இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

நீர் வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை காட்டு வெள்ளம் அள்ளிச் சென்ற பயங்கர காட்சி! வீடியோ

புனே அருகில் உள்ள லோனவாலா மலைப்பகுதிக்கு பிக்னிக் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காற்றாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் மூவரது உடல் நேற்று மாலை மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டது. இருவரது உடலை இன்று மீட்புக்குழுவினர் தேடினர். அதில் ஒருவரது உடல் மட்டும் மீட்கப்பட்டது. லோனவாலா மலையில் புஷி அணை இருக்கிறது. அந்த அணையை பார்க்க வேண்டும் என்பதற்காக சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சுஹாஸ் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அமைச்சர் அனில் பாட்டீல் லோனவாலா சென்று நிலைமையை ஆய்வு செய்தார். இது குறித்து போலீஸார் கூறுகையில், “யுனுஸ் கான் மற்றும் அன்சாரி ஆகியோரின் குடும்பத்தை சேர்ந்த 17 பேர் மலைக்கு சென்றுள்ளனர். அவர்களில் 10 பேரை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது” என்றனர்.

திருமணத்துக்கு வந்து குடும்பத்தை இழந்துவிட்டோம்’- வெள்ளத்தில் உறவினர்களை பறிகொடுத்தவர்கள் கதறல்!
விபத்தில் இறந்த அன்சாரியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இது குறித்து கூறுகையில், “நாங்கள் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தோம். திருமணம் முடிந்த பிறகு எதையாவது சுற்றிப்பார்க்கலாம் என்று முடிவு செய்து லோனவாலா மலைக்கு சென்றோம். திருமணத்திற்கு வந்து 5 பேரை இழந்து தவிக்கிறோம்” என்றார். 5 பேரும் தண்ணீரில் அடித்துச்செல்லப்படும் போது கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அருகில் நீர்வீழ்ச்சி இருந்ததால் உடனே அதனுள் அவர்கள் இழுத்துச்செல்லப்பட்டனர். அவர்கள் காப்பாற்றுக் கூறி கத்தியபடி தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்ட காட்சி, சோசியல் மீடியாவில் பரவி இருக்கிறது.

சிறு குழந்தைகளை கையில்பிடித்துக்கொண்டு அவர்கள் காற்றாற்று வெள்ளத்தின் நடுவே உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். கரையில் நின்றவர்கள் மரவேர்களை எடுத்துப்போட்டு காப்பாற்ற முயன்றனர். ஆனால் திடீரென நீரின் வேகம் அதிகரித்து, அவர்கள் அப்படியே தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். இறந்த அனைவரும் அன்சாரி குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மழை காலத்தில் மலைப்பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். தொடர்ந்து மகாராஷடிரா முழுவதும் மழை பெய்து வருகிறது.