FEATUREDபுதினங்களின் சங்கமம்

இலங்கை ஆட்சி மாற்றமும், சிறுபான்மைச் சமூகங்களும்: சந்தர்ப்பங்கள் , சவால்கள் குறித்த ஒரு பார்வை!

பல புள்ளிவிபரவியல் மற்றும் கணித ‘விற்பன்னர்கள்’ ‘நிகழவே முடியாது’ என சூளுரைத்த அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதேபோல, (தென்னிலங்கை சிங்களச் சமூகத்திற்கு மத்தியில் இடம்பெற்று வந்த மாற்றங்களை துல்லியமாக அவதானித்து வந்தவர்களை தவிர வேறு) எவரும் எதிர்பாராத விதத்தில் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிருக்கிறார்.
சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை அரசியலில் நடந்திருக்கும். இந்த யுக மாற்றத்தை (Paradigm Shift), அதற்கு பங்களிப்புச் செய்த மக்கள் ஆக்ரோஷமான கூச்சல்களுடன் கூடிய பேரணிகளோ அல்லது பகட்டான வெற்றி விழா கொண்டாட்டங்களோ இல்லாமல் மிகுந்த அமைதியுடனும், சுய கட்டுப்பாட்டுடன் வரவேற்றிருக்கிறார்கள்.
பொதுவாக தேர்தல்களில் பிரதான எதிர்க்கட்சி, ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் கட்சியின் மீதான மக்கள் அதிருப்தியை (Anti – incumbency Factor) தனக்குச் சாதகமான விதத்தில் பயன்படுத்திக் கொள்வது வழக்கம். ஆனால், அந்த அணுகுமுறைக்கு பதிலாக, சுதந்திரத்தின் பின்னர் ஆட்சி செய்த அனைத்துக் கட்சிகளையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் ஒரு பிரச்சார உத்தியையே இம்முறை என்பிபி முன்னெடுத்திருந்தது, அந்தப் பிரச்சார உத்தி பிரதான எதிர்க் கட்சியான எஸ்ஜேபி யையும் ஒரு பிரதிகூல நிலையில் கொண்டு போய் வைத்தது.
“எல்லோரும் திருட்டுப் பயல்கள்” (ஒக்கம ஹொரு) மற்றும் ‘நாடு அநுரவுக்கு’ (ரட்ட அநுரட்ட) என்ற இரண்டு முதன்மையான சுலோகங்களையும் 56 இலட்சத்துக்கு மேற்பட்ட இலங்கை வாக்காளர்கள் ‘சரி தான்’ என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த விதத்தில், ‘System Change’ என்பதை இதுவரையில் ஒரு தேர்தல் சுலோகமாக முன்வைத்திருக்காத இந்தியாவையும் உள்ளிட்ட பல தென்னாசிய நாடுகளுக்கு இலங்கை இந்தத் தேர்தலின் மூலம் ஒரு முன்னுதாரணத்தை வழங்கியிருக்கிறது.
கடந்த திங்கட்கிழமை 23ஆம் தேதி தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற அதிகார கைமாற்றம் தேர்தலில் தோல்வியடைந்த ஜனாதிபதி ஒருவரிடமிருந்து, வெற்றியீட்டிய வேட்பாளர் வெறுமனே ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்றுக் கொண்ட மாற்றம் என்ற விதத்தில் மட்டும் முக்கியத்துவம் பெறவில்லை. அதற்கு அப்பால் பல விதங்களில் குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக அது இருந்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை.
2022 அறகலய மக்கள் எழுச்சியின் போது இன, மத பேதமில்லாமல் பல்லாயிரக்கணக்கான இலங்கைப் பிரஜைகள் எழுப்பிய சுலோகங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கியிருக்கும் ஒரு பணிப்பாணையாகவே (Mandate) அதனை நோக்க வேண்டியிருக்கின்றது.
