புதினங்களின் சங்கமம்

கொத்மலை பஸ் விபத்து – பலியானோர் 21ஆக உயர்வு!! நடந்தது என்ன? பஸ்சில் பயணித்த ஆமிக்காரனின் பரபரப்பு பேட்டி! வீடியோக்கள்

கொத்மலையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சிக்கிக் கொண்டவர்களில் 12 பேரை மீட்டேன் என அந்த பஸ் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆண் பயணி ஒருவர் தெரிவித்தார்.

இராணுவத்தில் பணியாற்றும் இந்த பயணி, விடுமுறையை முடித்துக்கொண்டு முகாமுக்கு திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளார். பஸ் சற்று வேகமாக வந்தது.

அவ்விடத்தில் திடீரென பிரேக் அடிக்கப்பட்டது. அப்போது பஸ், இடதுபுறத்தில் புரண்டு விழுந்து விபத்துக்கு உள்ளானது. நான், மயங்கி விட்டேன், எனினும், ஓரிரு நிமிடங்களில் மயக்கம் தெளிந்தது. கடுமையாக பாதிக்காதவர்களை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, ஏனையவர்களை மீட்டேன், மூன்று அல்லது நான்கு சின்ன பிள்ளைகளையும் மீட்டேன். மொத்தமாக 12 பேரை மீட்டேன் என்றார்.

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தநிலையில், உயிரிழந்த 21 பேரின் உடல்களும் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த பேருந்தில் சுமார் 75 பயணிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் கொத்மலை பொது வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடத்திவரும் கொத்மலை பொலிஸார், சென்றுக்கொண்டிருந்த பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

விபத்து குறித்து ஆராய்வதற்காக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (video-fb)