புதினங்களின் சங்கமம்

மணிவண்ணனையும் மயூரனையும் மாநகரசபை உறுப்புரிமையில் நீக்க சைக்கிள் கட்சி கஜேந்திரர்கள் கடிதம் எழுதினர்!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள் சட்டத்தரணி வி.மணிவண்ணன், மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ்ப்பாணம் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் செயலாளருக்கும் அந்தக் கடிதத்தின் பிரதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கின்றது.

அதனடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சிபாரிசின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் விஸ்வலிங்கம் மணிவண்ணன், எமது கட்சியின் நியமன உறுப்பினராக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு நியமிக்கப்பட்டார்.

எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒழுக்காற்று நடவடிக்கையால் விஸ்வலிங்கம் மணிவண்ணன், அந்தக் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

அதனால் அவரை யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்புறுப்புரிமையிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று அகில இலங்கை தமிழ் காங்கிலஸுன் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திகதியிடப்பட்டுள்ளது.

அன்றைய தினமே யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து சட்டத்தரணி வி. மணிவண்ணனை நீக்கக் கோரும் எழுத்தாணை மனு, மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளப்பெறப்பட்டிருந்தது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரிவாகிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட மயூரனது மாநகர சபை உறுப்புரிமையை நீக்குமாறும் கட்சி கோரியுள்ளது.