ஒட்டுமொத்த கட்டமைப்பையும் முழுமையாக சுத்திகரிப்பதே இன்றைய இலங்கை சமூகம் எதிர்கொண்டு வரும் பன்முக நெருக்கடிகளுக்கான தீர்வாக இருந்து வருகின்றது என்பதே பெரும்பாலான இலங்கையர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் பிரதிபலிப்பே அநுர குமார திசாநாயக்கவுக்குக் கிடைத்திருக்கும் 56 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள்.
தனக்குக் கிடைத்திருக்கும் பணிப்பாணையின் போதாமைகள் (42%) குறித்தும், (ஒவ்வொரு சமூகத்தினதும்) வாக்குகளின் பிரதிநிதித்துவ மட்டம் (Composition) குறித்தும் தான் நன்கு அறிந்து வைத்திருப்பதாகச் சொன்ன புதிய ஜனாதிபதி, அதனையடுத்து ‘இந்தத் தடவை என் மீது நம்பிக்கை வைக்காதவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் விதத்தில் நடந்து கொள்வேன்’ என்று சொன்ன வார்த்தைகள் முக்கியமானவை. அதாவது, அவர் சொன்னவற்றிலிருந்து சொல்லாமல் விட்டதை நாங்கள் ஊகித்துக் கொள்ள வேண்டும்.
(முஸ்லிம் வாக்குகளில் என்பிபி ஐ நோக்கிய ஒரு சிறு நகர்வு தெளிவாக அவதானிக்கப்பட்டிருந்த போதிலும்) வடக்கு கிழக்கு தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் ஆகியோரின் முதன்மையான தெரிவு அநுர குமாரவாக இருந்து வரவில்லை. என்பது நிதர்சனம். அதாவது, தென்னிலங்கை சிங்கள வாக்கு வங்கியில் என்பிபி யை நோக்கி ஏற்பட்டிருக்கும் பாரியளவிலான நகர்வுக்கு இணையான விதத்திலான ஒரு நகர்வு (முஸ்லிம்களையும் உள்ளடக்கிய) சிறுபான்மைச் சமூகங்களின் வாக்கு வங்கிகளில் ஏற்பட்டிருக்கவில்லை. இந்தப் பின்னணியில், அச்சமூகங்களை நோக்கி நீட்டப்பட்ட ஒரு நேசக் கரமாகவே புதிய ஜனாதிபதியின் உரையை நோக்க வேண்டியிருக்கிறது. 2019 இல் கோட்டாபய ராஜபக்ச தனது பதவியேற்பு வைபவத்தில் நிகழ்த்திய உரையிலிருந்து பல வழிகளிலும் வேறுபட்டது இந்த உரை. ‘எல்லோரும் ஓரணியில் இணைந்து ஒரு புதிய இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்ற விதத்தில் விடுக்கப்பட்டிருக்கும் ஓர் அழைப்பு இது.
இலங்கையில் இப்பொழுது நிகழ்ந்திருக்கும் இந்த மாற்றத்தை ‘எமக்கு கிடைத்திருக்கும் மிக அரிதான ஒரு வரலாற்றுத் தருணம்’ என்ற கண்ணோட்டத்தில் பார்த்து, ஒவ்வொரு சமூகமும் தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை ஆழ்ந்த சிந்தனையுடனும், தூர நோக்குடனும் முன்னெடுக்க வேண்டிய ஒரு கால கட்டம் இப்பொழுது உதயமாகியிருக்கின்றது. அதே வேளையில், தேசிய மக்கள் சக்தி போஷித்து வளர்க்க விரும்பும் புதிய அரசியல் கலாசாரத்தில் இரகசிய ‘டீல்களுக்கு’ இனிமேல் இடமில்லை என்பதனையும் எல்லோரும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு தமிழ் அரசியலைப் பொருத்தவரையில் (போர் முடிவடைந்து கிட்டத்தட்ட 15 வருடங்களின் பின்னர்) தமிழ் சமூகம் இன்றைய நிலையில் முன்னெடுக்க வேண்டிய அரசியல் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் பல்வேறு தளங்களில் இடம்பெற்று வருகின்றன. ‘சிங்களவனுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என கடும் இனவாத அணுகுமுறையுடன் ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் பரப்புரைகளை மேற்கொண்டு வந்த நிலையிலும் கூட, இந்தத் தேர்தலில் குறிப்பாக வடக்கில் மூன்று சிங்கள வேட்பாளர்களும் கூட்டாக கணிசமான அளவில் வாக்குகளை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். ‘இது எதன் வெளிப்பாடு’ என்ற கோணத்திலும் சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.
