புதினங்களின் சங்கமம்

யாழ். மாநகர முதல்வருக்கு வந்த கவலை!! (Video)

மேலைத்தேய நாட்டவர்கள் சமூக மாற்றங்கள் ஊடாக ஆரோக்கியமானதொரு எதிர்காலசந்ததியை உருவாக்குவதற்காகப் பல்வேறு மாற்றங்களை முன்னெடுக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் போதிய வளங்களில்லை. ஆனால், எங்களிடமோ பரம்பரை பரம்பரையாக, ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக வரலாறு பெற்ற இயற்கை வளம் எங்களிடமிருந்தும் நாங்கள் நவீனத்துவத்தின் ஆளுகைப்பட்டிருக்கின்றோம். மேலைத்தேயவர்கள் பூகோளமயமாதலில் நவீன உலகிலிருந்து தங்களை மாற்றிக் கொண்டு வரும் வேளையில் நாங்கள் பல்தேசியப் பொருளாதாரமென்ற ஒரு நோய்க்குள் சிக்குண்டு அதற்குள் மாண்டுபோய்க் கிடக்கின்றோம் என யாழ். மாநகரசபையின் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் கவலை வெளியிட்டுள்ளார்.

“பனை மான்மியம்” எனும் தலைப்பிலான வடக்கு மாகாண பனை எழுச்சி வாரக் கண்காட்சி நேற்றுத் திங்கட்கிழமை(22) முற்பகல் யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகியது. மேற்படி கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

பனை யாழ்ப்பாணத்தின் அடையாளம். எங்கள் வரலாற்று மையத்தின் பொக்கிஷம். அவ்வாறான எங்களுடைய பனையினுடைய மாண்பு அருகி பல்தேசியப் பொருளாதாரத்தின் ஆளுகைக்குட்பட்டு அதன் பயன்பாடு எங்கள் மத்தியில் மிகவும் குறைவடைந்திருந்தது.

இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக கூட்டுறவு அமைச்சின் ஊடாக அவர்களுடைய முயற்சியின் பலனாக மீண்டும் உயிரூட்டம் வழங்கப்பட்டு சர்வதேச அரங்கில் மீண்டும் மிளிரக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுப், பொதியிடப்பட்டு புதியவகையான உணவுப் பொருட்கள் உட்பட ஏனைய பல்வேறு வடிவமைக்கப்பட்ட பொருட்கள் தற்போது சர்வதேச சந்தையில் காணக் கூடியளவுக்கு வளர்ந்து வருவது பாராட்டுக்குரியது.

தற்காலத்தில் தோற்றா நோய்கள் வேகமாகப் பரவி வருகிறது. எங்களுடைய உணவுப் பழக்க வழக்கங்களாலும், எங்களிடம் காணப்படுகின்ற துர்நடத்தைகளாலும் உருவாகின்ற ஒருவித நோய். ஆகவே, இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் எங்களுடைய உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளன. எங்களுடைய மரபுப்படி எந்தவொரு இராசயனப் பொருட்களும் சேர்க்கப்படாத குளிர்பானங்களை அவர்கள் விற்பனை செய்கிறார்கள்.

ஆகவே, எங்களுடைய ஆணையாளர், அமைச்சினுடைய செயலாளர்கள், தலைவர்கள்  வடபுலத்தில் காணப்படுகின்ற எங்களுடைய மாண்பினை கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்களுடைய மக்களுக்குச் சான்று பகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் நவீன யுகத்துக்குள் உள்வாங்கிச் செல்லும் போது மேலைத்தேய நாடுகளில் தும்புகளாலான, உக்கக் கூடிய வகையிலான எங்களிடமுள்ள அத்தனை பொருட்களும் மேலைத்தேயநாடுகளிலுள்ள ஹோட்டல்களிலும், தெருக்களிலும் தொங்குகின்றன. இங்கு அவ்வாறான பொருட்கள் காணப்பட்டாலும் இங்கு அதற்குப் பெருமையில்லை.

ஆகவே, இந்த அரசும், இந்த அரசுடன் சேர்ந்த அமைப்புக்களும் எங்களுடைய வடபுலத்தில் தீர்க்கமானதொரு சுற்றறிக்கையையோ கட்டாய நிமித்தம் நாங்கள் அமுல்படுத்த வேண்டுமெனச் சொல்லுகின்றவளவுக்கு எங்களுடைய பாரம்பரியமான உற்பத்திப் பொருட்களை நாங்கள் சந்தைப்படுத்தும் வாய்ப்புக்களை உள்ளுராட்சி மன்றம் ஊடாகவோ சீரியவழியில் செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ. ரவிசாந்-}