புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்..! விசேட அதிரடிப்படையினரால் மூவர் கைது !!

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று இரவு (30.06) 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதிக்கு ஜீப் ரக வாகனம் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பவற்றில் வந்த குழுவினர் அப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது வாளால் வெட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

இதன்போது, கிராம மக்கள் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கிய போதும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து, கிராம மக்கள் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு வந்த விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூன்று பேரை கைது செய்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைந்துள்ளனர்.

அத்துடன் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் ஜீப் வண்டியும் மீட்கப்பட்டுள்ளதுடன், அதில் இருந்து இரு வாள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய செல்வம் தவேந்திரன் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் பண்டாரிக்குளம், மகாறம்பைக்குளம் மற்றும் வெளிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.