புதினங்களின் சங்கமம்

யாழ் வேலணை மகாவித்தியாலய மாணவர்களுக்கு நஞ்சூட்டியவர்கள் யார்? (வீடியோ)

பிஞ்சுகளுக்குள்
நஞ்சு விதைக்காதீர் ●●●●●==>
கிறிஸ்தவப்பெண்ணை
மணமுடிக்க
ஆபிரஹாமாக மதம்மாறிய
அபிநந்தனன்
காலில் கல்லடிபட்டதும்
“முருகா” என்று கத்தியவாறுதான்
முகக் குப்புற விழுகிறான்.
இந்துவாக மாறினால்தான்
இந்த வீட்டுக்குள்
காலடியெடுத்து வைக்கலாம்
என்று கோரியதால்
பிரணவசொரூபியாக மாறிய
பரம்பரைக் கிறிஸ்தவளாயிருந்த
பியன்கா மேரி
தனது
பிரசவவலியின்போது
“ஏசப்பா” என்று முனகியவாறே
சிவரமணனனை
ஈன்றெடுக்கிறாள்.
எழுவைதீவில் ஒருநாள்
எனது நண்பனின் மனைவி
அமரத்துவமடைந்தபோது
பரம்பரைச் சைவனாகிய நான்
புதைகுழிக்கு மண்போட்டுவிட்டு வந்து
அவர்கள் தந்த
உரிமைச் சோறு சாப்பிட்டபோது
அந்தச் சமயத்தில்
எனக்கு
எந்தச் சமயமும்
தெரியவில்லை.
பருப்புக்கும் சீனிக்கும்
பால்பவுடருக்கும்
செலஸ் ரீனாக மாறிய
பக்கத்துவீட்டுச் செல்லப்பா
என்வீட்டு முருகன் படத்தைப்பார்த்து
சாத்தான்களுக்கெல்லாம்
சாம்பிராணி கொழுத்தாதீர்கள்
என்றதைக் கேட்டு
சற்று
சத்தமாகவே சிரித்துவிட்டேன்.
ஏனெனில்
மாகாளியம்மனிடம்
மடிப்பிச்சையேந்தியே
மகன் பிறந்ததாக
அவன்தாய் என்னிடம்
மாதத்துக்கொருதடவையாவது
மறக்காமல் சொல்லுவாள்.
ஒரு இந்து
மருத்துவம் கற்பித்தால்
அது
இந்து மருத்துவமாகிவிடாது
ஒரு கிறிஸ்தவன்
கணிதம் கற்பித்தால்
அது
கிறிஸ்தவ கணிதமாகிவிடாது
பிஞ்சுகளின் நெஞ்சில்
நஞ்சு விதைக்காதீர்கள் பெரியவர்களே!
நஞ்சு முளைத்து
நாளை
மரமாகிக் கிளைவிட்டால்
நாடு தாங்காது
பிரிவினைகளுக்கு
முன்னுக்கு நிற்பவர்கள் பலர்
சமாதான நீதிவான்களாயிருப்பது
ஒரு காலத்தில்
யே.சி மாட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாறி
ஜே.பி. பட்டம்
கொடுத்துவிட்டார்களென்று சொன்னதை
நிரூபணமாக்குகிறது.
இவ்வாறான நேரங்களில்
இடையில் புகுந்து
சமரசம் செய்துவைக்கவேண்டிய
எமது தலைவர்கள்
ஐந்தாண்டுக்கொருமுறை
பிச்சையெடுக்க போகவேண்டிவருமே
என்பதற்காக
வைக்கோற் போருக்குள்
வைத்த தலையை
இப்போதைக்கு எடுக்கமாட்டார்கள்
நான்
என் தாகத்துக்கான தண்ணீரை
குடத்தில் மொண்டு குடிக்கிறேன்
அவன்
தன் தாகத்துக்கான தண்ணீரை
போத்தலில் மொண்டு குடிக்கிறான்
இவ்வளவுதானே மதம்….?
தாகம் ஒன்றுதான்
பாத்திரங்கள் வேறுவேறு
இப்படி
சமயங்கடந்த உண்மைபேசும்
ஒருவரையும்
பக்கத்திற் காணவே காணோம்.
கேதீச்சர வளைவை
கேவலப்படுத்தியவர்களுக்கும்
குருந்தூர்மலை அடுப்பை
காலால் மதித்தவர்களுக்கும்
குறைந்தபட்சம்
ஒருவித்தியாசமேனுமில்லை.
எல்லோருக்கும் பொதுவான இறைவா…!
இவர்கள்
தாம் செய்வது
இன்னதென்று அறியாதவர்களாயிருக்கிறார்களென்று
நான் நினைக்கவில்லை.
இவர்களை மன்னிப்பீராகில்
நீர்
கடவுளே இல்லை.
ஏனெனில்…
ஏசப்பா! என்பதற்கும்
ஏனப்பா முனியப்பா! என்பதற்கும்
எனக்கு
வித்தியாசம் தெரிவதில்லை.
சின்னமடு மாதாவுக்கும்
சீரணி நாகம்மாளுக்கும்
எனக்கு
வித்தியாசம் தெரிவதில்லை.
25.07.2023

