம் அல்லது 9ம் அல்லது 10ம் திகதியே.( முழுமையான விளக்கங்களுடன் நாம் தகவல்களைத் தருவோம். ஏனெனில் படையினர் கூறிய சாட்சிகள் தம்மை அரசாங்கம் காப்பாற்றும் என்ற அடிப்படையில் உயர் அதிகாரிகளை காப்பாற்ற முற்பட்டு கூறப்பட்டது. இதை அடிப்படையாக வைத்து கிருசாந்தி பிடிபட்ட அன்றே கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்த முடியாது) ஆனால் ஈ.பி.டி.பி யாழ்ப்பாணத்திற்கு வந்தது 1997ம் ஆண்டு தை மாதம் முதல் வாரத்தில். நாம் இங்கு ஈ.பி.டி.பிக்கு சார்பாக பதிவிடவில்லை. ஆனால் விசாரணை என்று வரும் போது பிழையான தகவல்களை வழங்கி ஈ.பி.டி.பிச் செல்லங்களை நிரபராதிகள் என்ற நிலைக்கு கொண்டு வர வேண்டாம். ஈ.பி.டி.பியினர் யாழ்ப்பாணத்திற்கு வந்து என்ன செய்தார்கள் என விலாவாரியாக நாம் தகவல்களைத் தருவோம். காத்திருங்கள்.
படையினரின் சில செயற்பாடுகள் தொடர்பாக நாம் வெளிப்படுத்துவதற்கு முன் யாழ்ப்பாணத்தின் 1996ம் ஆண்டு ஏப்ரல் இறுதி வாரத்திலிருந்து அப்போதைய கள நிலவரங்களை நாம் உங்கள் கண் முன் கொண்டுவர விரும்புகின்றோம்.
சிவில் நிர்வாகம் படையினரின் கைகளில் இருந்தது.
நீதிமன்றங்கள் முழுமையான முறையில் செயற்படாத நிலையில் காணப்பட்டன.
சிறைச்சாலைகள் இல்லை.
பொலிஸ் நிலையம் பெயருக்கே இயங்கியது.
ஊடகத் தணிக்கை அமுலில் இருந்தது.
ஒவ்வொரு ஊரிலும் இருந்த இராணுவ முகாம்களின் பொறுப்பானவர்கள்தான் குட்டி ஜனாதிபதிகளாகவும் நீதிபதிகளாகும் இருந்தார்கள். யாரையும் கைது செய்யலாம், சித்திரவதை செய்யலாம், கற்பழிக்கலாம், கொலை செய்யலாம், தண்டனை வழங்கலாம் என சகல அதிகாரங்களும் பொருந்திய சர்வதிகாரிகளாக காணப்பட்டார்கள்.
உதாரணமாக ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் வீடு புகுந்து எப்போது வேண்டுமானாலும் கூட்டிச் செல்லலாம்… எவ்வளவு காலமும் முகாமுக்குள் வைத்திருக்கலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் யாரும் எதுவும் கேட்க முடியாது. படைப் பொறுப்பதிகாரி விரும்பினால் மட்டும் தான் கைது செய்தவனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கலாம். இவ்வாறான சூழ்நிலையே அந்தக் காலத்தில் இருந்தது.
சிவில்நிர்வாக அலுவலகம் என்ற பெயரில் படையினரால் உருவாக்கப்பட்ட ஒரு அலுவலகம் ஒவ்வொரு பிரதேசத்திலும் இருந்தது. அப்பகுதியில் தமக்கு யார் மேலாவது சந்தேகம் வந்தால் அல்லது யாரவது எவரையாவது காட்டிக் கொடுத்தால் அந்த அலுவலகத்திற்கு அவர்கள் அழைக்கப்படுவர். அதன் பின்னர் அவர்கள் தப்பிப் பிழைப்பது அவர்களின் அதிஸ்டத்தைப் பொறுத்தது.
