புதினங்களின் சங்கமம்

பாக்கிஸ்தான் ஏழைப் பெண்களை திருமணம் செய்து கொடுமையான பாலியல் சித்திரவதை செய்யும் சீனர்கள்!!

பாகிஸ்தானில் ஏழை கிறிஸ்தவ குடும்பங்களை சேர்ந்த 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுமிகள் மணப் பெண்களாக சீனாவை சேர்ந்தவர்களுக்கு விற்கப்பட்டு கடத்தப்படும்  அவலம்  நடைபெற்று வருகிறது.  பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுமைகளை வெளியே சொல்ல முற்பட்டதன் விளைவாக தற்போது ஆங்கில பத்திரிகைகள் அது போன்ற சம்பவங்கள் மற்றும் அதன் பின்னணி சம்பவங்களை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றன.

பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலம், குஜரான்வாலியா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி முகதாஸ் அக்ஷரப். அவரை சீனாவிலிருந்து மணப்பெண் தேடி வந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் சரியாக 5 மாதங்களில் கர்ப்பிணியான அவர் தாய் வீட்டுக்கு திரும்பி விட்டார். தற்போது கணவன் தன்னை கொடுமை படுத்துவதால் விவாகரத்து கேட்கிறார்.

இந்த கொடுமை இவருக்கு மட்டுமல்ல. பாகிஸ்தானில் உள்ள நூற்றுக்க்கணக்கான ஏழை கிறிஸ்தவப் பெண்களுக்கு இது போன்ற சம்பவங்கள் கடந்த ஒரு ஆண்டாக நிகழ்த்தப்பட்டு வருவதாக சமூக சேவகர்கள் கூறுகின்றனர்.

இதில் ஏராளமான புரோக்கர்கள் ஈடுபட்டுள்ளனர், மணப்பெண்களை விலை கொடுத்து வாங்கும் இந்த வியாபாரத்திற்காக அழகிய பெண்களுக்கு வலை வீசும் இந்த வியாபாரிகள் முதலில் சர்ச்சுக்களுக்கு வெளியே வலை வீசுகின்றார்கள். சர்ச்சு ஊழியர்களும் காசுக்கு ஆசைப்பட்டு புரோக்கர்களுக்கு உதவுகின்றனர்.

இந்த திருச்சபை ஊழியர்கள் பருவமடைந்த பெண்கள் உள்ள ஏழை கிறிஸ்தவ குடும்பங்கள் குறித்து இந்த புரோக்கர்களுக்கு தகவல் கொடுக்கின்றனர்.

புரோக்கர்கள் பெண்கள் உள்ள குடும்பத்தினரிடம் ஏராளமான பொருள்கள் கொடுப்பதாகக் கூறி, பேரம் பேசி பெண் சிறுமிகளை விலைக்கு வாங்கி விடுகின்றனர்.

பெண் சிறுமிகளை வைத்துள்ள ஏழை கிறிஸ்தவ குடும்பத்தினர் வசதியான சீனர்களுக்கு தங்கள் பெண்களை விற்று விட்டு அதற்கு பதிலாக ஆயிரக்கணக்கான டாலர்களை பெறுவதாக அங்குள்ள சமூக ஆர்வலர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பாதிக்கப்பட்ட சிறுமிகள் உட்பட பலர் The Associated Press பத்திரிக்கைக்கு உண்மைகளை வெளிச்சம் போட்டு காண்பித்தனர்.

இந்த குடும்பங்கள் வெகு தொலைவிலுள்ள கிராமங்களில், மிகவும் ஏழ்மையான சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர். சீனர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் பெண்கள் அவர்களின் விருப்பத்துக்கு எதிராகவே இந்த திருமணங்கள் நடைபெறுவதாகவும், மொழி தெரியாத ஆண்களுக்கு  மணம் செயவிக்கப்படுவதாகவும் ஒரு டம்ளர் தண்ணீர் கூட கேட்க முடியாத அளவில் கணவன் மனைவி இடையே மொழி தொடர்பில்லாமல் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் அமைச்சர் இஜாஸ் அலாம் அகஸ்தின் கூறுகையில் “பெற்றோர்களின் பேராசையே இது போன்ற திருமணங்களுக்கு காரணம் என்றும், அவர்களை தான் சந்தித்ததில் அவர்களின் வறுமையே இதற்கு காரணம் என்றும் கூறிய அவர் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இது போன்ற விவகாரங்களில் எந்த கேள்விகளையும் கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டு விசா மற்றும் சான்றுகளை வழங்குவதே இதற்கு காரணம்” என்று குற்றம் சாட்டினார்.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இது தொடர்பாக சீனா மற்றும் பாகிஸ்தான் உரிய நடவடிக்கைகள் எடுத்து இது போன்ற மணப்பெண் கடத்தல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரி சென்ற ஏப்ரல் 26-ஆம் தேதி எச்சரிக்கை அறிக்கையை அனுப்பியுள்ளது. இந்த அறிக்கையில் பாகிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகள் சீனாவில் பாலியல் அடிமைகளாக நடத்தப்படும் அபாயத்தில் இருப்பதாக அது எச்சரித்துள்ளது.

