பிரித்தானியாவில் தமிழ் கடைகளை நடத்தும் முதலாளிமார் மற்றும் அங்கு கைகாசுக்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டத்திற்கு அமைய, 60,000 பவுண்ட் மற்றும் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
சட்டவிரோதமாக பணியாற்றும் டெலிவரி ஊழியர்கள் அல்லது கைகாசுக்கு பணியாற்றுபவரை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு சட்டவிரோதமாக பணியாற்றும் ஒரு பணியாளருக்கு 60,000 பவுண்டஸ்கள் வரை அபராதம், நிறுவன இயக்குனர் பதவி நீக்கம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
தங்கள் நிறுவனத்தின் பெயரில் பணியாற்றும் ஒவ்வொரு நபருக்கும் பிரித்தானியாவில் பணிபுரிய சட்டப்பூர்வ உரிமை உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது இப்போது நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முன்பு ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் நெகிழ்வுத்தன்மை கொண்ட ஒப்பந்த முறைகளை பயன்படுத்தி வந்ததால், இந்த ஊழியர்களின் சட்டப்பூர்வ நிலையை சரிபார்க்கும் கடமை அவர்களுக்கு இருந்திருக்கவில்லை.
உணவு விநியோகம், கட்டுமானத்துறை மற்றும் கொரியர் சேவைகள் உட்பட இத்தகைய நெகிழ்வான ஒப்பந்தங்களை நம்பியிருந்த அனைத்து துறைகளுக்கும் இந்த புதிய விதிகள் பொருந்தும் என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2024 ஜூலை மாதம் முதல் சட்டவிரோத பணிக்கு எதிரான அமுலாக்க நடவடிக்கைகள் இரட்டிப்பாகியுள்ளதோடு, கைது நடவடிக்கைகளும் 122 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலைமையில் தமிழ் கடைகளில் பணியாற்றுவோர் மிகவும் அவதானமாக செயல்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.