துரதிர்ஷ்டவசமாக மலையக தமிழர் அரசியலும், முஸ்லிம் அரசியலும் இன்னமும் கொழும்பு அரசியலில் யாருடன் கூட்டணியில் இணைவது மற்றும் அதன் மூலம் (சம்பந்தப்பட்ட தலைவர்கள்) பயனடைவது எப்படி என்ற புள்ளியையே சுற்றிக் கொண்டிருக்கின்றன.
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் எவரும் இத்தேர்தலில் அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவளிக்கவில்லை; அத்துடன் அவரையும், என்பிபி யையும் கடுமையாக நிராகரிக்கும் விதத்தில் அவர்கள் பரப்புரைகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலிலும் அவர்கள் இதே விதமான அவதூறு பிரச்சாரங்களை முன்னெடுத்தால் கடும் பின்னடைவுகளை சந்திப்பார்கள் என்பதை மட்டும் இப்பொழுது கூறி வைக்க வேண்டும்.
இந்தப் பின்னணியில், இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்தப் புரட்சிகரமான மாற்றத்தை முஸ்லிம் சமூகம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? அடுத்து வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அச்சமூகத்தின் முன்னால் இருக்கும் தெரிவுகள் எவை? தொடர்பாடலுக்கும், உரையாடலுக்கும் கூட்டுச் செயற்பாடுகளுக்குமென கொழும்பு அரசியலில் உருவாகியிருக்கும் புதிய வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வது எப்படி?
மேற்படி கேள்விகளுக்கான பதில்களை கண்டறிவதற்கென சமூக செயற்பாட்டாலளர்களும், புத்திஜீவிகளும் விரிவான கலந்தாராய்வுகளை (Deliberations) ஏற்பாடு செய்ய வேண்டிய தருணம் இப்பொழுது வந்திருக்கிறது.
இந்தத் தேர்தலில் அவதானிக்கப்பட்ட ஒரு சிறப்பம்சம் நாடெங்கிலும் முஸ்லிம் வாக்காளர்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு திசைகாட்டிக்கு வாக்களித்திருப்பது. என்பிபி சார்பு உள்ளூர் சமூகத் தலைவர்கள் இல்லாத நிலையிலும், சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில் என்பிபி யின் கட்சி கட்டமைப்பு ஓரளவுக்கு பலவீனமானதாக இருந்து வந்திருக்கும் நிலையிலும் கூட, இந்த அளவுக்கு அநுர குமாரவுக்கு வாக்குகள் அளிக்கப்பட்டிருப்பது வியப்பூட்டும் ஒரு விடயம்.
பல முஸ்லிம் குடும்பங்களில் பெற்றோர் சஜித் / ரணில் எனத் தெரிவுகளை மேற்கொண்டிருந்த பொழுது, பிள்ளைகள் (எவ்வித வெளித் தூண்டுதல்களும் இல்லாமல்) அநுர குமாரவுக்கு தமது வாக்குகளை அளித்திருந்தார்கள். 1980 களில் பிறந்தவர்கள், 90’s Kids என்று அழைக்கப்படுபவர்கள், 2000 இன் பின்னர் பிறந்து முதல் தடவையாக தமது வாக்குகளை பயன்படுத்தியிருப்பவர்கள் ஆகிய அனைவரும் பெரும் எண்ணிக்கையில் திசைகாட்டியை ஆதரித்திருக்கிறார்கள்.
தமது சமூகத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக் கொள்ளும் அரசியல்வாதிகளின் கடந்த கால செயல்பாடுகள் மீது ஏற்பட்டிருக்கும் கடும் அதிருப்தியையும், விரக்தியையுமே முஸ்லிம் வாக்காளர்கள் அவ்விதம் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தலில் அந்தப் போக்கு மேலும் தீவிரமடைய முடியும்.
