இலங்கையில் மீண்டும் ஐ.எஸ் தாக்குதல் நடாத்தும் ஆபத்து!! எச்சரிக்கை விடப்படுகின்றது….
இலங்கை மற்றும் இந்தியா ஆகியன ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அடுத்த இலக்காக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பின் வலு குன்றிய நிலையில் ஐ.எஸ் அமைப்பு இந்த நகர்வினை மேற்கொண்டுள்ளதாக இந்திய புலனாய்வுத்துறையின் தகவல்களை மையப்படுத்தி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அதிகரிப்புக்கான சாத்தியம் குறித்து புலனாய்வுத்துறையினரால் கேரளாவின் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தமது தளங்களை அங்கு இழந்துள்ளமையினால் இங்கு அவ்வாறான தாக்குதல்களை நடத்தி அவற்றை மீளப்பெறும் நோக்கிலேயே இந்த தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வுத்துறையின் கடிதத்தில் குறிப்படப்பட்டுள்ளது.
கேரளாவின் கொச்சினை மையப்படுத்தி பலநோக்கு வர்த்தக கட்டடத் தொகுதிகள் இலக்காக அமையலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.ஐ.எஸ் பயங்கரவாதிகள் குறித்து தமிழ் நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இந்தியப் புலனாய்வுத்துறையினரால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.கடந்த சில வருடங்களில் கேரளாவிலிருந்து 100இற்கும் மேற்பட்டோர் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்து கொண்டுள்ளதாக இந்திய உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் கூறுகின்றார்,இந்திய தென் மாநிலங்களில் உள்ள 21 ஆலோசனை மையங்களில் 3 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றுவருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.அத்துடன், அண்மையில் இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த 30இற்கும் மேற்பட்டோரை இந்திய புலனாய்வுத் துறை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.