புதினங்களின் சங்கமம்

யாழிற்கு இந்தியாவிலிருந்து கஞ்சா வருகிறது..எதிர்க்கவில்லை!! தமனாவை கொண்டு வந்தால் எதிர்க்கின்றார்கள்!! ரம்பாவின் கணவன் தரப்பு!!

யாழ்ப்பாணத்துக்கு கஞ்சா கொண்டு வருகிறார்கள். அதை யாரும் கேட்கவில்லை. நாங்கள் தமன்னாவை கொண்டு வருகிறோம் என பதிலளித்துள்ளார் இந்திய நடிகை ரம்பாவின் கணவரின் நிறுவனம் சார்பான ஊழியர்.

கனடாவில் வசிக்கும் இலங்கையரான- நடிகை ரம்பாவின் கணவர் இந்திரன் யாழில் தனியார் உயர்கல்வி நிலையமொன்றை ஆரம்பித்துள்ளார். இதற்காக தென்னிந்திய நடிகைகளை அழைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்துகிறார்.

கல்வி நிறுவனம் என குறிப்பிட்டு, யாழில் நடிகைகளை அழைத்து வந்து சுளையாக காசு பார்க்கும் பலே திட்டத்தை, ரம்பாவின் கணவரின் நிறுவனம் அரங்கேற்றியுள்ளதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமன்னாவுடன் புகைப்படம் எடுக்க ரூ.30000 கட்டணம் அறவிடப்படும் என நிறுவனம வெளியிட்ட அறிவிப்புக்கு பலரும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். கல்வி நிறுவன நிகழ்ச்சியென்ற போர்வையில் சமூகத்தை சினிமா மோகத்தில் ஆழத்தி, பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக விமர்சனம் கிளம்பியுள்ளது.

இந்த நிலையில், இன்று யாழில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா, நடிகைகள் தங்கியுள்ள விடுதிகளை முற்றுகையிடவுள்ளதாக அறிவித்தார்.

அத்துடன், தமன்னாவுடன் புகைப்படம் எடுக்க 30000 கட்டணம் என வெளியிடப்பட்ட விளம்பரத்தில் உள்ள தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பேற்படுத்தினார். மறுமுனையில் பேசிய ரம்பா கணவன் நிறுவனத்தை சேர்ந்தவர்- “தமன்னாவின் நிகழ்வை எதிர்ப்பவர்கள் யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் நடந்த டிஜே பார்ட்டியை ஏன் எதிர்க்கவில்லை“ என கேட்டதுடன், கஞ்சா கொண்டு வருகிறார்கள் அதற்கு உங்களின் நிலைப்பாடு என்ன, அதற்கு எதிராக என்ன நடவடிக்கையெடுத்தீர்கள் என சம்பந்தமில்லாமல் கேட்டார்.