நல்லைக் கந்தனின் வருடாந்த மஹோற்ஷவத்திற்கான காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிலில் சென்று வழங்கப்பட்டது.இந்த நிகழ்வு இன்று(சனிக்கிழமை) காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது.முதல் நிகழ்வாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்றது. அதனையடுத்து, பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களுக்கான காளாஞ்சி ஒற்றைத் திருக்கை, மாட்டுவண்டி மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டதுடன், கலாசார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான அழைப்புப் பத்திரிகையும் காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா, எதிர்வரும் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.