யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி தேர்வில் இத்தனை கேவலங்களா?
அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்துக்கான பீடாதிபதித் தேர்வு நடைபெற்றிருந்தது. அதில்
ஊடகத்துறைத் தலைவரான பேராசிரியர் ரகுராம் அவர்களது பெயரும் கிறிஸ்தவ நாகரிகத்துறையின் தலைவரான
பேராசிரியர் போல் றொகான் அவர்களது பெயரும் முன்மொழியப்பட்டிருந்தன. ஆயினும் தேர்தல்
ஆரம்பிப்பதற்குமுன் பேராசிரியர் போல் றொகான் அவர்கள் தாம் போட்டியிலிருந்து விலகுவதாக
அறிவித்தார். இந்நிலையில் வேறு போட்டியாளர்கள் இல்லாததால் பேராசிரியர் ரகுராம் அவர்கள்
கலைப்பீடாதிபதியானார்.
பேராசிரியர் போல் றொகான் அவர்களுக்குக் கலைப்பீடச்சபையில் பெரும்பான்மையான ஆதரவு
இருந்தபோதிலும் அவர் தான் போட்டியிலிருந்து விலகுவதாக தேர்தல் வேளையில் அறிவித்தமை பலருக்கும்
ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கலைப்பீட அங்கத்தவர்களுக்குத் தான் போட்டியிலிருந்து விலகுவதற்கான காரணத்தைப்
பகிரங்கமாகத் தெரிவிக்கையில் கலைப்பீடாதிபதிக்கான தேர்தல் முஸ்தீபுகளின்போது சமயக்காழ்ப்புணர்வை
ஏற்படுத்தும் பிரச்சாரங்களும்ரூபவ் கிறிஸ்தவக் குருக்களும்ரூபவ் கிறிஸ்தவர்களும் பீடாதிபதியாக வரமுடியாதென்ற
அநாமதேயப் பிரசுரங்களும் வெளியாகி கலைப்பீடத்தில் ஒரு சுமுகமற்ற நிலை தோன்றியிருந்தமையை
விளக்கினார். இத்தகைய சமயக் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் நிலை நான்காவது தடவையாக கலைப்பீடாதிபதிக்கான
தெரிவின்போது ஏற்படுத்தப்பட்டமையைக் கவலையுடன் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் கலைப்பீடத்தின் சுமுகமற்ற
நிலையில் அதன் நலனில் அக்கறைகொண்டே தான் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் கலைப்பீடத் தேர்தற் காலங்களில் இவ்வாறு தோன்றும் சமயக் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும்
நிலைகளை ஏற்றுக்கொண்டு அதனைத்தவிர்க்கும் நோக்கில் ஒருசில ஆசிரியர்கள் தற்துணிவுடன் கையெழுத்து வேட்டை
ஒன்றை கலைப்பீட விரிவுரையாளர்களிடையே ஆரம்பித்தனர். ஆயினும் பெரும்பான்மையான கலைப்பீட
விரிவுரையாளர்கள் இதற்குத் தம் ஆதரவைத் தெரிவித்து யாழ். பல்கலைக் கழகத்தின் சமயக்காழ்ப்புணர்வை
ஏற்படுத்தும் அநாமதேயப் பிரச்சார நடவடிக்கைகளைக் கண்டிக்கமுன் வரவில்லை.
பாதிரியார் என்ற காரணத்துக்காக ஒருவர் பீடாதிபதியாக வரக்கூடாது என எண்ணுவது அபத்தமானது. எமது மண்ணின்
புலமைசார் உயர் இடமாகக் கருத்தப்படும் யாழ். பல்கலைக்கழகத்தில் இத்தகைய மனநிலை காணப்படுவது
தமிழ்ச்சமூகத்துக்கே வெட்கக்கேடானது. சமயப் பன்மைத்தன்மையை மதித்து ஏற்றுக்கொள்ளும் மனநிலை உருவாக
வேண்டும் என்பதே நேர்நோக்குக் கொண்ட அனைவரின் எதிர்பார்ப்பாகும்.