இந்த எழுச்சித் தருணத்தை சரியாக நெறிப்படுத்தி, உரிய விதத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கு முஸ்லிம் சமூகத்திற்கு அதிக எண்ணிக்கையில் இளம் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். இலங்கையின் புதிய அரசியல் கலாசாரத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் உயரிய விழுமியங்களை முன்னெடுக்கக் கூடியவர்களாகவும், நேர்மை மற்றும் நாணயம் போன்ற உயர் பண்புகளைக் கொண்டவர்களாகவும் அவர்கள் இருந்து வருவது அவசியம்.
2019 இல் இருந்தவாறு இலங்கை சமூகம் இப்பொழுது சிங்களவர் எதிர் சிறுபான்மையினர் என்ற விதத்தில் (Ethnic Polarisation) பிளவுபட்டிருக்கவில்லை. அதற்கு மாறாக, ‘மாற்றத்தை விரும்புபவர்கள்’ மற்றும் ‘மாற்றத்தை விரும்பாதவர்கள்’ என்ற விதத்திலும், இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகள் என்ற விதத்திலும் அது பிளவுபட்டிருக்கின்றது. அடுத்த ஐந்தாண்டுகளில் அந்த இரு பிரிவினருக்குமிடையிலான ஒரு மோதல் களமாகவே அநேகமாக இலங்கை அரசியல் இருந்து வர முடியும்.
பாராளுமன்றத் தேர்தலில் எப்படியாவது தமக்குக் கிடைக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பாராளுமன்றத்தின் சமநிலையை குலைத்து, புதிய ஜனாதிபதியின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்பதே எஸ்ஜேபி யின் இன்றைய எதிர்பார்ப்பு. பல தலைவர்கள் அதனை வெவ்வேறு வார்த்தைகளில் கூறியிருக்கிறார்கள்.
ஜனாதிபதி பதவியேற்பு வைபவம் நிகழ்ந்த ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் கொழும்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த சில எஸ்ஜேபி தலைவர்களின் உடல் மொழியிலும், சொற்களிலும் தொனித்த வன்மம் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. புதிய ஜனாதிபதிக்கு சம்பிரதாயபூர்வமாக வாழ்த்துத் தெரிவிக்கும் பொழுதும் கூட ஒரு சிலரால் அந்த வன்மத்தை மறைத்துக் கொள்ள முடியாதிருந்தது.
தோல்வியில் விரக்தியுற்றிருக்கும் பிரதான எதிர்க்கட்சி ‘System Change’ என்ற கோஷத்தை இப்பொழுது ஒரு ஏளன வார்த்தையாக பார்க்கத் தொடங்கியிருக்கிறது. நாங்கள் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து மரபுரிமையாக பெற்றுக் கொண்டிருக்கும் அரசாங்க கட்சி / எதிர்க் கட்சி அரசியல் முறை (Adversarial Politics ) மிகவும் நெருக்கடியான தருணங்களிலும் கூட எதிர்க் கட்சியால் அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயல்பட முடியாத ஒரு திரிபு மனநிலையை உருவாக்கியிருக்கிறது.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு மேலாக இலங்கையில் பொதுபல சேனா போன்ற இயக்கங்கள் முன்வைத்து வந்திருக்கும் இஸ்லாமாபோபியோ பிரச்சாரம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் சமூகம் தேசியப் பெருவாழ்விலிருந்து அந்நியப்படுத்தப்பட்டிருந்த நிலை என்பன 2022 அறகலயவின் பின்னர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு தணிந்திருந்த ஒரு சூழ்நிலையிலேயே இந்த ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. தேர்தல் மேடைகளில் இனவாதம் – குறிப்பாக இஸ்லாமோபோபியோ – ஒரு பேசுபொருளாக இருந்து வரவில்லை.
