கட்சிகளின் வேட்பு மனு நிராகரப்பு தொடர்பாக யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் அதிர்ச்சி தகவல்!!
யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் சிவபாதசுந்தரம் அம்பலவானர் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட பரபரப்பான கருத்தை இங்கு தந்துள்ளோம்…
நியமனப்பத்திரங்கள் இற்றைப்படுத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது தேர்தல் திணைக்களம் அடுத்தகட்ட வேலைகளில் மூழ்கியிருக்கும். அரச அச்சகம் இரவு பகலாக இயங்கிக்கொண்டிருக்கும். அனுமதிக்கப்பட்ட கட்சிகள் ,சின்னங்கள் ,வேட்பாளர் பெயரும் இலக்கமும் பொறித்த வர்த்தமானி வெளிவரக்காத்திருக்கும். மாதிரி வாக்குச்சீட்டுகள் தயாரிக்கும் பணியும் ஒவ்வொரு மாவட்டங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும்.
இந்த நிலையில் தெரிவத்தாட்சி அலுவலர்களால் நிராகரிக்கப்பட்ட நியமனப்பத்திரங்கள் தொடர்பாக ஒருதரப்பார் வாதவிவாதங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பர். இறந்த சடலத்தின் அருகிருந்து அப்படிச்செய்திருந்தல் காப்பாற்றியிருக்கலாம், உரிய வேளைக்கு கொண்டுபோயிருந்தால் காப்பாற்றியிருக்கலாம். என்று கூறுவதால் உயிர்திரும்ப வரப்போவதில்லை. ஆனாலும் சில கட்சியினர் சாவித்திரி வேடம்பூண்டு எமனோடு போராடும் தீர்க்க சுமங்கலி நாடகம் ஆடுகின்றனர்.
வெளியில் நின்று விமரிசனம் செய்பவர்களின் கண்களுக்கு நிராகரிக்கப்பட்ட பத்திரங்களும் அந்தக்கட்சிகளும் மட்டுமே கண்களுக்குப்புலப்படுகின்றன. அவற்றைப்பற்றி சுவாரசியமாகப்பேசுவதிலேயே சுகம்காண்கின்றனர்.
உண்மையில் தெரிவத்தாட்சி அலுவலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமனப்பத்திரங்களில் பலவும் சட்டத்தின் ஓட்டைகளுக்குள்ளால் புகுந்து விளையாடியவையாக இருப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை.
நான் ஒரு மாவட்டத்தில் உதவித்தேர்தல் ஆணையாளராக இருந்த சமயம் ஒரு போராளி இயக்கமாக இருந்து அரசியல் கட்சியாக மாறிய தரப்பின் பிரதிநிதி ஒருவர் என்னிடம் ஆலோசனை கேட்டார்.
அந்தக்காலத்தில் விடுதலைப்புலிகளுக்குப்பயந்து அவ்வாறான கட்சி உறுப்பினர்கள் சுதந்திரமாக நடமாடுவது கிடையாது. ஆனால் அவர்கள் குறித்த தேர்தலில் போட்டியிட விரும்பினார்கள்.
உங்களுக்குத்தெரியுந்தானே எங்கடபெடியள் சைன் வைக்க வராங்கள். ஐ சி இருக்குது. என்றார்.
தேர்தல் விதிகளை இம்மியளவும் பிசகாமல் கடைப்பிடிப்பதில் நாங்கள் கவனம்செலுத்துவோம். நியமனப்பத்திரம் சமர்ப்பிக்க எல்லாரும் வரத்தேவையில்லை. சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட இருவர் மட்டுமே உள்ளே வரலாம். ஜேபியின் உறுதிப்படுத்தல் அவசியம். என்பதை பலதடவை அழுத்திச்சொல்லவும் அவர்அதை பலமாகப் பற்றிக்கொண்டார்.
நியமனப்பத்திரங்கள் யாவும் ஒழுங்காகச்சமரப்பிக்கப்பட்டன. பிரதிகள் ஆட்சேபனைக்காக உடனடியாக வெளியில் ஒட்டப்பட்டன. இறுதியில் அந்தக்கட்சியின் அனைத்து நியமனங்களும் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேடிக்கை என்னவென்றால் பல வேட்பாளர்களுக்குத் தங்கள் பெயர்கள் நியமனப்பத்திரத்தில் சேர்க்கப்பட்டிருந்ததே தெரியாது. சட்டம் சத்தியக்கடதாசியையும், வெளிப்படுத்தல்களை உறுதிப்படுத்துவதையும், யாரால் எப்பொழுது சமர்ப்பிக்கப்படுகிறது என்பதையும் மட்டுமே பார்க்கிறது.
சமாதான நீதவான்களும் அவர்களே கட்சி முதன்மை வேட்பாளர்களும் அவர்களே என்றிருக்கும்போது சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட தவறான பல நியமனப்பத்திரங்களைத் தேர்தல்விதிகளும் சட்டங்களும் பாதுகாக்கின்றன என்றே கொள்ளவேண்டியிருக்கின்றது.
ஏனெனில் ஊழலைத்தவிர்த்து அரசியல் இல்லை என்பதை எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தும் மாற்றமுடியாதிருக்கின்றதே!

