நல்லுார் முருகனின் பெயரை வைத்து அலங்கோலமா?? நல்லுார் முதலாளி உதயன் பத்திரிகை சரவணபவன் மீது பாய்ந்தார் !!
நல்லூர் ஆலயத் திருவிழா தொடர்பாக யாழ் மாவட்ட எம்.பி, ஈ.சரவணபவனிற்கு சொந்தமான உதயன்
பத்திரிகையில் போலியானதும், விசமத்தனமானதுமான செய்திகள் வெளியாகுவதாக ஆலய நிர்வாகம்
குற்றம்சாட்டியுள்ளது. நல்லை ஆலய உரிமையாளர், தொலைபேசியில் சரவணபவனை அழைத்து
“அர்ச்சனை“யும் வழங்கினார்.
நல்லூர் ஆலயத்திற்கு தூக்கு காவடிகள் நுழைவதற்கு ஆலய நிர்வாகம் தடை விதித்துள்ளதாக சில
தினங்களின் முன்னர் உதயன் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது. இந்த செய்தி ஆலய
நிர்வாகத்தை அதிருப்தியடைய வைத்தது.
காரணம், தூக்கு காவடிகளை ஆலய நிர்வாகம் தடை செய்திருக்கவில்லை. அந்த முடிவு
பாதுகாப்பு தரப்பினர் எடுத்தது. இந்தநிலையில், பக்தர்களிடம் ஆலய நிர்வாகத்தை பற்றிய
தவறான செய்தியை பரப்புவது ஏன் என தொலைபேசியிலேயே சரவணபவனை அழைத்து, ஆலய
உரிமையாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆலய நிர்வாகம் தொடர்பாக தொடர்ந்து, உதயனில் விசமத்தனமான செய்திகள்
வெளியாகுவதையடுத்தே, தொலைபேசி வழியாக ஆலய நிர்வாகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ஆலயத்தில் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடிகள் குறித்து உதயனில் விசமத்தனமான
செய்தியொன்று வெளியாகியிருந்தது.
ஆலயத்திற்கு வரும் பக்தர்களை சோதனை செய்யும் பாதுகாப்பு அமைப்பை அமைக்க யாழ் மாநரசபை
20 இலட்சம் ரூபாவை செலவிட்டது, மக்களின் வரிப்பணத்தை மாநகரசபை இப்படி
விரயமாக்கலாமா?, பொலிசாரின் பாதுகாப்பு பணிக்கான உணவு, குடிநீர் செலவுகளையும்
பட்டியலிட்டிருந்தது உதயன்.
போதாதற்கு, மடு தேவாலயத்திலும் மக்கள் கூடுகிறார்கள், அங்கு இப்படி விரயம்
செய்யப்படவில்லையென குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த செய்தி தொடர்பில், யாழ் மாநகரசபையின் மூத்த நிர்வாக அதிகாரிகள் சிலர் ஏற்கனவே
சில தகவல்களை பகிர்ந்திருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில்
யாழ் மாநகரசபைக்கு தெரிவான சில கிறிஸ்தவ உறுப்பினர்களே, மாநகரசபை உதயன் செய்தியாளர்
மூலமாக இந்த செய்தியை பிரசுரித்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
அத்துடன், இந்த விவகாரத்தில் சில தெளிவுபடுத்தல்களையும் மேற்கொண்டனர்.
நல்லூர் ஆலயத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாதுகாப்பு தரப்பினரிற்கான
செலவினங்கள் உள்ளிட்ட திருவிழாவிற்கான மாநகரசபையின் அனைத்து செலவினங்களுக்குமான
மதிப்பீடு சுமார் 50 இலட்சம்தான். எனினும், நல்லூர் ஆலய திருவிழா காலத்தில் கடைகள்
நிறுவுவதற்கான குத்தகை மூலம், இம்முறை 2 கோடிக்கும் அதிகமான பணத்தை வருவாயாக யாழ்
மாநகரசபை பெற்றுள்ளது. வருடாந்தம் சுமார் ஒன்றரை கோடி ரூபாயை நல்லூர் ஆலய
திருவிழாவின் மூலம் யாழ் மாநரசபை வருவாயாக பெற்று வருகிறது.
இம்முறையும் சுமார் ஒன்றரைக் கோடிக்கும் அதிக வருவாயை யாழ் மாநரசபை பெற்றுக்கொள்கிறது.
எனினும், ஆலயத்திற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, 20 இலட்சம் ரூபாயை
செலவிட்டதை, யாழ் மாநரசபையிலுள்ள சில கிறிஸ்தவ உறுப்பினர்கள் சர்ச்சையாக சித்தரிக்க
முயன்று, உதயன் பத்திரிகையின் ஊடாக செய்தி வெளியிட்டிருந்தனர்.
நல்லூர் ஆலய பராமரிப்பு பணிகள் அனைத்தும், ஆலய நிர்வாகம் மூலமே மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. இன்று வரை அடியவர்களிடம் ஒரு ரூபாய் அர்ச்சனை பணத்தை மட்டுமே பெற்று
வருகிறது. முன்னர், ஆலய நீர் விநியோக பணிக்கு மாநகரசபை தண்ணீர் பௌசர்கள்
பயன்படுத்தப்பட்டன. தற்போது, றியோ ஐஸ்கிறீம் உரிமையாளர் ஆலயத்திற்கு வழங்கிய தண்ணீர்
பௌசரின் மூலமே விநியோக பணிகள் நடந்து வருகின்றன.
நல்லூர் ஆலயத்தால் யாழ் மாநரசபை வருவாயை ஈட்டிவரும் நிலையில், தற்போதைய மாநகரசபை
நிர்வாகத்திலுள்ள சில கிறிஸ்தவ உறுப்பினர்கள் சர்ச்சையை தூண்ட முயற்சிப்பதாக விசனம்
தெரிவித்துள்ளனர்.