சென்ற திங்கள் கிழமை பாகிஸ்தான் பெடரல் புலனாய்வு ஏஜன்சி இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து பஞ்சாபில் எட்டு சீனர்களையும், நான்கு பாகிஸ்தானியர்களையும் பெண்கள் கடத்தலின்போது கைது செய்துள்ளது. ஜியோ தொலைக்காட்சியும் இந்த கடத்தல் சம்மந்தமான காட்சிகளை ஒளிபரப்பியது.

மேற்கண்ட புலனாய்வு சோதனைகள் வெளியுலகத்துக்கு தெரியாதவாறு இரகசியமாக நடத்தப்பட்ட திருமணங்களுக்கு சென்று நடத்தப்பட்டதாக அந்த தொலைக் காட்சி கூறியது.

இது பற்றி சீன தூதரகம் கூறுகையில் “சென்ற மாதம் சீனாவும், பாகிஸ்தானும் நடத்திய கூட்டு அதிரடி சோதனையில் சில சட்டவிரோத திருமண ஏற்பாட்டு மையங்களை மூடியதாகவும், இது தொடர்பாக சீனா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த சில சட்டவிரோத ஏஜண்டுகளான இளைஞர்களை பிடித்ததாக” கூறினர்.

இது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் 12-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் கிறிஸ்தவ மணப்பெண்களை தொடர்பு கொண்டதில் அவர்கள் எல்லோரும் புரோக்கர்கள் மற்றும் சர்ச் ஊழியர்கள் மூலம் பணம்பெற்றுக் கொண்டு சீனர்களுக்கு மணம் முடிக்கப்பட்டவர்கள் என்று தெரிவித்ததுடன், திருமணமானதும் தங்களை சீன மாப்பிள்ளைகள் இஸ்லாமாபாத், லாகூர் போன்ற நகரங்களுக்கு கூட்டிச் சென்று அங்குள்ள லாட்ஜ்களில் முதலிரவை கழிப்பர் என்றும் கூறினர்.

இது எல்லாமே ஒரு ஏமாற்று வேலை என்றும், கொடுக்கப்படும் எல்லா வாக்குறுதிகளும் போலியானவை என்றும் மிகவும் வருத்தத்துடன் கூறினார் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான முகொடாஸ்.

சீனாவில் மணப்பெண்கள் கிடைக்காதது தான் காரணமா ?

தற்போது சீனாவில் மணப்பெண் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை கொள்கை என்கிற குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டதால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதை சமாளிக்க தொடக்கத்தில் வியட்நாம், லாவோஸ், வடக்கு கொரியாவில் இருந்து மணப்பெண்கள் கொண்டு வரப்பட்டதாகவும் பசிபிக் நாடுகளுடனான உறவுகள் துறையின் ஆலோசனை இயக்குனர் மிமி வூ என்கிற பெண் அரசு அதிகாரி கூறினார்.

மேலும் இது முழுக்க முழுக்க தேவைக்கும் அளிப்புக்கும் இடையேயான பிரச்சினை என்றார்.

பாகிஸ்தானில் இது தொடர்பான புரோக்கர்களை அடையாளம் காண மேற்கொள்ளப்பட்டது சென்ற ஆண்டுதான்.

இது குறித்து கிறிஸ்தவ சமூக தொண்டரான சலீம் இக்பால் கூறுகையில் இந்த சம்பவங்கள் கடந்த அக்டோபர்மாதம் முதல் அதிகரிக்கத் தொடங்கின. கடந்த சில மாதங்களில் மட்டும் 750 முதல் 1,000 பெண்கள் வரை மணம் முடிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பாகிஸ்தானில் மிக சிறுபான்மையினராக கிறிஸ்தவர்கள் பஞ்சாப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள கிறிஸ்தவர்கள் மீது தான் சீன புரோக்கர்கள் குறிவைக்கப்படுகின்றனர். இந்த பஞ்சாப் பகுதியில் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்ற நிலையிலும் 25 லட்சம் என்ற அளவில் மிக குறைவாக வாழும் கிறிஸ்தவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் கிறிஸ்தவர்கள் அரசியல் பாதுகாப்பிலாமல் சமூக பாதுகாப்பில்லாமல் ஏழைகளாக இருப்பது தான்.

