யாழ்ப்பாணத்தில் கலியாண வீட்டு முதலிரவுகளையும் ஒன்லைனில் நேரலையாக காட்ட ஆசைப்படுகின்றார்கள்…
கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் மூத்த பத்திரிகையாளர் மரணச்சடங்கு நடக்கும் வீடு ஒன்றிற்குப் போயிருந்தார். அங்கு இறந்தவரின் நெருங்கிய உறவு அவரை கண்டு தனது உறவு எவ்வாறு இறந்தது என்பது பற்றி தெரிவிப்பதற்கு முன் ”இவங்கட தொல்லை தாங்க முடியாமல் இருக்குது” என்று அழத் தொடங்கினாராம். ”யாருடைய தொல்லை” என மூத்த பத்திரிகையாளர் அவரைக் கேட்ட போது ”தான் தனது உறவு இறந்தது தொடர்பாக யாழில் பத்திரிகை ஒன்றில் மரண அறிவித்தல் போட்டிருந்தேன். அதில் தனது தொலைபேசி இலக்கத்தையும் போட்டிருந்தேன். மரண அறிவித்தல் பத்திரிகையில் வெளிவந்தது முதல் எனது தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்ச்சியாக அழைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன. நாங்கள் ஒன்லைன் வெப்சயிட்டில் இருந்து கதைக்கின்றோம். லைவ்வாக நாங்கள் செத்தவீட்டை வீடியோ எடுத்து வெளியிடுவோம். 18 ஆயிரம் தாருங்கள் என்றும் 20 ஆயிரம் தாருங்கள் என்றும் தொடர்ச்சியாக பல்வேறு இலக்கங்களில் இருந்து அழைப்பு எடுத்து தொல்லை பண்ணுறாங்கள். எனது உறவுகள், நண்பர்கள் யாராவது எடுக்கின்றார்களா? என நான் இந்த அவலத்திலும் வரும் அழைப்புக்களுக்கு பதில் சொல்ல முற்படும் போது எடுப்பவர்கள் எல்லாம் இவ்வாறான வீடியோகாரர்களாக இருக்கின்றார்கள்” என அழுது புலம்பினாராம். மூத்த பத்திரிகையாளருக்கு அந்த தகவல் புதிதாக இருக்கலாம். ஆனால் இவ்வாறு பத்திரிகைகளில் வரும் பிரசுரங்களைப் பார்த்து தொலைபேசியில் தொல்லைப்படுத்துபவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள்.
இதை விட இன்னும் சில சிறப்புகள் இருக்கின்றது. ஒருவர் இறந்து அவரது மரண அறிவித்தல் பத்திரிகையில் வந்தால் அந்த பெயர் விபரத்தையும் விலாசத்தையும் குறித்தெடுக்கும் மற்றைய பத்திரிகைகள் மற்றும் இணையத்தள முதலாளிகள் மற்றும் முகவர்கள் இறந்தவரது அந்தியேட்டி அறிவித்தலை பெறுவதற்காக செத்தவீடு முடிந்து 7 நாட்களின் பின் திரும்பவும் தொல்லை கொடுக்க தொடங்கிவிடுவார்கள்.அந்தியேட்டி நிகழ்வு விபரத்தை எங்களது பத்திரிகையில் வெளியிட்டால் இவ்வளவு கழிவு, இவ்வளவு குறைவான தொகை என கூறுவார்களாம். இல்லாது விடின் கடிதம் மூலம் அந்த விலாசத்து தமது பத்திரிகை சார்பில் இரங்கல் நோட்டிஸ் ஒன்றை அனுப்பிவிட்டு அதிலேயே அந்தியேட்டிட தகவலை இந்தக் கழிவுடன் உங்களுக்கு நாங்கள் வெளியிட்டு தருவோம் எனவும் அனுப்புகின்றார்கள். அதே போல் இணையத்தளங்களில் பணிபுரிபவர்கள் தங்களது பெண் ஊழியர்களைக் கொண்டு மரணச்சடங்கு நடந்த வீட்டுக்கு அழைப்பு எடுத்து கனிவான குரலில் அனுதாபம் தெரிவித்த பின் இணையத்தளத்தில் உங்களது அந்தியேட்டி அழைப்பு பிரசுரிக்கலாம். மிகக் குறைந்த செலவுடன் 50 வருசத்துக்கு மேல் எமது இணையத்தளத்தில் அப்படியே இருக்கும் எனவும் கூறுகின்றார்கள். இவ்வாறான தொல்லைகள் தற்போது மிகவும் அதிகரித்து காணப்படுகின்றது. அவர்கள் இவற்றுடன் விட்டுவிடுவதில்லை. ஓராண்டு நிறைவினைக் கூட ஞாபகம் வைத்து ஒரு கிழமைக்கு முன் அழைப்பு எடுப்பதுதான் அவர்களின் அயராத தளராத மன ஆற்றலைக் காட்டுவதாக இறந்தவர்களின் தகவலை பத்திரிகையில் போட்டு நொந்து நுாலான சிலர் தெரிவித்தார்கள்.
