காரையும் பணத்தையும் கொள்ளையிட்ட ஹரக் கட்டா: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
2015 ஆம் ஆண முல்லேரியாவில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்து, உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி, வீட்டிலிருந்து ஒரு காரையும் 20,000 ரூபா பணத்தையுமர கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ஹரக் கட்டாவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணையை கொழும்பு உயர் நீதிமன்றம் ஜூலை 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கு இன்று (20) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கைக் கையாளும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா விடுமுறையில் இருப்பதால், வழக்கின் விசாரணைக்கு மற்றொரு திகதி வழங்குமாறு அவரது கனிஷ்ட வழக்கறிஞர் நீதிமன்றத்தை கோரினார்.
அதன்படி, வழக்கின் மேலதிக விசாரணையை ஜூலை 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, நீதிமன்றத்தில் ஆஜரான சாட்சி இந்திராணி டயஸை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எச்சரித்தார்.
பயங்கரவாத புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று திரும்பும்போது ஊடகங்களுக்குப் பேச முடியாதபடி மறைத்தது குறிப்பிடத்தக்க சம்பவமாகும்.
ஜூன் 10, 2015 அன்று முல்லேரியா பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து, உரிமையாளரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, காரையும் இருபதாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்ததாக ஹரக் கட்டா உள்ளிட்ட இருவருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

