லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்த நொருங்கிய காட்சிகள்!! வீடியோ
குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் செல்லப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதை ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
விமானம் புறப்பட்டு சிலநிமிடங்களில் மருத்துவர்களின் விடுதியின் மீது விழுந்து நொருங்கியது என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பிரிட்டன் நேரப்படி மாலை 6:25 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10:55) தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்ததாக லண்டனின் கேட்விக் விமான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கேட்விக் விமான நிலைய நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போது விபத்துக்குள்ளான AI171 விமானம், மாலை 6:25 மணிக்கு லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்தது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளன. விமான நிலைய பகுதிக்கு வெளியே புகை காணப்பட்டதாகவும், அதன் பிறகு மொத்த குழுவினரும் விசாரணைக்காக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் ஆமதாபாத் விமான நிலையத்தின் 1வது முனையத்தின் மேலாளர் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.
இருப்பினும் வெளியாகியுள்ள படங்களில் விமானத்தில் நெருப்பு எரிவதையும் புகை எழும்புவதையும் காணலாம். விரிவான தகவல்கள் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
ஆமதாபாத் நான்காவது போலீஸ் மண்டல துணை காவல் ஆணையர் கண்ணன் தேசாய், விமானம் விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்தியுள்ளார்.
“விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனிநகர் பகுதியில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. அது எந்த வகையான விமானம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை” என்று ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
“விமானம் விபத்துக்குள்ளான பிறகு தீப்பிடித்தது. தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன,” என்று தீயணைப்பு அதிகாரி ஜெயேஷ் காடியா தெரிவித்தார்.
விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ‘ஃபிளைட் ரேடார் 24’, “ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. அந்த விமானம் புறப்பட்ட சில விநாடிகளுக்குப் பிறகு எங்களுக்கு கடைசி சிக்னல் கிடைத்தது,” என்று சமூக ஊடக தளமான எக்ஸில் பதிவிட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 10:08 மணிக்கு தரையில் இருந்து 425 அடி உயரத்தில், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விமானம் சிக்னலை இழந்ததாக ஃப்ளைட் ரேடார் 24 தெரிவித்துள்ளது.
ஃபிளைட் ரேடார் 24-இன் கூற்றுப்படி, விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஆகும்.
ஏஎன்ஐ செய்தி முகமையின் கூற்றுப்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர், மாநில உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.
ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து சம்பவத்திற்கு குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ள அவர், “ஆமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவமான ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்து நான் வருத்தமடைந்தேன். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்த பயணிகளுக்கு உடனடி சிகிச்சைக்கான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்,” என்று கூறியுள்ளார்.
மேலும், “காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காகக் கொண்டு செல்ல பிரத்யேக அவசரக்கால வழித்தடங்களை ஏற்பாடு செய்வதற்கும், முன்னுரிமையின் அடிப்படையில் மருத்துவமனையில் அனைத்து சிகிச்சை ஏற்பாடுகளையும் உறுதி செய்வதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். “விமான நிலையம் தற்போது செயல்படவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.










