யாழில் 1980ம் ஆண்டு குண்டு விழ விழ குழந்தை பெற்ற தாய்!! வைத்தியர் என்ன செய்தார் ??
1980களின் நடுப்பகுதியை கடந்த ஒரு நாள். இந்திய அமைதிப்படை வருகைக்கு முற்பட்ட காலம். இலங்கை ராணுவத்தின் ‘பொம்மர்கள்’ என்று சொல்லப்பட்ட விமானங்கள் யாழ் நகர் மீது கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதல்களை நடத்தியதில் யாழ் நகரே வெறிச்சோடிக் கிடந்தது. இரண்டாம் நாளாக அன்றும் பகல் வேளை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது. விடுதலைப் புலிகளின் கலிபர் ரக ஆயுதங்கள் பொருத்தப்பட்ட பிக்கப் வாகனங்கள் ஓரிரண்டு மட்டும் வீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது தென்பட்டுக்கொண்டு இருந்தன. அதைவிட எந்தவொரு தனியார் வாகனங்களின் நடமாட்டமும் வீதியில் இருக்கவில்லை. வானை நோக்கி வெள்ளைக்கொடிகளை வீசிக்காட்டிய வண்ணம் சில அவசர நோயாளர்கள் யாழ் போதனா வைத்தியசாலையை நெருங்கிக் கொண்டிருந்தனர். அப்போதைய நாட்களில் யாழ் வைத்தியசாலை பாதுகாப்பு வலயமென சட்டப்படி பிரகடனப் படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால், வைத்தியசாலை மீது குண்டுகள் வீசப்பட மாட்டாது என்ற பெயரளவு நம்பிக்கை மட்டும் இருந்தது.
இப்படியான சூழ்நிலையில் வைத்தியசாலைக்குள் பிரசவ விடுதியில் சற்றுப் பரபரப்பு. மகப்பேற்றுக்காக சேர்க்கப்பட்டிருந்த ஒரு தாயின் அவலக்குரல் வைத்தியசாலை முழுவதிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. வயிற்றிலுள்ள குழந்தையின் இருப்பு நிலை மாற்றம் காரணமாக தாயையும் சேயையும் உயிருடன் காப்பாற்ற முடியுமா என்ற சந்தேகம். வெளியில் உறவினர்கள் கலங்கி நின்ற பொழுது ஒரேயொரு வைத்தியரின் குரல் மட்டும் அவர்களை சமாதானப்படுத்தியதோடு மட்டும் நின்றுவிடாது துரிதமாக செயற்பட சில அறிவுறுத்தல்களை உத்தியோகத்தர்களிடம் பரிந்துரை செய்கிறது. அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் அப்போதைய வைத்தியசாலைப் பணிப்பாளரான டாக்டர் நச்சினார்க்கினியன் அவர்களே.
டாக்டர் சபாரட்ணம் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வந்தால் இந்தத் தாயையும் சேயையும் நிச்சயமாகக் காப்பாற்றி விடலாம் என்கிறார் டாக்டர் நச்சினார்க்கினியன். ஆனால், இந்தக் கடும் குண்டுத் தாக்குதல்களுக்கு நடுவில் எந்த வைத்தியராலும் வைத்தியசாலைக்கு வர வாய்ப்பே இல்லை. ஆனாலும் அவர் தளர்ந்துவிடவில்லை.
வாடகை வாகன சாரதிகள் எவரும் அச்சமயம் உதவிசெய்யும் சூழ்நிலை இருக்கவில்லை. பகல் வேளை ஊரடங்கு அமுலில் இருந்ததால் வீதியில் தலைகாட்ட எவரும் தயாராக இல்லை. எதைப் பற்றியும் சிந்தியாமல் உடனடியாக அம்புலன்ஸை அனுப்பி அதில் டாக்டர் சபாரட்ணம் அவர்களை ஏற்றி வரும்படி டாக்டர் நச்சினார்க்கினியன் கட்டளையிட, அம்புலன்ஸ் புறப்படுகிறது. சட்டநாதர் சிவன் கோவிலடியில் வசித்த டாக்டர் சபாரட்ணம் அவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு மணிநேரத்துக்குள் அம்புலன்ஸ் வைத்தியசாலையை மீண்டும் அடைந்துவிடுகிறது.
நம்பிக்கையுடன் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சத்திர சிகிச்சை அறையில் உடனடியாக சிகிச்சை ஆரம்பிக்கப்படுகிறது. குண்டுச் சத்த அதிர்வுகளில் கூட கைகளில் நடுக்கம் சிறிதும் இல்லாமல் சத்திர சிகிச்சை உபகரணங்களை கையாளும் வல்லமை இலங்கைத் தமிழ் வைத்தியர்களுக்கு மட்டுமே உண்டு என்பது இந்த உலகம் அறிந்த உண்மை.
வெற்றிகரமாக நடந்து முடிந்தது ஒரு மிகப்பெரும் சவால் நிறைந்த விடயம்.
பூரண நலம் பெற்றன தாயும் சேயும்.
கண்ணீர் கலந்த நன்றிகளை தெரிவித்தன சுற்றி நின்ற உறவுகள்.