மேலும் மணப்பெண் வீட்டார் மணமகன் குடும்பத்தாருக்கு வரதட்சணை தருவதுடன், திருமண செலவுகளையும் ஏற்க வேண்டும் என்பதால் பெண் குழந்தைகள் ஒரு பாரமாகவே பார்க்கப்படுகின்றனர். வரதட்சனை குறைவாக தரப்படும் சமயங்களில் பல இளம்பெண்கள் திருமணமான புதிதில் மாப்பிள்ளை குடும்பத்தினரால் கொடுமை படுப்படுத்தப் படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் சீனர்கள் பெரும் பணம் கொடுத்து பாகிஸ்தானிய கிறிஸ்தவ பெண்களை மணமகளாக விலைக்கு வாங்கும் சம்பவங்கள் நடப்பதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் எல்லையில் சீனாவால் மேற்கொள்ளப்படும் சாலை ரயில் பாதை அமைப்பு பணிகளில் ஈடுபடும் சீன வாலிபர்கள் பலரும் நேரடியாக புரோக்கர்கள் மூலம் தொடர்பு கொள்கின்றனர். மேலும் சீனாவில் உள்ள வசதியான மணமகன்களும் பெண்களை அடைய சில நெட் வொர்க் வைத்துள்ளனர். பெரும்பாலும் கிறிஸ்தவ மணமகன்கள் என்றால் சர்ச்சுகள் மூலமாக எளிமையான ஆவணங்கள் மூலம் பெரும்தொகை கைமாறி இந்த திருமணங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்த திருமணங்களுக்காக பெண்ணின் பெற்றோருக்கு புரோக்கர் மற்றும் மத போதகர்கள் செலவு உட்பட 3,500 டாலரிலிருந்து $5,000 வரை சீனர்களால் அளிக்கப்படுவதாக ஐசாக் தொலைகாட்சி செய்தியாளர் இக்பால் கூறுகிறார். இவர் 13 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் திருமணத்தை எதிர்த்து போராடும் போராளி ஆவார்.

முகதாஸ் தாயார் நஷ்ரீன் கூறுகையில் எனது மகளை திருமணம் செய்வதற்காக எனக்கு 5 ஆயிரம் டாலர்கள் தருவதாக பேசப்பட்டது. ஆனால் சொன்னவாறு இதுவரை கொஞ்சம்கூட தரப்படவில்லை. அவளுக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைய போவதாக தான் நம்பினேன் என்றார்.

சீனர்களின் இந்த மணப்பெண் வேட்டைக்கு 12 கிறிஸ்தவ பேராயர்கள் துணையாக இருப்பதாகவும் அவர்களுக்கு சீனர்கள் தொகை அளிப்பதாகவும், இதன் மூலம் அந்த பகுதியில் காளான்கள் போல பெருகி இருக்கும் சிறிய சர்ச்சுக்களின் மூலம் இந்த திருமணங்கள் நடத்தப்படுவதாகவும் அமைச்சர் அகஸ்டின் கூறினார்.

லாகூர் நகரத்தின் வடக்கு பகுதி நகரான குஜ்ரன்வாலா நகரத்தில் இது தொடர்பான புரோக்கர்கள் குறிவைத்துள்ளதாகவும், இங்கு தான் 100-க்கும் மேற்பட்ட சமீபத்தில் மணம் செய்து கொண்ட சீன – பாகிஸ்தானிய இளம் தம்பதிகள் வாழ்ந்து வருவதாகவும் இக்பால் கூறினார்.

இந்த நகரம் சந்து பொந்தான தெருக்கள் கொண்டது என்றும், அசுத்தமான குடியிருப்பு பகுதி என்றும், இங்கு ஏராளமான ஏழை கிறிஸ்தவர்கள் வசித்து வருவதாகவும், இங்குள்ள மிக சிறிய சர்ச்கள் மூலம் சீனர்களுக்கு மணம் முடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து இந்த பகுதியில் திருமண புரோக்கர்களுடன் இணைந்து பணியாற்றும் மதபோதகர் மன்ச் மோரிஸ் கூறுகையில் ” நாங்கள் சீனர்களாக மதம் மாற்றியே மணம் முடித்து வைக்கிறோம். இவர்கள் இங்குள்ள ஏழை கிறிஸ்தவ பெண்களுக்கு வாழ்வளித்து உதவுகிறார்கள் ஆண்டவர் ஆசியுடன் எல்லாம் நன்றாகவே நடப்பதாகவே கூறினார். ஆனால் இந்த திருமணங்கள் பணத்துக்காகத்தான் நடைபெறுகின்றன என்றாலும் சில திருமணங்கள் வலியை ஏற்படுத்துகின்றன இது சரியானது அல்ல என்றார்.

