ஒரே வெட்டில் கையை அறுத்தெடுத்துக் கொண்டு ஓடினான்!! யாழில் மச்சானால் வெட்டப்பட்ட செந்துாரனின் வாக்குமூலம் இது!!
யாழ்ப்பாணம், பருத்தித்துறை, தம்பசிட்டி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவரின் கை துண்டாடப்பட்டுள்ளது.
30 வயதுடைய செல்வநாயகம் செந்தூரன் என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகியவராவார்.
செந்தூரனுக்கும், அவரது தங்கையின் கணவருக்குமிடையில் காணித்தகராறு ஏற்பட்டு, குடும்ப தகராறாக மாறியுள்ளது. தனது தங்கை குடும்பம் மாத்திரமல்ல, பெற்றோரும் தகராறில் ஈடுபட்ட பின்னர், இரவில் வீட்டில் தங்குவதில்லையென செந்தூரன் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
31ஆம் திகதி இரவு வீட்டுக்கு அண்மையாக உள்ள பனங்கூடலுக்குள் படுத்திருந்த போது, 10.30 மணியளவில் தன்னை யாரோ இழுப்பதை உணர்ந்து விழித்த போது, தனது மைத்துனர், அவரது தந்தை, மைத்துனரின் நண்பர் ஒருவர் நின்றதை அவதானித்ததாக தெரிவித்துள்ளார்.
தன்னை மூவரும் இழுத்துச் சென்றதாகவும், அப்போது மைத்துனர் ஒரே வெட்டாக தனது கையை துண்டாடியதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின். அவர்கள் மூவரும் தப்பியோடி விட்டதாகவும், தான் வீட்டுக்கு ஓடிச்சென்று தந்தையின் உதவியுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கிருந்து அவர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடி வீட்டுக்கு சென்றார். பின்னர், அவரை குடும்பத்தினர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
வெட்டப்பட்ட கை காணாமல் போயுள்ளது.
மைத்துனர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.