சர்வதேச ரீதியில் போட்டியிட்டு வென்று வந்த இலங்கை ஆணழகனை அவமானப்படுத்திய விளையாட்டுத்துறை அமைச்சு
சர்வதேச ரீதியாக இலங்கைக்கு பெருமை தேடித்தந்த மலையக இளைஞனை அவமானப்படுத்தும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ செயற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த மாத இறுதியில் ஆசிய ஆணழகன் போட்டி சீனாவில் நடைபெற்றது. இதில் 30 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இலங்கை சார்பாக பங்கேற்ற மாதவன் ராஜ்குமார் கடும் போட்டிக்கு மத்தியில் வெண்கல பதக்கத்தை பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இந்த வெற்றியின் மூலம் எதிர்வரும் நவம்பர் 11ம் திகதி டுபாயில் இடம்பெறும் உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
நாடு திரும்பிய மாதவன் ராஜ்குமார் வெண்கல பதக்கத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்துள்ளார். இதன்போது அவரை கௌரவிக்கும் வகையில் தேனீர் கோப்பையை வழங்கியுள்ளார்.
ராஜ்குமாருக்கு விளையாட்டு அமைச்சில் வைத்து தேனீர் கோப்பையை பரிசாக கொடுத்துள்ளமை மலையக மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மலையகத்தில் தோட்டத்தொழிலாளியின் மகனாக அவதரித்து நாட்டுக்கு பெருமை ஈட்டி கொடுத்த வீரனுக்கு தேனீர் கோப்பையை வழங்கியமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ராஜ்குமாருக்கு உரிய கௌரவத்தை வழங்கி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற அரசு ஒத்துழைக்க வேண்டுமென்பதே மலையக மக்களின் வேண்டுகோளாக அமைந்துள்ளது.