1987 தொடங்கி 1990ம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.வி.பி இயக்க உறுப்பினர்கள் என சந்தேகத்தின் பெயரில் பிடிக்கப்பட்டவர்களுக்கு பட்டலந்தை வதை முகாம் மற்றும் பல வதை முகாம்களின் என்ன நடந்ததோ அது யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு பிரதேச சிவில்நிர்வாக காரியாலயங்களிலும் நடந்தது,
மலக்குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ரஜனி வேலாயுதபிள்ளை…
ரஜனியி்ன் நிஜமான புகைப்படமும் AI முலமாக பெறப்பட்ட புகைப்படமும்
கிருசாந்தி காணாமல் போய் புதை குழியிலிருந்த மீட்பதற்கு முன் 22 வயதான அழகிய யுவதி ரஜனி வேலாயுத பிள்ளை கோண்டாவில் பகுதியில் 30.09.1996ம் ஆண்டு காணாமல் போனார். இவரது தாய் மற்றும் உறவுகளுடன் சேர்வதற்காக வெளிநாட்டுக்குப் பயணமாவதற்கு முன் காணாமல் போனார். இவர் காணாமல் போன பின் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பல்வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வந்த போதும் அவற்றை நாம் இங்கு வெளியிடவில்லை. வெளிநாடு செல்வதற்கான சகல ஆயத்தங்களும் முடிவுற்ற நிலையில் மானிப்பாய் பகுதியிலுள்ள தனது உறவினருக்கு அந்தத் தகவலை கூறுவதற்காக பல்கலைக்கழக இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியிலுள்ள காவலரண் ஊடாகச் சென்ற ரஜனி பின்னர் வீடு திரும்பவில்லை.உடனே வீடு திரும்புவதாக கூறிவிட்டுச் சென்றவர் அன்று திரும்பாத காரணத்தால் சிலவேளை போக்குவரத்து சிக்கலால் வரவில்லை என நினைத்து அவளது உறவுகள் அன்று தேடவில்லை. அடுத்தநாளும் மதியம் வரை ரஜனி வீடு திரும்பாததால் அவளது அண்ணன் மானிப்பாய்க்கு சென்று உறவினர்களிடம் விசாரித்த போது ரஜனி நேற்றே சென்று விட்டதாக கூறியுள்ளார்கள். அதன் பின்னரே அண்ணன் உட்பட்டவர்கள் ரஜனியை முகாம் முகாமாக தேடத் தொடங்கினர்.
பொலிசாரிடமும் முறையிட்டனர். ஆனாலும் பயனில்லை. இவ்வாறான நிலையில் ரஜனி காணாமல் போய் 2 கிழமைகள் ஆன நிலையில் கோண்டாவில் பஸ்டிப்போவுக்கு பின் புறமாக உள்ள மக்கள் வசிக்காத வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசவே அங்கு சென்று சிலர் பார்த்த போது பாதி திறந்து அரை குறையாக மூடி போட்டு மூடப்பட்டிருந்த மலக்குழி ஒன்றினுள் பெண்ணின் சடலம் இருப்பதை அவதானித்து பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்கள். அதன் பின்னரே ரஜினியின் சடலம் அது என அடையாளம் காணப்பட்டது. அவள் அணிந்திருந்த சங்கிலி, தோடு, உடைகள் மற்றும் சைக்கிள் என்பனவும் அடையாளம் காணப்பட்டது. இதன் பின்னர் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் அப்பகுதியில் கடமையிலிருந்த 6 படையினர் கைது செய்யப்பட்டனர்.
ரஜனியின் சடலம் மீட்கப்பட்டு பிரதேபரிசோதனைகளின் போது ரஜனியின் வாய்க்குள் இருந்து ரஜனி அணிந்திருந்த உள்ளாடைகள் தொண்டை வரை அடையப்பட்டவாறு காணப்பட்டதாக தெரியவருகின்றது. வீதியால் சென்ற ரஜனியை மறித்து காவலரணுக்குள் வைத்திருந்துவிட்டு பின்னர் ஆட்கள் அற்ற வீட்டுக்குள் துாக்கிச் சென்று 6 இராணுவத்தினர் மாறி மாறி ரஜனியை கொடூரமாக சிதைத்துள்ளார்கள். ஆறாவதாக அவளை சீரழிக்கச் சென்ற இராணுவச் சிப்பாயும் 5வதாக கற்பழித்த இராணுவச் சிப்பாயும் அரச சாட்சியாக மாறினார்கள். இரு சிப்பாய்களும் ரஜனியை சீரழிக்க முற்பட்ட போதே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்கள். அத்துடன் அவனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவளது சடலத்தை துாக்கிச் சென்று அப்படியே மலசல கூட குழிக்குள் போட்டுள்ளார்கள்.
