புதினங்களின் சங்கமம்

யாழில் ஆசிரியர் தாக்கியதில் 11 வயது மாணவனுக்கு செவிப்பறை பாதிப்பு!!

வலிகாமம் – சுழிபுரம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவனை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரம் 6இல் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் அறைந்ததில் மாணவனின் செவிப்பறை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த மாணவனுக்கு பாடசாலை ஆசிரியர் கடந்த 31ஆம் திகதி பாடசாலையில் வைத்து தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவனுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காதிலிருந்து நீர் வடிந்ததை அவதானித்த பெற்றோர், மாணவனை விசாரித்துள்ளனர்.

இந்நிலையில், நடந்த சம்பவத்தை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்திய மாணவனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மாணவனை பரிசோதனை செய்த வைத்தியர்கள் மாணவரின் செவிப்பறை பாதிப்புக்கு உள்ளாகியமையை உறுதி செய்துள்ளனர்.

இதனடிப்படையில், வைத்தியசாலை பிரிவு பொலிஸார் இது குறித்து மாணவனிடம் வாக்குமூலம் பெற்று அதனை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பியுள்ளனர்.

மேலும், மாணவர்களை ஆசிரியர் தாக்கும் சம்பவங்கள் கடந்த இரு மாதங்களாக அதிகரித்து உள்ள நிலையில் வடமாகாண கல்வி அமைச்சு இதுவரை குற்றம் செய்த ஆசிரியர்களுக்கு நிர்வாக ரீதியான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்ததாக தெரியவரவில்லை.