கல்முனை பிரதேசசெயலகத்தை தரமுயர்த்துங்கள் என தமிழர்கள் போராட்டம்!! உயர்த்த வேண்டாம் என முஸ்லீம்கள் போராட்டம்!! நடப்பது என்ன?
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ளது.
நாளை(20) கல்முனை மாநகரில் உள்ள பொதுஇடம் ஒன்றில் காலை குறித்த சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதே வேளை கல்முனை மாநகர வளாகத்தில் முக்கிய உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வர்த்தக சமூகத்தினரின் பங்குபற்றலுடன் இன்று மாலை நடைபெற்று முடிந்த முக்கிய கூட்டம் ஒன்றில் தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்ம் தொடர்பாக முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டில் போராட்டமானது பொதுப்போக்குவரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் அவசரகால சட்ட விதிகளுக்கமைய அப்போராட்டத்தை சமூக நல்லிணக்கம் கருதி அகற்ற வேண்டும் என பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதே வேளை மேலும் வலுவடைந்துள்ள இப்போராட்டமானது மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 30 வருடங்களாக தரமுயர்த்தப்படாமல் சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் இழுத்தடிக்கப்பட்டுவரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு அரசை கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டம் 17 ஆம் திகதி கல்முனையில் ஆரம்பமாகிநடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை
கல்முனை தமிழ் சிங்கள கிறிஸ்தவ மக்களின் பெரும் ஆதரவுடன் 1000 மெழுகுவர்த்தி போராட்டம்
பாறுக் ஷிஹான்
கல்முனை தமிழ் சிங்கள கிறிஸ்தவ மக்களின் பெரும் ஆதரவுடன் உண்ணாவிரதப்போராட்டம் மூன்றாவது நாளாக 1000 மெழுகுவர்த்தி ஒளி ஏற்றப்பட்டு தொடர்கிறது .
இன்று (19) மாலை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்ம் வலுவடைந்த நிலையில் ஒன்று கூடிய பெரும் திரளான மக்கள் இவ்வாறான நூதனமான போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இப்போராட்டத்தில் பங்குகொண்டவர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பி தத்தமது கைகளில் மெழுகுதிரிகளை ஏந்திய வண்ணம் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இப்போராட்டத்தில் அருட்சகோதரர்கள் பல்வேறு அமைப்பு சார் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பெரும் திரளானோர் பங்கு பற்றினர்.






