யாழ் சுன்னாகம் பூதவராயர் வீதிப் பலகையைப் பிடுங்கி எறிந்த காவாலிகள்!!
சுன்னாகம் பூதவராயர் வீதி வெள்ளவாய்க்காலாகவும் பயன்படுத்தப்பட்டு வரும் வீதியாகும். அயல் பிரதேசங்களில் மழை காலத்தில் ஏற்படும் வெள்ளமானது அந்த வீதியால் பாய்ந்து மதகு வழியாக கே.கே.எஸ் வீதியின் தெற்குப் பக்கத்திற்கு செல்வது வழமை. கே.கே.எஸ் வீதியில் உள்ள பூதவராயர் வீதி மதகுக்கு அருகில் உள்ள சிறிய இடத்தினால் நடந்து செல்லும் மக்கள் வீதியின் தெற்குப் பகுதிக்குச் செல்வது வழமை. ஏனெனில் அந்த மதகை நடந்து வீதியால் கடக்கும் துாரத்தை விட அந்த சிறிய இடத்தால் கடக்கும் துாரம் குறுகியது. மக்கள் நடந்து செல்லும் இந்த நடைபாதையை சில மோட்டார் சைக்ளில் ஓட்டிகளும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். குறித்த பாதை மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு இறக்கம் அதிகமாக உள்ள அதே நேரம் பூதவராயர் வீதியால் வருபவர்களை மோதி விடும் ஆபத்தும் உள்ளதாக இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அந்தப் பாதையால் வந்த அப்பிரதேசசபைக்குச் சொந்தமான உழவு இயந்திரத்தை மோத முற்பட்ட சம்பவம் உட்பட சில விபத்துக்களும் இதனால் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பாதையை நடைபாதைக்கு மாத்திரம் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தடை ஏற்படுத்த பிரதேசசபை ஊழியர்கள் முயன்றுள்ளனர். அந்த வீதியின் பெயர்ப்பலகையை குறித்த பகுதியில் சிறிது நகர்த்தி நட்டுள்ளார்கள்.
இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். இந் நிலையில் அந்த பெயர்ப்பலகை நேற்று இரவு பிடுங்கி எறியப்பட்டுள்ளது.