மற்றொரு கிறிஸ்தவ மத போதகரான ரிஸ்வான் ரஷீத் கூறுகையில் “2 வாரங்களுக்கு முன்னர் எங்கள் சர்ச் வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதில் 2 வசதியான சீன இளைஞர்கள் மற்றும் சீன பெண் ஒருவரும் இருந்தனர். அவர்கள் தன்னிடம் இங்கு சீன மணப்பெண் ஏதாவது கிடைக்குமா என்றும் அவள் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும் என்றும் அதற்கான செலவு எவ்வளவு ஆனாலும் தருகிறோம் என்றும் கூறினர். எனக்கும் பணம் தர முன்வந்தனர். ஆனால் எண்கள் சர்ச் சாமியார் இது போன்ற திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியதும் அவர்கள் போய் விட்டனர் என்று கூறினார்.

இதைவிட ஒரு அதிர்ச்சி என்னவென்றால் இந்த பகுதிகளில் சில புரோக்கர்கள் செங்கல் தயாரிக்கும் சூளைகள் வைத்துள்ளனர். அவர்களிடம் வேலை பார்க்கும் ஏழை தொழிலாளர்கள் பலர் புரோக்கர்களிடம் பெருந்தொகையை கடன் பெற்றுக் கொண்டு அடிமைகளாக வாழ்கின்றனர். கடனை அடைக்க தங்கள் பெண்களையே அவர்களுக்கு விற்று விடுவதாகவும் கூறப்படுகிறது. புரோக்கர் தொழிலில் பாகிஸ்தானியர்கள், சீனர்கள் இருவருமே சேர்ந்தே செய்கின்றனர்.

ஆனால் இந்த தொழிலில் குஜரன்வாலா பகுதியில் நேர்மையாக ஈடுபடுவதாக கூறப்படும் ராபின்சன் என்பவர் பேட்டி தர மறுத்துவிட்டார். ஆனால் அவருடைய மனைவி ரசியா கூறுகையில் “இஸ்லாமாபாத்தில் இதுபோன்ற திருமணங்களை அமைத்துக் கொடுக்க தனி அமைப்பு இருப்பதாக” கூறினார்.

பாதிக்கப்பட்ட மொகொதாஸ் வசிக்கும் பகுதியிலேயே மகேக் லியாகத் என்கிற பாதிக்கப்பட்ட பெண்ணும்(வயது 19) உள்ளார். அவர் கூறுகையில் “புரோக்கரான ராபின்சன் மணமகன் – மணமகள் போட்டோக்களை காட்டுவார் என்றும், பிடித்தவுடன் மணமகனை நேரில் காட்ட இஸ்லாமாபாத்தில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்துக்கு அழைத்து செல்வார்கள் என்றும் அங்கு உணவகமும், படுக்கை அறைகளும் இருக்குமென்றும் பேசி முடிதததும் மணமகனுடன், பெண்ணை வலுக்கட்டாயமாக படுக்கை அறைக்கு அனுப்பி வைப்பார்கள் என்றும் கூறினார்.

மேலும் சீனாவுக்கு தான் வாழ சென்ற இடத்தில் தனக்கு மணம் முடித்த மாப்பிள்ளையின் வீட்டில் ஏற்கனவே தன்னைப்போல வந்த பல பெண்கள் இருப்பதாக கூறினார். இது போன்ற பல திருமண நிகழ்சிகளில் தாம் கலந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.   மற்ற பல பெண்களும் இவ்வாறே கூறினர்.

சிம்பால் அக்மல்(வயது  18) என்கிற பெண் கூறுகையில் “என்னை  ஒரு சீனனுக்கு மணம் முடித்து வைக்க என்தந்தை ஒரு இடத்துக்கு கூட்டி சென்றார். அங்கே என்னைப்போலவே 2 கிறிஸ்தவ பெண்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர். 3 சீன மணமகன்களும் அங்கு வந்திருந்தனர். அவர்களில் ஒருவனை ஏற்றுக் கொள்ள என்னை  கட்டாயப்படுத்தினார் என் தந்தை. ஆனால் எனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறியும் தந்தை கேட்கவில்லை. இது எங்கள் கவுரவம் சம்மந்தப்பட்ட விஷயம். ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றார். இத்தனைக்கும் நான் வேறொருவனுக்கு நிச்சயம் ஆகியிருந்தும் என் பெற்றோர் பணத்துக்காக என்னை கட்டாயமாக மணம் செய்வித்தனர்.