சாதாரண சிங்கள மக்களின் நாடித்துடிப்பை துல்லியமாக இனங்கண்டு கொள்ளும் திறனைக் கொண்டிருக்கும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச போன்ற அரசியல் தலைவர்களும், ஞானசார தேரர், அத்துரலியே ரத்தன தேரர் போன்ற சமயத் தலைவர்களும் இத்தகைய கோஷங்களுக்கு இன்றைய இலங்கையில் எந்த விதமான சந்தை மதிப்பும் இருந்து வரவில்லை என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டு, இந்தத் தடவை அடக்கி வாசித்ததை நாங்கள் பார்த்தோம்.
ஆனால், புதிய ஜனாதிபதி செய்யும் அல்லது செய்யாமல் விடும் ஒரு காரியத்தை முகாந்திரமாக கொண்டு அந்தச் சக்திகள் பழைய கோஷங்களை மீண்டும் கையில் எடுக்க முடியும். திடீர் தேசாபிமானிகள் முளைக்கக் கூடிய வாய்ப்பும் இருந்து வருகிறது. ஏனெனில், இனங்களுக்கிடையில் கடும் பதற்ற நிலைமைகளை தோற்றுவிக்கக் கூடிய பல பிரச்சினைகள் (Inflammatory Issues) முழுமையாக தீர்த்து வைக்கப்படாத நிலையிலயே இலங்கையில் (வேறு சில அரசியல், சமூகவியல் காரணிகளின் செல்வாக்கினால்) சிங்கள இனவாத அலை தணிந்திருக்கிறது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இனத்துவ – அரசியல் உச்ச கட்டத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு நாட்டில் ஓர் இரவுக்குள் எல்லாம் முடிவுக்கு வந்து விடும் என எதிர்பார்க்க முடியாது.
ஆனால், ஒரு இடதுசாரி அரசாங்கம் அத்தகைய நெருக்கடிகளை கையாளும் விதம், முன்னைய வலதுசாரி அரசாங்கங்கள் கையாண்ட விதத்திலும் பார்க்க வேறுபட்டதாக இருந்து வரும். மேலும், தேசிய மக்கள் சக்தியின் முதன்மை பங்காளிக் கட்சியான ஜேவிபி தொண்டர் படையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சியாக (Cadre – based Party) இருந்து வருகின்றது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எந்தவொரு நெருக்கடியின் போதும் குறுகிய அறிவித்தலில் நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்களை அணிதிரட்டக் கூடிய அதன் ஆற்றல், எஸ்ஜேபி மற்றும் யுஎன்பி போன்ற வலதுசாரி கட்சிகளிடமில்லாத ஒரு தனித்துவமான சிறப்பம்சம்.
எந்த ஒரு பிரச்சினை தொடர்பாகவும் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து, அதன் பிரகாரம் எதிர்வினையாற்றும் அந்த வகையான கொள்கை அரசியல் (சந்தர்ப்பவாத அரசியல் கூட்ட்டணிகளை மட்டுமே இதுவரையில் பார்த்து வந்திருக்கும்) சிறுபான்மை சமூகங்களுக்கு ஓரளவுக்கு பரிச்சயமற்றதாக இருந்து வருவதும் ஒரு பிரச்சினை.