இது மட்டுமல்ல. இவர்களின் திருவிளையாடல்கள் பல ரூபங்களி்ல் தொடர்கின்றது. கடந்த ஜனவரி மாதம் குறித்த நாளில் நடக்க இருந்த திருமணத்திற்காக தமது உறவுகள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்கள். அந்த அழைப்பிதழில் இருந்த மாப்பிளை வீட்டு, பெண்வீட்டாரின் தொலைபேசி இலக்கங்களுக்கு குறித்த ஒரு வீடியோ நிறுவனம் ஒன்றின் முகவர்கள் என்ற பெயரில் அழைப்பெடுத்து கதைத்துள்ளார்கள். தாங்கள் மிகக் குறைந்த செலவில் வீடியோ மற்றும் புகைப்படங்கள், அல்பம் செய்து தருவோம் என்றும் பெண் வீட்டாருக்கு மாப்பிளை வீட்டாரின் நண்பர்கள் எனவும் மாப்பிளை வீட்டாருக்கு பெண் வீட்டாரின் நண்பர்கள் எனவும் கூறி திருவிளையாடல் செய்துள்ளார்கள். மாப்பிளை அரச உத்தியோகத்தர். தனது தந்தைக்கு வந்த அந்த அழைப்பின் தொலைபேசி நம்பரை எடுத்து அவர்களுடன் கதைத்துள்ளார். அவர்கள் மிகவும் கவர்ச்சிகரமாக தங்களுடைய திருவிளையாடல்களை கூறியுள்ளார்கள்.
அதிகலை 5 மணிக்கே மாப்பி்ளை, பெண்ணின் வீட்டுக்கு வந்துவிடுவோம். முக்கியமான ”சொட்” கள் நீங்கள் அறியாமலேயே நாங்கள் எடுப்போம். சினிமா சூட்டிங் போல் எமது காட்சிகள் இருக்கும். இரவுவரை நாம் உங்களுடனேயே இருப்போம்.. வெளிநாட்டில் உள்ள உறவுகள் பார்ப்பதற்கு எங்களது சொந்த “அப்” ஒன்றின் மூலமே ஒன்லைனில் காட்சிப்படுத்துவோம்… நீங்கள் விரும்பினால் ஆயிரக்கணக்கானவர்கள் பார்ப்பதற்கும் வழி செய்வோம்” என அவர்கள் கூற கடுப்பான அரச உத்தியோகத்தரான மாப்பிளை ”அப்ப முதலிரவையும் சிறப்பாக காட்டுவீர்களா” என கேட்டுள்ளார். அத்துடன் அவர்கள் தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டார்களாம்.
32 வயதாகியும் திருமணம் செய்யமால் பொறுமையாக இருந்து சீதனம் தேவையில்லை என்று கூறி நல்ல மாப்பிளை என பெயர் எடுத்து பெண் அரச உத்தியோகத்தரான ஒரு யுவதியை கலியாணம் கட்ட அந்த அரச ஊழியர் பட்டபாடு தெய்வத்துக்கே புரியாது…… இந்த போட்டோக்காரங்களுக்கு எங்க புரியப்போகுது….
வம்பன்