குறித்த வழக்கு கொழும்பு நீதிமன்றில் நடைபெற்ற போது அரச சட்டத்தரணியாக கடமையாற்றியவர் பிரசாந்தி என்ற பெயருடைய சிங்கள பெண் சட்டத்தரணியே. ( குறி்தத பெண் அரச சட்டத்தரணியே கிருசாந்தி கொலை வழக்கிலும் ஆயரானவர். இவர் குறித்த வழக்குகளில் தொடர்புபட்ட இராணுவ அதிகாரிகளை காப்பாற்றுவதில் அக்கறை கொண்டவராக காணப்பட்டார் என சந்தேகிக்கப்படுகின்றது. இது தொடர்பாக முழுமையான விபரங்களை வெளியிடுவோம்.) பிரசாந்தியுடன் சேர்ந்து ரஜனியின் குடும்பத்தினரின் நலன்களைக் கவனிப்பதற்கு என என். ரவிராஜ் சட்டத்தரணியும் க.பூபாலசிங்கம் சட்டத்தரணியும் செயற்பட்டார்கள். அப்போது கடமையிலிருந்து பிரதம நீதவான் முனிதாச முன்னிலையில் படையினர்கள் தரப்பு சட்டத்தரணியாக சஞ்யேத்கம என்பவர் ஆஜராகி வாதிட்டார்கள். குறித்த வழக்கின் முக்கிய சாட்சியாக அப்பகுதியில் கடமையாற்றிய பொலிஸ்காரன் உபாலி பின்வருமாறு சாட்சி கூறியுள்ளான்….
”நான் காவல் கடமையிலிருந்த காவலரண் கோண்டாவிலுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் பலாலி வீதியில் இருந்தது. குறித்த காவல் நிலையத்திற்கு அருகில் கடைகளும் இருந்தன. குறித்த காவல் நிலையத்தில் கடமையாற்றிய 1ம், 3ம், 4ம் எதிரிகள் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றுக்குள் ரஜனியை குண்டுக் கட்டாகத் துாக்கிக் கொண்டு செல்வதை அவதானித்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தின் பின்னர் 3ம், 4ம் எதிரிகள் என்னையும் வருமாறு அழைத்தனர். நான் மறுத்துவிட்டேன். அதன் பின்னர் அவாகள் மேலும் ஒரு மணி நேரம் ரஜனியுடன் காணப்பட்டார்கள். பின்னர் அவர்கள் வெளியே வரும் போது அதிர்ச்சியான நிலையில் இருந்தார்கள். நான் என்ன நடந்தது என கேட்ட போது அவள் இறந்து விட்டாள் என தெரிவி்த்தார்கள். அத்துடன் என்னையும் இது தொடர்பாக யாரிடமும் கூற வேண்டாம் என அச்சுறுத்தினார்கள். நான் பயத்தில் யாரிடமும் கூறவில்லை ” இவ்வாறு சாட்சியமளித்தான் உபாலி என்ற பொலிஸ்.
ஆனால் இது தொடர்பாக குறித்த காவலரண் அருகில் அமைந்திருந்த கடைகளில் காணப்பட்டோர் பல்வேறு தகவல்களை வழங்கியிருந்தார்கள். குறிப்பாக ரஜனி அப்பகுதி காவலரணுக்கு அருகே இருந்த வீடு ஒன்றுக்கு சென்றமை தொடர்பாக அவர்கள் பல கருத்துக்களை அந்த காலப்பகுதியில் கூறியிருந்தாலும் அவற்றை நாம் இங்கு பிரசுரிப்பதை தவிர்த்துள்ளோம்.
1995ம் ஆண்டு புலிகள் வலிகாமம், நல்லுார் மற்றும் யாழ் நகரப்பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றினாலும் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறவில்லை. குறிப்பாக குருநகர்ப் பகுதியைச் சேர்ந்த 500 ற்கு மேற்பட்டவர்களும், பாசையூர், கொழும்புத்துறை, அரியாலை மேற்குப் பகுதியைச் சேர்ந்த நுாற்று்க்கும் மேற்பட்டவர்களும் நல்லுார் பகுதியைச் சேர்ந்த 50 ற்கும் மேற்பட்டவர்களும் புலிகளின் கட்டளையை மீறி அப்பகுதிகளில் தங்கியிருந்தார்கள். யாழில் முக்கிய கோவில் பிரதம குரு உட்பட பல குரு்க்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் போன்றவர்களும் இதில் அடங்குவர்.
