வடமாகாண கல்விப்பணிப்பாளர் அச்சுறுத்துகிறார்!!கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் முறைப்பாடு: திருவிளையாடல்கள் ஆரம்பம்!
வடமாகாண பதில் மாகாண கல்விப்பணிப்பாளர் திருஞானம் ஜோன் குயின்ரஸ் தனக்கு உயிரச்சுறுத்தலையும், அபகீர்த்தியையும் ஏற்படுத்தும் விதமாக செயற்படுவதாக வலயக் கல்விப்பணிப்பாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தெற்கு கல்வி வலய பணிப்பாளர் கி.கமலராஜனே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
சில வருடங்களின் முன்னர் கிளிநொச்சி வலய கல்விப்பணிமனையின் கட்டிடடொன்றை சொகுசு பேருந்து மோதி சேதப்படுத்தியிருந்தது. இதற்கான இழப்பீட்டை பேருந்தின் காப்புறுதி நிறுவனம் ஊடாக பெற்று வழங்கியிருக்க வேண்டும்.
எனினும், சொகுசு பேருந்து உரிமையாளர் கட்டிடத்தின் சேதத்துக்கான பெறுமதியை வழங்கியிருக்கவில்லை. ரூ.705,523.50 சேதமேற்பட்டதாக மதிப்பிடப்பட்டிருந்தது.
விபத்து நடந்தபோது, கிளிநொச்சி தெற்கு கல்வி வலய பணிப்பாளராக செயற்பட்டவர், திருஞானம் ஜோன் குயின்ரஸ். அவர் இப்போது வடமாகாண பதில் மாகாண கல்விப்பணிப்பாளராக கடமையாற்றுகிறார்.
காப்புறுதி நிறுவனத்திடமிருந்து பணம் பெற்று கட்டிடம் திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. அரச நிதியில் கட்டிடம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, வலயக் கல்விப்பணிப்பாளரும் அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி, தற்போதைய வலயக்கல்விப்பணிப்பாளர் கி.கமலராஜன் முன்னிலையாகியிருந்தார். காப்புறுதி நிறுவன பணம் கிடைக்கவில்லையென மன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் முன்னிலையாகிய பின்னர், வடமாகாண பதில் மாகாண கல்விப்பணிப்பாளர் திருஞானம் ஜோன் குயின்ரஸ் தன்னை அச்சுறுத்துவதாகவும், அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாக செயற்படுவதாகவும், சுயவிபரக் கோவையில் ஆவணங்களை சேதம் செய்தல், பதவி உயர்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் முறையிட்டுள்ளார்.
அத்துடன், விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி, வலயக்கல்வி பணிமனைக்கு வந்து, வாகன உரிமையாளர் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து ஒரு கோடி ரூபா பெற்றதாகவும், “உண்மையில் உங்களுக்கு விபத்து நட்டஈடு கிடைக்கவில்லையா?“ என வினவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“நீர் ஏன் நீதிமன்றம் சென்றீர்?“, “உம்மை யார் நீதிமன்றம் போகச் சொன்னது?“ என பதில் மாகாண கல்விப்பணிப்பாளர் கேள்வியெழுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண கல்வியமைச்சின் செயலாளரை தொடர்பு கொண்டு வினவியபோது, அவ்வாறான முறைப்பாடு கிடைத்ததை உறுதி செய்தார்.
அது குறித்து பதில் மாகாண பணிப்பாளரிடமிருந்து விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
