புதினங்களின் சங்கமம்

சஹ்ரான் வலையமைப்பின் ஒரு பில்லியன் ரூபா சொத்துக்களும் 134 மில்லியன் பணமும் முடக்கம்

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் காசிமின் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான
சொத்துக்களும் 134 மில்லியன் ரூபா வங்கி வைப்புக்களும் முடக்கப்பட்டுள்ளதாக குற்றப்
புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சாணி அபயசேகர இந்தத் தகவலை
ஊடகவியலாளர்களுக்கு இன்று தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் முக்கிய
சூத்திரதாரி சஹ்ரான் காசிமின் கீழான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உள்ளிட்ட வலையமைப்பினால்
பராமரிக்கப்பட்ட ஒரு பில்லியன் ரூபா சொத்துக்களும் 134 மில்லியன் ரூபா வங்கி
வைப்புக்களுமே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல்களின் பின்னர் கைது செய்யப்பட்டு
தடுத்துவைக்கப்பட்டுள்ளோரில் 63 சந்தேகநபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த
சொத்துக்களும் பணமும் முடக்கப்பட்டன என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்
சுட்டிக்காட்டினார்.

எனினும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் காசிமின் 7 பில்லியன் ரூபா
பெறுமதியான சொத்துக்களும் 140 மில்லியன் ரூபா வங்கி வைப்புக்களும் முடக்கப்பட்டன என்று
கடந்த மே மாதம் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.