Va Vadivalakaiyan

வடக்கில் திருக்கேதீஸ்வர உடைப்புடன் கடந்த சில ஆண்டுகளாக விதைக்கப்பட்ட மதவாதம் எனும் நச்சு விதையானது இன்று மரமாக வளரத் தொடங்கியுள்ளது.: வேலணை மத்திய கல்லூரிக்கு ஒரு கத்தோலிக்கத் தலைமை ஆசிரியர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதை எதிர்த்து வீதிக்கு இறங்க வைக்கப்பட்ட மாணவர்கள்.சில மூன்றாம் தர நபர்கள் பின்னணி யுடன் .
பின்புலம் : இக் கல்லூரி தரம் 1 தகுதியுடைய கல்லூரி. இக் கல்லூரிக்கு தரம்1 தகுதியுடைய ஒருவர் பணிக்கு அமர்த்த வேண்டும். அப் பதவிக்கு விண்ணப்பித்த மூவரில் ஒருவர் மட்டுமே தரம் 1 தகுதியினையுடையவர், அந்த வகையில் அப் பதவி அவரினையே சாரும். அதனை எதிர்த்தே இன்று மாணவர்கள் பிழையாக மதவாதம் புகுத்தப்பட்டு, வீதிக்கு இறங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்ப்பவர்கள் சொல்லும் வாதம் என்ன? இந்து கல்லூரி என்றாலும் ஒரு லாஜிக் இருக்காலம்..

? “குறித்த முதல்வர் ஒரு கத்தோலிக்கர் , இவர் இப் பள்ளியின் முதல்வரானால் ‘சைவப் பாரம்பரியம்’ கெட்டு விடும்”.???

மத்திய கல்லூரிகள் ( Central colleges) உருவாக்கப்பட்டதன் நோக்கம் ஆங்கிலக் கல்வியினையும், அறிவியல் பாடத்தினையும் வளர்ப்ப்பதே. இதற்காகவே மத்திய கல்லூரிகள் , மதம் வளர்ப்பதற்கு அன்று. இன்று குறித்த முதல்வர் கற்பிக்கும் பள்ளியின் பெயரோ ‘இராமகிருஷ்ண ‘ என்ற கல்லூரி , அங்கு கெட்டுப் போகாத பாரம்பரியம் இங்கு எப்படிக் கெடும்???

தனிப்பட்ட விடயங்களை பகிர்வது தவறு ஆனாலும்..அவர் திருமணம் செய்தது ஒரு சைவ சமயம் சார்ந்த பெண்ணினை. அப் பெண் இன்றும் சைவ சமயத்தினையே பின்பற்றுகின்றார். அவர்களது பிள்ளைகளும் சைவத்தினையே பின்பற்றுகின்றனர். இப்படிச் சொந்த மனைவி, சொந்தப் பிள்ளைகளையே மதம் மாற்றாதவர், எப்படி மாணவர்களை மதம் மாற்றுவார்???
ஏன் இப்போது கற்பிக்கும் கல்லூரியில் அவர் மதம் மாற்ற முயலவில்லை???

பெரும்பான்மையான மாணவர்கள் எம் மதமோ, அந்த மதத்தினைச் சேர்ந்த முதல்வரே பணிக்கு வர வேண்டும்”. முழு அரச பாடசாலை, எந்த இந்து அமைப்பும் உதவி செய்வதும் இல்லை..
அப்படி எந்த விதியுமில்லை, இப்படிப் பெரும்பான்மை வாதம் பார்த்தால் சிங்களவர் செய்ததும் சரி என்றாகி விடுமே!!!
அவர் வேலணையில்லை, அவர் இப் பள்ளியின் பழைய மாணவரில்லை ” அவ்வாறு விதிகள் எதுவுமில்லை. இலங்கையின் பெரும்பாலான கல்லூரிகளின் முதல்வர்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்களாகவோ/ அப் பள்ளிக் கூடத்தினைச் சேர்ந்தவர்களோ அல்லவே????

இவ்வாறு வலுவற்ற வாதங்களை முன் வைத்தே போராட்டம் நடக்கின்றது. இதன் பின்புலம் என்னவென்றால் அப் பள்ளியின் முதல்வருக்கு விண்ணப்பித்தவர்களிலொருவர் தரம் 3 தகுதியினை உடையவர், அவர் குறித்த கத்தோலிக்க மதத்தினைச் சார்ந்த தரம் 1 முதல்வரை விழுத்தி விட்டு, அந்த இடத்தினைப் பிடிக்க செய்த சூழ்ச்சியே இது. இதற்கு அவருக்குச் சார்பான சில ஊரார்களுமுண்டு. இவ்வாறு தொடங்கிய முரணானது, அண்மையில் யாழ்ப்பாணத்தில் வளர்த்து எடுக்கப்பட்ட சிவசேனை போன்ற மதவாத அமைப்புக்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்டு, இந்த நிலைக்கு வந்துள்ளது.
எத்தனையோ புரட்சிகரமான மாணவர் போராட்டங்களை நடாத்திக் காட்டிய யாழ் மண்ணில் இப்படி ஒரு பிற்போக்கான மாணவர் போராட்டம் நடப்பதனை என்ன சொல்வது!

தந்தை செல்வா என்றொரு கிறித்தவரைத் தமது அரசியல் தலைவராக, தேசத்தின் தந்தையாக ஏற்றுக் கொண்டிருந்த ஈழம் இன்று எங்கே செல்லுகின்றது! தந்தை செல்வா இறுதியாகச் சொன்னது ” இனிக் கடவுள்தான் தமிழரைக் காப்பாற்ற வேண்டும்” என்று. அக் கடவுள் காப்பாற்ற வரப் போவதில்லை, ஆனால் அவரது வெவ்வேறு பெயர்களில் தமிழரைப் பிளவடையச் செய்து அழிவடைய வழி செய்வது மட்டும் நடப்பது நன்கு தெரிகின்றது.

ஈழத் தமிழரை வழிநடத்த வேண்டிய ஈழத் தமிழ் அரசியல் கட்சிகள் வழமை போல, ‘சிவனே ‘ என்றிருக்கின்றன!