யாழ் தென்மராட்சிப் பகுதியில் கணவனால் மனைவி கொடூர சித்திரவதை!! சட்டத்தரணி செய்தது என்ன?
தென்மராட்சி பிரதேசத்தில் மனைவியை அடித்துத் துன்புறுத்தி, வீட்டில் அடைத்து வைத்த கணவரை பொலிசார் கைது செய்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளார்.
கடந்தவாரம் இந்த சம்பவம் நடந்தது.
தென்மராட்சி பிரதேசத்திலுள்ள பகுதியொன்றில் இந்த சம்பவம் நடந்தது.
பாதிக்கப்பட்ட பெண் சாவகச்சேரி வைத்தியசாலையில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பின்னர், நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.
இந்த தம்பதியினருக்கு சில வருடங்களின் முன்னர் திருமணமானது. அண்மைக்காலமாக, மனைவி குடும்ப வன்முறைக்குள்ளாகி வந்துள்ளார்.
கணவரின் கண்மூடித்தனமான தாக்குதலால் மோசமாக பாதிக்கப்பட்டு, பொலிஸ் நிலையத்திலும் சில தடவைகள் முறைப்பாடு செய்துள்ளார்.
மகள் குடும்ப வன்முறைக்குள்ளாகுவதை அறிந்த பின்னர், பெற்றோர் மிகுந்த அவதானமாக செயற்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில், மகளுடன் இரண்டு நாட்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமல் போனதையடுத்து, தந்தையார் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று தகவல் தெரிவித்துள்ளார்.
பொலிசார், கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியபோது, தான் வேலையில் நிற்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும், தமக்கு சந்தேகமாக இருப்பதாக தந்தை தெரிவித்ததையடுத்து, பொலிசார், அந்த வீட்டிற்கு சென்றனர். அங்கு பூட்டப்பட்ட வீட்டிற்குள் அந்தப் பெண் இருந்துள்ளார். அவர் கடுமையாக தாக்கப்பட்டு, காயங்களுடன் இருந்தார். அவரை தாக்கி, வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு கணவர் வேலைக்கு சென்றிருந்தார்.
பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கணவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிசார், அவரை கைது செய்து, சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தினர். சந்தேகநபர் சார்பில். இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய பிரமுகரான சட்டத்தரணி ஒருவரே முன்னிலையாகினார். கணவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.
இதேவேளை, சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, வைத்தியசாலைக்கு சென்று பாதிக்கப்பட்டவரையும் சந்தித்ததுடன், முறைப்பாட்டை விலக்கிக் கொள்ளுமாறும், குடும்பப் பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்டவரை சிகிச்சை முடித்து அனுப்பி வைக்குமாறு பொருள்படும் விதமாக கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
