கிளிநொச்சியில் வெடிகுண்டுத் தாக்குதல் மிரட்டல் விட்ட இரு பெண்கள்!! ரீஐடி தீவிர விசாரணை!!
கிளிநொச்சியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் கடிதம் மீட்கப்பட்ட விவகாரத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி நகருக்கு அண்மையான பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தனது வீட்டுக்கு இரண்டு பெண்கள் வந்ததாக, அந்த வீட்டில் குடியிருந்த பெண் பொலிசாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இடமொன்றை குறிப்பிட்டு, அங்கு வந்ததாகவும், இரவு வெகுநேரமாகி விட்டதால் தமது வீட்டுக்கு செல்ல பேருந்து வசதியில்லையென குறிப்பிட்டு, அந்த வீட்டில் இரவு தங்கிவிட்டு செல்லலாமா என கேட்டதாகவும், தான் அனுமதியளித்ததாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு பெண்களையும் வீட்டின் முன்பகுதியில் தங்க வைத்துவிட்டு, அறைக்குள் பிள்ளையுடன் உறங்கச் சென்றுவிட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
நள்ளிரவு 12 மணியளவில் வெளியில் வந்து பார்த்த போது, இரண்டு பெண்களையும் காணவில்லையென்றும், அவர்கள் படுத்திருந்த இடத்தில் காகிதமொன்றும், ரூ.5,000 நாணயத்தாள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்த. மதம்தான் எங்கள் மூச்சு உள்ளிட்ட சில வாசகங்களும் கடித்தில் காணப்பட்டன. அதில் இரண்டு தொலைபேசி இலக்கங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.
அந்த வீட்டில் தங்கியிருந்த பெண் இஸ்லாமிய மதத்தவர். இரண்டு வருடங்களின் முன்னர், கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து, அந்த வீட்டுக்கு குடிவந்தவர். எனினும், கணவர் தற்போது பிரிந்து சென்றுவிட்டார். ஒன்றரை வயது குழந்தையுடன் தனித்து வாழ்ந்து வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.