டாக்டர் நச்சினார்க்கினியன் அவர்கள் ஒரு வைத்தியராக மட்டும் தன் கடமைகளை, அதுவும் சட்டத்துக்கு அமைவாகச் செய்ய நினைத்திருந்தால், அன்று ஒரு அம்புலன்ஸ் இன்னொரு வைத்தியரைத் தேடிப் புறப்பட்டிருக்காது.
இத்தனை பிரயத்தனம் எடுத்து என்ன காரணத்துக்காக அன்று அந்த கர்ப்பிணித் தாய் காப்பாற்றப்பட வேண்டுமென டாக்டர் நச்சினார்க்கினியன் இத்தனை கரிசனை காட்டியிருந்தார் என்று ஆராயும் போது ஒரு திடுக்கிடும் காரணம் அகப்பட்டது.
ஒருவேளை ரத்த உறவினராய் இருந்திருக்குமோ?
இல்லவே இல்லை.
பெண் எடுத்த, பெண் கொடுத்த திருமணத் தொடர்புகள்?
சத்தியமாக இல்லை.
சிலவேளை நட்பு?
நிச்சயமாய் இல்லை.
முன்பின் தெரிந்தவர்களோ?
கண்டிப்பாய் இல்லை.
குறைந்த பட்சம் அயலவர்களாக இருந்திருக்கலாம்?
நல்லூரான் ஆணையாக எதுவும் இல்லை.
இவற்றையெல்லாம் கடந்த அந்தத் திடுக்கிடும் காரணம் ஒன்றே ஒன்றுதான்.
ஆம்! அதுதான் ‘மனித நேயம்‘.
அறிமுகமே இல்லாத ஒருவனின் மோட்டார் சைக்கிள் ‘ஸ்ரான்ட்’ சரியாக தட்டியிருக்கவில்லை என்பதற்காக அந்த மோட்டார் சைக்கிளை துரத்திப் பிடிக்க வெறும் சைக்கிளில் வியர்க்க விறுவிறுக்க ஓடி அந்த மோட்டார் சைக்கிள் காரனை நிறுத்தி, அவனிடம் அறிவுறுத்தல் கொடுக்கும் ஒவ்வொரு மானிடர்களுக்கும் ’மனித நேயத்தின்’ அர்த்தம் கண்டிப்பாய்த் தெரிந்திருக்கும்.
டாக்டரின் அதேபோன்றதொரு மனித நேயம்தான் அந்தக் கர்பிணித் தாயின் உயிரை அன்று காப்பாற்ற உதவியது.
அன்று டாக்டர் நச்சினார்க்கினியன் அவர்கள் காப்பாற்றிய அந்த பெண் வேறு யாரும் அல்ல. என் தாய். காப்பாற்றப்பட்ட அந்தக் குழந்தை என் கடைசித் தங்கை.
இன்றுவரை என் பெற்றோர் மனதார வாழ்த்திக்கொண்டிருக்கும் இந்த வைத்தியரை ஒருதடவை கூட நான் நேரில் கண்டது கிடையாது. இரண்டொரு தினங்களுக்கு முன்னர் என் சிறிய தந்தை ஒருவர் டாக்டர் நச்சினார்க்கினியன் அவர்களின் வீடியோ பதிவொன்றைக் காட்டிய பொழுது, டாக்டர் பற்றிய இந்தப் பழைய நினைவுகளை என் பெற்றோர் நேற்றிரவு மீண்டும் நினைவுபடுத்திக் கூறியிருந்தனர். டாக்டரின் நீண்ட ஆயுளுக்கும் நோய்நொடியற்ற வாழ்வுக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும்.
மேலும்,
டாக்டர் சபாரட்ணம், மற்றும் அம்புலன்ஸ் சாரதியான அந்த முகம் தெரியாத நபர், மற்றும் அச்சமயம் சேவையில் இருந்த தாதியர் எனப் பலரும் காலங்கடந்த நன்றியறிதலுக்கு இன்றும் உரித்துடையவராகின்றனர்.
இது என் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு சின்ன உதாரண சம்பவம். இதைப்போல நாட்டில் பல்வேறு இக்கட்டான சம்பவங்களில் பல உயிர்கள் காப்பாற்றப்பட இதே போல பல டாக்டர் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
சாதாரண மனிதருக்கும் கடவுளுக்கும் இடையில் தூரம் மிக அதிகம். ஆனால் வைத்தியர்கள் மட்டும் கடவுளுக்கு மிக மிக அருகில் இருப்பவர்கள். போற்றப்பட வேண்டியவர்கள். ‘அன்னையர் தினம்’, ‘தந்தையர் தினம்’, ‘காதலர் தினம்’ என்றெல்லாம் கொண்டாடுகின்ற நாம் ‘வைத்தியர் தினம்‘ (Doctors’ Day) என்று ஒரு நாளை கண்டிப்பாக உருவாக்கி இருந்திருக்க வேண்டும். உயிர்களைக் காப்பாற்றும் எல்லா வைத்தியர்களுக்கும், அவர்களது புனித சேவைகளுக்கும் நன்றி கூறும் நாளாக அது அமைந்திருக்க வேண்டும்.
எல்லா வைத்தியத் துறை அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம்.
அன்புடன்,
ரஞ்சித் தவராஜா
(கனடாவிலிருந்து)