யாழ் நகரப்பகுதியை இராணுவம் கைப்பற்றிய போது 23 வயதான யாழ் மடத்தடிப் பகுதியைச் சேர்ந்த றீட்டா என அழைக்கப்பட்ட யுவதியும் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இவள் புலிகளின் காலத்தில் துர்நடத்தையில் ஈடுபட்டதற்காக புலிகளின் காவல்துறையால் பிடிக்கப்பட்டு பின்னர் கைதியாக புலிகளின் பெண்கள் முகாமில் சமையல் வேலை செய்பவளாக பணியாற்றியிவந்தாள். இராணுவம் முன்னேறய போது இவள் விடுவிக்கப்பட்ட பின் அகதியாக இடம்பெயராது இவள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்துள்ளாள்,
இவள் இராணுவத்தில் நம்பிக்கை வைத்து யாழிலேயே தங்கியிருந்தமைக்காக இவருக்கு இராணுவ அலுவலகத்தில் வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது. அதாவது வெளிமாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கான பாஸ் வழங்கும் மிக முக்கிய அலுவலகத்தில் குறித்த யுவதி பதிவாளராக இருந்தாள். இவளுடன் பல தரகர்கள் தொடர்பு வைத்து வெளிமாவட்டங்களுக்கு செல்பவர்களிடம் பணம் வாங்கி அவர்களுக்கு உடனே வெளிமாவட்டம் செல்வதற்கான பாஸ் வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. ( இது தொடர்பாக நாம் விபரமாக வெளியிடுவோம்
குருநகர்ப் பகுதியைச் சேர்ந்த பலர் இடம்பெயராமல் இருந்ததற்கு முக்கிய காரணம் உள்ளது. 1994ம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளின் காவல்துறையுடன் குருநகர்ப்பகுதியைச்சேர்ந்த சில இளைஞர்கள் முரண்பட்டு பின்னர் குறித்த பகுதி ஆண்களால் காவல்துறையினர் பலர் கடுமையாகத் தாக்கப்பட்டும் அதன் பின்னர் அதனை விசாரிக்கச் சென்ற ஆயுதம் தரித்த சில புலி உறுப்பினர்களில் 2 புலி உறுப்பினர்கள் குருநகர் இளைஞர்களால் கடத்தப்பட்டதால் குருநகர் பகுதியின் குறித்த ஒரு பிரதேசம் பல நுாற்றுக் கணக்கான ஆயுதம் தரித்த புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டு சில சம்பவங்கள் நடந்தேறின. அதன் பிரதிபலிப்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் புலிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் படையினர் யாழ் நகரை நோக்கி முன்னேறி வரும் போது சென்பற்றிக்ஸ் கல்லுாரியில் தஞ்சமடைந்து பின்னர் படையினரின் ஆக்கிரமிப்பில் வாழ்ந்து வந்தார்கள்.
படையினருடன் சேர்ந்து வாழ்ந்தவர்களில் முக்கியமானவர் பிரபல தனியார் வைத்தியசாலை வைத்தியர் ஏபிரகாம். அவர் யாழ் மாநகரசபையின் சுகாதார அதிகாரியாகவும் இருந்தவர். அத்துடன் சேவை நோக்கம் கொண்டவர் எனவும் மக்களுக்காக களத்தில் நிற்பவர் எனவும் அவருக்கு அறிமுகமானவர்கள் தெரிவித்தார்கள். ஆனாலும் அவர் புலிகளின் சில நடவடிக்கைகளை நேரடியாக எதிர்த்தவர்களில் ஒருவர் எனவும் ஆனால் புலிகள் அவரை தொந்தரவு செய்யாமல் செயற்பட்டதாகவும் கூறுவர்.
வைத்திய கலாநிதி ஏ.எல் ஏபிரகாம்
சென்பற்றிக்ஸ் மற்றும் ஏனைய பிரதேசங்களில் படையினருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த மக்களுக்கு ஏபிரகாமே வைத்திய சேவை செய்து வந்துள்ளார். அதே நேரம் படை அதிகாரிகளுடன் மிக நெருக்கமான தொர்புகளைக் கொண்டிருந்தார்.
