இலங்கையின் தற்போதைய அரசியல்மாற்றத்தால் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கை போக்கை மாற்றாது!! மூடிஸ் கூறுவது என்ன?
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான அளவில் மாற்றாது என சர்வதேச முதலீடு மற்றும் கடன் தர நிர்ணய சேவையான மூடிஸ் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உருவாகியுள்ள புதிய சூழல் குறித்து அறிக்கை ஒன்றை வௌியிட்டு மூடிஸ் இதனை குறிப்பிட்டுள்ளது.
ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பெரிய பொருளாதாரக் கொள்கைகள் பெரிதாக மாறாது என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சில கொள்கை முன்னுரிமைகளை மீட்டமைக்கும் போது நிதி ஸ்திரத்தன்மையை பராமரிப்பது சவாலானதாக இருக்கலாம் என்று நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது, இது மேலும் அதிக கடன் அபாய வகைப்பாடுகளுக்கு வழிவகுக்கும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார மாற்ற சட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்த இலக்குகளை புதிய சட்டம் அல்லது திருத்தம் மூலம் மாற்ற முடியாது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆட்சேபனை இல்லை எனவும் மூடிஸ் தெரிவித்துள்ளது.