புங்குடுதீவில் கிணற்றிலிருந்து தொப்புள்கொடியுடன் சிசு சடலமாக மீட்பு!
புங்குடுதீவு 11ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து ஆண் சிசுவின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர் .
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இந்தச் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்து இரண்டு நாள்களே இருக்கும் எனவும், மீட்கப்பட்ட சடலத்தில் தொப்புள் கொடி காணப்படுகிறது எனவும் தெரியவருகிறது.
“இன்று காலை அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள பற்றைக் காட்டுக்குள் சென்ற ஒருவர், துர்நாற்றம் வீசியதையடுத்து கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார். அப்போது சிசுவின் சடலம் மிதப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்தே சடலம் மீட்கப்பட்டது. சிசுவின் தாயார் அடையாளம் காணப்பட்டுள்ளார் ” என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சிசுவின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது .
மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