இந்தத் தேர்தலில் என்பிபி உடன் இணைந்து செயல்பட்ட முஸ்லிம்கள் பலர் அக்கட்சித் தோழர்கள் பின்பற்றிய உணர்ச்சிவசப்படாத, நிதானமான அணுகுமுறையுடன் அனுசரித்துச் செல்வதில் தொடக்கத்தில் ஒரு சில பிரச்சினைகள் எதிர்கொண்டார்கள். கடந்த 30 ஆண்டுகளாக முஸ்லிம்கள் இலங்கையில் ஒருவகை பேரம் பேசும் அரசியலுக்கு பழக்கப்பட்டிருப்பதே இதற்கான காரணம். ‘இந்தத் தேர்தலில் நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்கிறோம். அதற்குப் பகரமாக நீங்கள் இன்னின்ன விடயங்களை நிறைவேற்றி வைக்க வேண்டும்’ என்ற பேரத்தின் அடிப்படையில் என்பிபி தலைமையை அணுகிய – ஒரு சில சிறுபான்மை குழுக்களையும் உள்ளிட்ட – பல தரப்புக்களிடம் அவர்கள் ‘அத்தகைய ஒரு ஏற்பாட்டுக்கு தொடக்கத்திலேயே உடன்பட முடியாது’ எனக் கூறி, கண்ணியமான விதத்தில் தமது மறுப்பைத் தெரிவித்திருந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
ஆகவே, புதிய அரசாங்கத்துடன் பேரம் பேச வேண்டுமானால் சிறுபான்மை கட்சிகள் / குழுக்கள் தாம் இதுவரையில் பரிச்சயப்படுத்திக் கொண்டிருக்கும் அணுகுமுறைகள் குறித்த ஒரு முழுமையான மீளாய்வை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. வாக்கு எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளும் ஒரே நோக்கத்திற்காக தமது அரசியல் நெறிமுறைகளை விட்டுக் கொடுப்பதற்கோ அல்லது சந்தர்ப்பவாத இயல்பிலான சமரசங்களை மேற்கொள்வதற்கோ அவர்கள் முன்வர மாட்டார்கள் என்பதனையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
அநுர குமார திசாநாயக்கவின் வெற்றியையடுத்து இலங்கை அரசியல் ஒரு புதிய சகாப்தத்துக்குள் பிரவேசித்திருக்கிறது. அநேகமாக, அடுத்து வரும் இரண்டு – மூன்று ஆண்டுகள் நாடு ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கிப் பயணிக்கும் ஒரு நிலைமாறு கால கட்டமாக இருந்து வரும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பயணத்தில் மாற்றத்தை விரும்புபவர்களுக்கும், ‘பழைய நிலை அப்படியே நீடிக்க வேண்டும்’ (Status quo) என்று விரும்புபவர்களுக்குமிடையில், இடதுசாரிகளுக்கும், வலதுசாரிகளுக்குமிடையில் தொடர் போராட்டங்களும், கடுமையான முரண்பாடுகளும் (Confrontations) தோன்ற முடியும்.
அது தவிர, முன்னர் தனது சக பயணிகளாக இருந்து வந்த முன்னிலை சோசலிச கட்சி (FSP) மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (அந்தரே) போன்ற தரப்புகள் எடுத்து வரும் சவால்களுக்கும் என்பிபி முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.
இறுதியாக, இலங்கையில் முதல் தடவையாக ஒரு இடதுசாரி தலைவர், ஒரு ஏழை சிங்கள விவசாய குடியேற்றவாசியின் புதல்வர் பல தடைகளை தாண்டி நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றிருக்கிறார். பாராளுமன்றத் தேர்தலில் 50% க்கு மேல் வாக்குகளை பெற்றுக் கொள்வதன் மூலம் அவருடைய ஆட்சி மேலும் வலுப்படுத்தப்பட்டால் மட்டுமே சிறுபான்மை சமூகங்களும், சமூகத்தின் ஏனைய ஒடுக்கப்பட்ட பிரிவினர்களும் தத்தமது தனித்துவமான பிரச்சினைகளை முன்வைத்து, தோழமை உணர்வுடன் அவருடன் வாதிட்டு, நியாயமான விதத்தில் அவற்றை தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்க முடியும்.
இலங்கை அரசியலில் 1956 இலும், 1977 இலும் தோன்றிய புரட்சிகரமான மாற்றங்களுடன் கூடிய அலைகள் ஒன்றாக சங்கமித்து, 2024 இல் இந்த மூன்றாவது அலையை எடுத்து வந்திருக்கிறது.
இந்தப் புதிய அலை கொழும்பு அரசியலின் உயர் பீடங்களில் இதுவரையில் சாதாரண பிரஜைகளுக்கு மூடப்பட்டிருந்த எண்ணற்ற பல வாசல்களை திறந்து வைக்க முடியும்!

நன்றி…

Mlm Mansoor