வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவைக் கலைத்தார் ஆளுநர்
வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களையும்
பதவி நீக்குவதாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், அவர்கள் 5 பேருக்கும்
கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட 5 உறுப்பினர்களையும் பதவி
விலகுமாறு ஆளுநரால் கடந்த 7ஆம் திகதி கோரப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் ஒருவார
காலத்தில் பதவி விலகவில்லை. அதனால் தலைவர் உள்ளிட்ட 5 பேரினதும் பதவி நீக்கப்பட்டுள்ளதாக
ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பொதுச் சேவையை புத்துயிர் பெறச் செய்யும் வகையில் முன்னெடுக்கப்படும்
நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவை கலைத்துள்ளதாக ஆளுநர்
கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட அரச
அதிபர் சி.பத்மநாதன் தலைவராகக் கொண்டு முன்னாள் ஆளுநர் றெஜினோல்ட் குரேயால் 2017ஆம்
ஆண்டு ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் வழங்கப்பட்ட சில
நியமனங்கள் தொடர்பில் எழுந்த முரண்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப்
பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.