புதினங்களின் சங்கமம்

காதல் வெறி!! காதலியின் அண்ணன் மகளைக் கடத்திச் சென்ற காதலன்!!

வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயதுச் சிறுமியொருவர், அவரது தந்தையின் சகோதரியின் முன்னாள் காதலனால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டுள்ளார்.

ஹொரண கோனாபொல பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது. சந்தேகநபர் திங்கட்கிழமை (13) அதிகாலையில் கொலை மிரட்டல் விடுத்து சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.

பிணைக் கைதியாக பிடிக்கப்பட்ட சிறுமி, கெஸ்பேவ, பதிகிரிதெனியவில் உள்ள உறவினர் வீட்டில் விடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடத்திச் சென்ற சிறுமியின் தந்தையின் சகோதரியுடன் சுமார் பத்து வருடங்களாக காதல் உறவில் இருந்ததாகவும், அவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்தமையினால் குறித்த யுவதி இரண்டு மாதங்களுக்கு முன்னர் அந்த உறவை நிறுத்தியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திங்கட்கிழமை (13) காலை 6.20 மணியளவில் கோனாபொல அடம்பஹேன என்ற இடத்தில் உள்ள வீட்டிற்கு காரில் வந்த சந்தேக நபர் காரில் இருந்து இறங்கி வீட்டை உடைத்து தனது காதலியை தேடியுள்ளார். இருப்பினும், அவர் ஏற்கனவே தனது பணியிடத்திற்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

பின்னர் தனது தங்கையுடன் ஒரே படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த தனது காதலியின் சகோதரனின் மூத்த மகளான 7 வயது சிறுமியை அணுகி அவரை கடத்தி காரில் தப்பிச் சென்றுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது, சிறுமியின் தந்தை வேலைக்குச் சென்ற நிலையில், தாயார் குளியலறையில் இருந்துள்ளார்.

இதனைப் பார்த்து பாட்டி அலறியதும் தாய் குளியலறையில் இருந்து வெளியே வந்து சந்தேக நபரை துரத்திச் சென்றதாகவும், அவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி குழந்தையுடன் தப்பிச் சென்றதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுமியொருவர் கடத்தப்பட்டு காரில் அழைத்துச் செல்லப்பட்டதை அறிந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் துசித விக்கிரமரத்ன, வீட்டுக்குச் சென்று ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்து சந்தேகநபர் பற்றிய தகவல்களை வெளிக்கொண்டுவர முடிந்தது.

குழந்தை தனது பாதுகாப்பில் இருப்பதாக காதலிக்கு, சந்தேகநபர் தகவல் அனுப்பியுள்ளார். கொழும்பிற்கு வேலைக்குச் செல்லும் காதலிக்கு வாட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் குழந்தையின் புகைப்படத்தை அனுப்பி, தன்னிடம் வரவில்லை என்றால் குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, காதலி அவரிடம் சென்றுள்ளார். பின்னர், கடத்தப்பட்ட சிறுமியை கெஸ்பேவக்கு அழைத்துச் சென்று, கஸ்பேவ, பதிகிரிதெனியவில் உள்ள காதலியின் உறவினர் ஒருவரின் வீட்டில் சிறுமியை இறக்கிவிட்டு காதலியுடன் தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபர் சிறுமியையும் யுவதியையும் கடத்த பயன்படுத்திய கார், பத்தேகம பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரையும் அவரது கூட்டாளியையும் கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.