தென்மராட்சி படையினரால் கைப்பற்றப்பட்டு கிளாலிப் பாதையும் கைப்பற்றப்பட்ட பின்னர் சூரியக்கதிர் இராணுவ நடவடி்ககையால் இடம்பெயர்ந்து அங்கு வாழ்ந்த மக்கள் மீண்டும் யாழ்நகரம் மற்றும் வலிகாமம் பகுதியை நோக்கி செல்லத் தொடங்கினர். குருநகர் பகுதியைச் சேர்ந்த பலர் சூரியக்கதிர் இராணுவநடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து தனங்களப்பு, மறுவன்புலவு போன்ற இடங்களில் கடற்கரைப்பகுதியிலும் வன்னியின் பூநகரி நாச்சிக்குடா மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் வாழ்ந்து வந்தார்கள். மீண்டும் தமது இடத்திற்கு போனவர்கள் புலிகளின்கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து தமது உறவுகளை புலிகளுக்கு தெரியாது அழைக்கத் தொடங்கினர். குருநகர்ப் பகுதி மக்கள் தமது பிரதேசத்திற்கு திரும்பவும் அச்சமின்றி வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வைத்தியர் ஏபிரகாம்.
யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுக்குச் சென்ற பலரும் மீண்டும் படையினரின் கட்டுப்பாட்டுக்கு வர விரும்பினர். அவ்வாறு வரவிரும்பியவர்கள் பெரும் பொருள் படைத்தவர்கள். ஏனெனில் இவர்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசமான வவுனியாப் பகுதிக்குச் செல்வதற்கு புலிகள் அனுமதிக்கவில்லை. மல்லாவி மற்றும் ஜெயபுரம் பகுதிகளில் வாழ்ந்த இவர்கள் புலிகளுக்கு தெரியாது யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு கடல்பாதையை பயன்படுத்த தொடங்கினர்.
நாச்சிக்குடா மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்து இவ்வாறு வந்தவர்களில் பலர் குருநகருக்குச் செல்லாமல் அரியாலை கிழக்கு மற்றும் தனங்களப்பு பகுதிகளில் வந்து இறங்கத் தொடங்கினர். இவ்வாறு குறித்த இடத்தி்ற்கு வந்தமைக்கு முக்கிய காரணம் படைப்பிரதேசத்திலிருந்து பொருள் கடத்தும் வியாபாரிகளே… அவர்கள் தனங்களப்பு மற்றும் கிழக்கு அரியாலைப் பகுதிகளில் வந்து இறங்கி ஓரிரு நாட்கள் அங்கு தங்கியிருந்து யாழ் வியாபாரிகளுக்கு பொருட்களை விற்றும் வாங்கியும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் கிழக்கு அரியாலை மற்றும் தனங்களபபு கடற்கரை என்பன படையினரின் கட்டுப்பாட்டில் தொடர்ச்சியாக இல்லாத அதே நேரம் அடிக்கடி படையினர் ரோந்து செல்லும் பிரதேசமாக இருந்து வந்தது
புலிகளால் தமது பணம் மற்றும் நகைகள் கபளீகரம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அங்கிருந்து தப்பி வந்த பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த பலரே தற்போது செம்மணிப் புதை குழிக்குள் உறங்குகின்றார்கள். கிழக்கு அரியாலைக்குள் வந்து இறங்கிய எந்த ஒரு குடும்பமும் யாழ்ப்பாணத்திற்கு வந்து சேரவில்லை. ஏனெனில்2002ம் ஆண்டு சமாதான ஒப்பந்த காலத்தின் போது புலிகளின் பிரதேசத்திலிருநது களவாக வந்து காணாமல் போனவர்கள் தொடர்பாகவும் வன்னி மற்றும் யாழிலிருந்தும் நேரடியாக புலிகளிடம் அவர்களது உறவுகள் விசாரித்து வந்தார்கள்.
அவர்வாறு வந்தவர்களில் எம்மால் அடையாளப்படுத்தப்பட்ட குடும்பமே அருளையா நவநேசன் அவரது மனைவி மற்றும் மகள்கள் ஆகியோர். அரியாலைக்குப் பொறுப்பான லெப்டினன் கேணல் மற்றும் அவனு்ககு கீழ் கடமையாற்றிய அதிகாரப்படைத்தரப்பைச் சேர்ந்தவர்கள் தமது பிரதேசத்துக்கு வந்த பணக்கார குடும்பங்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து அவர்களை அடி்த்துக் கொன்றுள்ளார்கள்.
