புதினங்களின் சங்கமம்

இலங்கையில் காணிகளை அபகரித்துக்கொள்ளும் முயற்சியில் அமெரிக்கா?

இலங்கையில் காணிகளை அபகரித்துக்கொள்ள அமெரிக்கா முயற்சித்து வருவதாக முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரங்களில் எந்தவித உண்மையும் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஸார இந்துனில் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு எண்ணமும் அமெரிக்காவிற்கு இல்லை என்று கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், உள்நாட்டில் காணி உரிமங்கள் இல்லாத நபர்களுக்கு அவற்றை வழங்கும் வேலைத்திட்டமே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவுடன் எக்ஸா, சோபா மற்றும் மில்லேனியம் சவால் ஆகிய பாதுகாப்பு ஒப்பந்தங்களை செய்துகொள்ளவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம், அதன் ஊடாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பை பெரும் ஆபத்திற்குள் தள்ளவிடவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும், அவரது கட்சியினர் மாத்திலமன்றி ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் அவரது தலைமையிலான சுதந்திரக் கட்சியினரும் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

எனினும் குறித்த ஒப்பந்தங்களை கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்திலேயே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவை என்று தெரிவித்துவருகின்ற ஐக்கிய தேசியக் கட்சி, அந்த ஒப்பந்தங்களை புதுப்பித்துக்கொள்ளும் வகையிலேயே பேச்சுக்களே இடம்பெறுவதாகவும் கூறிவருகின்றது.

இந்த நிலையில் சிறிலங்காவிற்கு விஜயம்செய்துள்ள அமெரிக்க சென்ட் சபை குழுவினர் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

சிறிலங்காவில் பாரிய படை முகாம்களை அமைக்க திட்டமிட்டுள்ள அமெரிக்கா அதற்கான காணிகளை தெரிவுசெய்வதற்காகவே செனட் பிரதிநிதிகள் குழு சிறிலங்கா வந்திருப்பதாக மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்சவும் பல கடும்போக்குவாத அமைப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கொழும்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், அமெரிக்காவிற்கு ஸ்ரீலங்காவின் காணிகள் வழங்கப்படவுள்ளதாக வெளியிடப்படும் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் – ‘நாட்டில் காணி உரிமம் இல்லாதவர்களுக்கு காணிப் பத்திரங்களை வழங்கிக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராகவே கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தற்போது அந்த விமர்சனங்களிற்குள் அமெரிக்காவையும் இழுத்துவிட்டுள்ளனர். மாதிரி கிராமங்களிலுள்ள சில காணிகளை பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்கா முயற்சிப்பதாகவும், அந்த கிராமங்களிலுள்ள புஞ்சி பண்டா, கிரியம்மா போன்றவர்களின் தீப்பெட்டியைப் போல இருக்கும் வீடுகளை அபகரிப்பதற்காக அமெரிக்கா திட்டமிடுவதாகவும் சிலர் கூறுகின்றனர். பதவிய, சிறிபுர பகுதிகளில் இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிற்செய்கையை செய்கின்ற விவசாயிகளின் காணிகளை கபளீகரம் செய்ய ஜோன் கெனடி, டொனால்ட் டிரம்ப் ஆகியோர் விரைகின்றனராம். இவ்வளவு கீழ்த்தரமான பேச்சுக்களை பேசுகின்றனர். தற்போது 10 இலட்சம் காணி உரிமப் பத்திரங்களை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம். இதற்கு தடை ஏற்படுத்தவே மஹிந்தவாதிகள் முயற்சிக்கின்றனர். காணி உரிமம் இல்லாதவர்களுக்கு நிரந்தரமாக காணிகளை இல்லாமல் செய்வதற்காக அமெரிக்கா என்கிற நாட்டை பயன்படுத்தி பொய்யான அச்சத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முனைகின்றனர்.”)

இதேவேளை அனைத்து மதங்களையும் நேசிக்கின்ற வேட்பாளரையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச அண்மையில் தெவிரித்திருந்த கருத்தை மேற்கோள்காட்டி கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், பௌத்த பிக்குகளிடம் ஒன்றையும், பொதுமக்கள் மத்தியில் மற்றுமொரு கருத்தையும் தெரிவித்துவரும் மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தனது அரசியல் கபட நாடகத்தை அரங்கேற்றி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் – ‘குருநாகல் பிரதேசத்திற்கு அண்மையில் விஜயம் செய்த எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச அனைத்து மதங்களையும் நேசிக்கின்ற ஒரு தலைவரை சரியான தருணத்தில் வேட்பாளராக அறிவிப்பேன் என்று கூறியிருக்கின்றார். அத்தோடு அந்த உரையில் அண்மையில் பிரச்சினைகளின்போது பெயர்கள் கூறப்பட்ட சில நபர்கள்கூட தனது மேடையில் ஒன்றுசேரலாம் என்றும் ஆருடம் வெளியிட்டிருந்தார். இருந்த போதிலும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெற்ற முஸ்லிம் மக்கள் மீதான அனைத்து வன்முறைகளுக்குப் பின்னால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்களே செயற்பட்டிருக்கின்றனர். இப்படியிருக்க எவ்வாறு மஹிந்த ராஜபக்ச ஒருபுறத்தில் வன்முறையாளர்களையும் இன்னொரு புறத்தில் அனைத்து மதங்களையும் நேசிக்கின்றவர்களையும் வைத்திருக்க முடியும்? இந்த நாட்டை தீயிட்டு கொளுத்தக்கூடிய நபர்களே அவரது குழுவில் இருக்கின்றனர். விகாரைகளுக்குச் சென்று பௌத்த பிக்குகளிடம் ஒன்றைக்கூறிவிட்டு வெளியே வந்து வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக இன்னொன்றை கூறி ஈனச்செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம்”