ஆனால் நான் சீனனுடன் போகாமல் தப்பித்து எனது மற்றொரு சகோதரியுடன் இக்பால் நடத்தும் சேவை இல்லத்துக்கு வந்துவிட்டேன் என்றார்.

மோகதொஸ் கூறுகையில் “நான் வாழ்க்கைப்பட்ட சீனன் மிகுந்த பண ஆசைபிடித்தவன். அவன் என்னை 2 அறைகள் கொண்ட சின்னஞ்சிறிய வீட்டில் அடைத்து வைத்திருந்தான். வெளியே போக விட மாட்டான். அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதிப்பான். பிறகுதான் தெரிந்தது நான் கர்ப்பமடையக் கூடாது என முயற்சித்தான் என்றும், ஒரு நாள் கிறிஸ்துமஸ் அன்று என்னை தேவாலயத்துக்கு அழைத்து செல்லுமாறு  கூறினேன்.   ஆனால் அவன் என்னை நைய அடித்து துவைத்ததுடன், என் செல்போனையும் உடைத்துவிட்டான்” என்றார்.

சென்ற மாதம் நான் பட்ட கஷ்டங்களை கூற வார்த்தைகளே கிடையாது என்றார். அவன் அந்த அளவுக்கு என்னை துன்புறுத்தினான் என்றார்.

கடைசியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போவோம் என என் குடும்பத்தினர் அவனை மிரட்டியதை அடுத்து தன்னை மீண்டும் பாகிஸ்தான் செல்ல அனுமதித்தான் என்றார்.

மஹேய்க் என்ற பெண் கூறுகையில் “நான் அவனை மணக்க சம்மதிக்கவில்லை. என் பெற்றோர் வற்புறுத்தினர். என் சீன கணவன் என்னை வீட்டை விட்டு எங்கும் செல்ல விட மாட்டான். அவன் ஒரு பயங்கரமானவனவன்” என்றார்.

இது குறித்து சீனாவின் சாலை அமைப்பு நிறுவனத்தில் பணிபுரியும் மஹேய்க்கின் கணவர் லீ தாவோவிடம் கேட்கப்பட்டது. அவர் கூறுகையில் எனக்கு முதல் பார்வையிலேயே மஹேய்க்கை பிடித்து விட்டது. உடனடியாக திருமண அமைப்பினர் மூலம் திருமணம் நடத்தி, சென்ற குளிர் காலத்தில் என் சொந்த ஊரான ஜியான்ச்கூ மாநிலம் சென்லோ கிராமத்துக்கு என் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன் என்றார்.

ஆனால் அவரின் கொடுமை படுத்தும் செயல்கள் தெரியவந்த பின்னர் மஹேய்க்கின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் லீ தாவோவின் வீட்டுக்கு சென்ற போலீசார் சட்டத்துக்கு புறம்பாக வேறு நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை இங்கு கொண்டு வந்து அடைத்து வைத்துள்ளீரா என கேட்டுள்ளனர். அதற்கு அவர் “நான் எதையும் அவளிடம் கட்டாயப்படுத்துவதில்லை. அவள் இங்குள்ள சூழலை புரிந்து தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். அவளுக்கு சரி இல்லை என்றால் அவள் தன் தாய் வீடு செல்லட்டும். நான் அவளுக்காக விமான டிக்கெட் எடுத்து தயாராக வைத்துள்ளேன்” என கூறி தப்பித்தான். இதையடுத்து மஹேய்க் தப்பித்து வந்துள்ளார்.

இது குறித்து மஹேய்க்கின் தாத்தா இத்ரிஸ் மகே கூறுகையில், “நாங்கள் எப்படியோ இவளை காப்பாற்றி விட்டோம். ஆனால், இவளைப்போல சீனாவுக்கு சென்ற ஏராளமான பெண்கள் பல கொடுமைகளை அங்கு அனுபவித்தும் அவர்களால் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை. அவர்கள் மிகவும் ஏழைப் பெண்கள் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஆனால் மஹேய்க்க்கு சீனாவில் உள்ள சில பெண்களின் தொலைபேசி தொடர்புகள் இருந்ததால் திரும்பி வந்திருக்கிறாள் என்றார். ஆனால் அனைவரிடமும் “இவள் திருமணமானவள். இதுதான் இவளது வாழ்க்கை” என்று கூறி வருகின்றராம்!