கிருசாந்தி கொலை வழக்கில் மரணதண்டனை பெற்ற படைச்சிப்பாய் நீதிமன்றில் கூறிய அதிர்ச்சித் தகவல்களில் ஒருவரின் பெயரை குறிப்பிட்டிருந்தான். அவர் இவர்தான். இவரது பெயர் நாகமுத்து செல்வரத்தினம். ( இல.43. பொன்னம்பலம் வீதி அரியாலை). இவர் ஒரு ஆசிரியர். ஆனால் யாழ் கல்வித்திணைக்களத்தில் இணைக்கப்பட்டிருந்தார்.) இவரையே தலைகீழாக கட்டித் தொங்கப் போட்டு பிளேட்டால் கீறிக் கீறி கொலை செய்ததாக குறித்த படைச்சிப்பாய் தெரிவித்திருந்தான். இவர் எதற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது தொடர்பான ஊகங்களை முழுமையான தகவல்களாக நாம் பின்னர் தருவோம்.
அருளையா நவநேசன் தொடர்பாக தனது நட்புகளுக்கு தெரிவித்துவிட்டு சென்ற கோபாலபிள்ளை சீலனும் குறித்த செம்மணிப் பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் சீலன் காணாமல் போவதற்கு முதல்நாள் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கச்சேரி நல்லுார் வீதியில் மூத்தவீநாயகர் ஒழுங்கையில் 2வது ஒழுங்கையில் சீலனின் வீடு உள்ளது. சறோ அக்கா என அப்பகுதியைச் சேர்ந்தவர்களால் அழைக்கப்படும் சீலனின் தாயார், சீலன் காணாமல் போன பின் இராணுவ முகாம் தொடங்கி சகல அலுவலகங்களுக்கும் ஏறி இறங்கிய ஒருவர். பிறந்த நாளுக்கு அடுத்த நாள் 4 பவுண் சங்கிலி மற்றும் மோதிரங்கள் அணிந்து கொண்டு 60 ஆயிரம் பணமும் கொண்டு வியாபாரம் செய்யவென போனவன் எங்கே என கதறியுள்ளார். சீலனின் பிறந்ததினத்திற்கு அரியாலைப்பகுதி சிவில் நிர்வாக அலுவலகத்தில் இருந்தும் சில ஆமிக்காரங்கள் வந்ததாக கூறியிருந்தார் சறோ அக்கா.
சீலனுடன் காணாமல் போன இன்னும் ஒரு இளைஞன் குணரத்தினம் வசந்தன் 27 வயது. இவனும் வியாபார நடவடிக்கைக்காக சிவில் நிர்வாக நடவடி்கையில் இருந்த படையினருடன் நட்புறவு பேணியவர். அரியாலை புறுாடி வீதியில் தற்காலிகமாக வாடகை வீட்டில் திருமணம் முடித்த தனது சகோதரி குடும்பத்துடன் வசிந்து வந்தார். அரியாலைப் பகுதிக்கு சென்ற போது காணாமல் போனார். இவரிடம் தென்மராட்சிக்கு செல்வதற்கான வியாபார பாஸ் இருந்ததாக சகோதரி தெரிவித்திருந்தார். வியாபார நடவடிக்கைக்கு செல்லும் போது பெருமளவு பணமும் கொண்டு சென்றதாக வசந்தனின் சகோதரி அந் நேரம் தெரிவித்திருந்தார். வசந்தனின் சகோதரியின் கணவர் கிறீஸ்தவர். வசந்தனின் சகோதரியும் கணவரும் அந் நேரத்தில் படையினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஏபிரகாமை சந்தித்து தமது சகோதரன் காணாமல் போனது தொடர்பாக படை உயரதிகாரியுடன் தொடர்பு கொண்டு விடுவிக்குமாறு கேட்டிருந்தார்கள்.
ஏபிரகாம் அந் நேரம் காணாமல் போன பலரது உறவுகளுக்கு தெய்வம் போல காணப்பட்டார். ஆனாலும் அவரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர ஏனையோரை கண்டு பிடிக்க முடியாது போனது. அதே நேரம் ஏபிரகாம் 04.07.1996ம் திகதி ஸ்ரான்லி வீதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காயமுற்று சில வாரங்களின் பின் கொழும்பில் மரணமானர். ( இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பின்னர் விபரங்களைத் தருவோம்)
தொடரும்……

