இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

4 வயதுக் குழந்தையை கொடூரமாக வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்தான் முன்னாள் இராணுவ வீரரான சுந்தரம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைம் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. சென்னை அருகே 4 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கழிவறை வாளியில் அவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை

சென்னை அருகே உள்ள அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் காவல் நிலையத்தின் அருகில் அந்தோணி நகர் உள்ளது. இந்தப்பகுதி நேற்று மாலையிலிருந்து பரபரப்பாக காணப்பட்டது. அந்தோணி நகரில் குடியிருக்கும் ராஜேந்திரனின் 4 வயது மகளைக் காணவில்லை என்று அந்தப்பகுதியினர் ஒவ்வொரு வீடு வீடாகத் தேடினர். ஆனால், சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் சிறுமியின் அம்மா, புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், ராஜேந்திரனின் வீட்டின் அருகே உள்ள வீட்டிலிருந்து பினாயில் வாசனை அதிகளவில் வந்தது. இதனால் அந்த வீட்டுக்குள் போலீஸார் நுழைந்தனர். கழிவறை, படுக்கையறை பினாயில் ஊற்றி கழுவப்பட்டிருந்தது. தொடர்ந்து அந்த வீட்டை அங்குலம் அங்குலமாக போலீஸார் சோதனை செய்தனர். அப்போது வீட்டின் படுக்கையறையில் சிறுமியின் ஒரு கம்மல், உடைந்த வளையல்கள், ரத்தக்கறைகள் இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர்.

இதுகுறித்து அந்த வீட்டில் உள்ளவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினர். இருப்பினும் போலீஸார் தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது அந்த வீட்டில் குடியிருக்கும் முன்னாள் ராணுவ வீரான சுந்தரத்தின் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர்.

இதற்கிடையில், ராஜேந்திரனின் வீட்டுக் கழிவறையில் உள்ள வாளியில் பிளாஸ்டிக் பை ஒன்று இருந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது 4 வயது சிறுமி சடலமாக இருந்தாள். அதைப்பார்த்து சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கதறி அழுதனர். இதையடுத்து, சிறுமியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சிறுமியின் சடலம் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. சிறுமியைக் கொலை செய்த குற்றத்துக்காக முன்னாள் ராணுவ வீரர் சுந்தரத்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.

4 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சுந்தரம்

இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீஸார் கூறுகையில், “சிறுமியைக் காணவில்லை என்று அவரின் அம்மா எங்களிடம் புகார் கொடுத்தார். அப்போது சுந்தரமும் காவல் நிலையத்துக்கு வந்திருந்தார். அவரும் எங்களோடு சேர்ந்து சிறுமியைத் தேடினார். அப்போது அவர் மீது எங்களுக்கு சந்தேகம் வரவில்லை.

காவல் நிலையம் அருகில்தான் அந்தோணி நகர் உள்ளது. இதனால் உடனடியாக அந்தப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளில் சிறுமியைத் தேடினாம். சிறுமியின் வீட்டின் அருகே உள்ள சுந்தரத்தின் வீட்டிலிருந்து பினாயில் வாசனை வந்தது. சந்தேகத்தின்பேரில் அங்கு சென்று விசாரித்தபோதுதான் சிறுமியை அவர் கொலை செய்த தகவல் தெரியவந்தது. அந்த வீட்டிலிருந்து சிறுமி அணிந்திருந்த ஒரு கம்மல், உடைந்த வளையல்கள், ரத்தக்கறை படிந்த வேட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். இன்னொரு கம்மல் சிறுமியின் காதில் இருந்தது.

சிறுமியின் சடலத்தைப் பார்க்கும்போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளன. இருப்பினும் பிரேதப் பரிசோதனையில்தான் அதை உறுதி செய்ய முடியும். கைது செய்யப்பட்ட சுந்தரம், சிறுமிக்கு தாத்தா முறை. அவரின் வீட்டுக்கு அடிக்கடி சிறுமி செல்வதுண்டு. சம்பவத்தன்று சிறுமியின் அம்மா, தன்னுடைய மூத்த மகனை டியூஷனுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். சிறுமியின் அம்மா வீட்டுக்குத் திரும்பியபிறகு மகளைத் தேடியுள்ளார். 2 மணி நேரத்துக்குள் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் சடலத்தை கழிவறையில் உள்ள வாளியில் போடப்பட்டது குறித்து விசாரித்தபோது சுந்தரம் எந்தவித பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்தார்” என்றனர்.

சுந்தரம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “அந்தபகுதியில் பொதுச் சேவைகளில் ஈடுபடுபவர்தான் சுந்தரம். முன்னாள் ராணுவ வீரர் என்பதால், அவருக்கு நாங்கள் மரியாதை கொடுப்போம். மேலும், எங்கள் நகரில் செயல்படும் சங்கத்தில் தலைவராக சுந்தரம் இருந்துவருகிறார். இதனால் எங்கள் பகுதியில் எந்தச் சம்பவமும் நடந்தால் சுந்தரம்தான் முதல் நபராக இருந்து செயல்படுவார். நகரின் பிரச்னைக்காக திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு சுந்தரம் செல்வார். இதனால் காவல் நிலையத்திலும் அவர் பரிட்சையமானவர். அவருக்கு ஒரு மகன் உள்ளார். மகனும் மருமகளும் தனியாக குடியிருந்துவருகின்றனர். சுந்தரமும் அவரின் மனைவியும் சிறுமியின் வீட்டின் அருகில் வசிக்கின்றனர். சுந்தரத்துக்கு 60 வயதாகிறது. அவரை போலீஸார் கைதுசெய்த தகவல் எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது” என்றனர்.

சுந்தரம் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “அவர் அப்படிப்பட்ட நபர் அல்ல. நாட்டுக்காக முதலில் சேவை செய்தார். தற்போது பொதுச் சேவையில் ஈடுபட்டார். அவரை சிலர் இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர். சட்டரீதியாக வழக்கை எதிர்கொள்வோம்” என்றனர்.