இந்தியச் செய்திகள்

பொள்ளாச்சி பெண்கள் கதறிய பண்ணை வீடு!! அயலவர்கள் கூறிய அதிர்ச்சித் தகவல்!! (Video)

பொள்ளாச்சியிலிருந்து ஆனைமலை செல்லும் வழியில் சில கிலோ மீட்டர்கள் பயணித்து வலதுபுறம் திரும்பினால் சில நிமிடப் பயணங்களில் வருகிறது சின்னப்பம்பாளையம். தமிழகத்தையே உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கும் `பொள்ளாச்சி பயங்கரம்’ நடந்ததாகச் சொல்லப்படும் ஊர் சின்னப்பம்பாளையம். அங்கு உள்ள திருநாவுக்கரசின் வீட்டில்தான் பொள்ளாச்சி ஆபாச அரக்கர்களின் பாலியல் அட்டூழியங்கள் அரங்கேறியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், சின்னப்பம்பாளையத்திற்கு நேரில் விரைந்தோம்…

திருநாவுக்கரசின் பெயரையோ… அல்லது அவருடைய அப்பா கனகராஜின் பெயரையோ சொல்லி, ‘அவங்க வீடு எங்கிருக்கிறது?’ என்று விசாரித்தால் `எனக்கு எதுவும் தெரியாது’ என்றபடி ஒதுங்கி ஓடுகிறார்கள் அந்த ஊர் மக்கள். இந்த விவகாரம் தொடர்பான பயம், அந்த ஊர் மக்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஊடுருவியிருப்பதைக் காண முடிந்தது.

40 வயதைக் கடந்த ஒரு நபர், `நான் காட்டுகிறேன்’ என்றபடி திருநாவுக்கரசின் வீட்டைக் காட்டினார். வளைந்து நெளிந்து சென்ற சின்னச் சந்துக்குள் நுழைந்து திருநாவுக்கரசின் வீட்டை அடைந்தோம். நாம் எதிர்பார்த்ததுபோல, அது ஒன்றும் பண்ணைவீடு கிடையாது. அந்த வீட்டைச் சுற்றி நிறைய வீடுகள் இருக்கின்றன. ஏராளமான பெண்களின் கதறல்களையும், கண்ணீரையும் உள்வாங்கிக் கொண்டு அமைதியோடிருந்த அந்த வீட்டை நோக்கி நகர்ந்தோம்…

அந்தக் காலத்து ஓட்டு வீடு அது… வீட்டின் முன்புறம் ஆஸ்பெஸ்டாஸ் ஷெட் போட்டிருக்கிறார்கள். ஜன்னலின் வழியாக எட்டிப்பார்த்தால் இரண்டு அறைகள். இரண்டிலும் ஒரு படுக்கை போடப்பட்டிருக்கிறது. அந்தப் படுக்கையையொட்டியே ஒரு மின்விசிறி இருக்கிறது. ஸ்பீக்கர் செட்டுகள் வைத்திருக்கிறார்கள். ஒரு டி.வி இருக்கிறது. ஒருவன், தான் அழைத்து வந்த பெண்ணோடு உள்ளே சென்றதும் மற்றவர்கள் மறைந்திருந்து வீடியோ எடுக்கும் வகையில் ஜன்னல் இருந்தது. இதையெல்லாம் பார்த்து கிறுகிறுக்கத் தொடங்கிய நேரத்தில், நமக்கு வீட்டைக் காட்டிய நபர் தன் பெயர் உள்ளிட்ட விவரங்களைச் சொல்ல மறுத்துப் பேச ஆரம்பித்தார்…

நியூஸ் பேப்பர்லயும், டி.வி–யிலயும் பார்த்தபிறகுதான் இந்த வீட்ல இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குன்னே எங்களுக்கு தெரியும். இந்த வீட்டைச் சுற்றி உள்ள வீடுகளில் பெரும்பாலும் ஆட்கள் இருக்க மாட்டார்கள். அதனால் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளமாட்டார்கள். இருக்கும் ஒரு சிலரும் காலையில் வேலைக்குச் சென்றால் ராத்திரிக்குத்தான் வீடு திரும்புவார்கள். இது கனகராஜ் மகன் திருநாவுக்கரசுக்கு வசதியா இருந்திருக்கு. அடிக்கடி காரில் வருவான். ஒரு கார் வந்த கொஞ்ச நேரத்திலேயே இன்னொரு கார் போகும்… ஏதோ ஃப்ரெண்ட்ஸ்-ஐ கூட்டிட்டு வந்து குடிக்கிறான்’னு நினைச்சு அதை நாங்க பெருசு பண்ணிக்கிட்டது கிடையாது. ஆனால், ஒவ்வொருமுறையும் காரில் ஒரு பெண்ணை அழைத்து வந்து இப்படி நாசம் செய்திருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவே தெரியாது. இப்படி ஒரு பாதகத்தைச் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது, நெஞ்செல்லாம் நடுங்குது’ என்றவரிடம் திருநாவுக்கரசைப் பற்றியும், அவனது குடும்பத்தைப் பற்றியும் விசாரித்தோம்…
பொள்ளாசி ஆபாச வீடியோ வழக்கு குற்றவாளிகள்

எந்த வருஷம்னு துல்லியமா ஞாபகமில்லை…ஆறேழு வருஷத்துக்கு முன்னாடியே அவங்க இங்கிருந்து பொள்ளாச்சிக்குப் போயிட்டாங்க. திருநாவுக்கரசுவின் அப்பா ஆரம்பகாலத்தில் காங்கிரஸில் இருந்தார். ரொம்ப பந்தாவான ஆள். ஓரளவுக்கு தோட்டம் இருந்தாலும் வட்டி பிசினஸ்தான் அவரின் பிரதான தொழில். சொந்தத்தில் கல்யாணம் பண்ணின பொண்ணை விவாகரத்து பண்ணிட்டு இரண்டாவதா ஒரு பெண்ணைக் காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டார். இரண்டாவது சம்சாரத்துக்குப் பிறந்தவந்தான் திருநாவுக்கரசு, அவனுக்கு ஒரு தங்கச்சியும் இருக்கு. காலேஜ் படிக்கிறப்போவே திருநாவுக்கரசு அத்துமீற ஆரம்பிச்சுட்டான். சில வருஷத்துக்கு முன்னால ஒரு நாள்… திருநாவுக்கரசு அப்பாவோட வண்டி மேல ஒருத்தர் தவறுதலா மோதிட்டார். அதுல அவங்களுக்குள்ள கைகலப்பு ஆகிருச்சு.

இந்தச் சம்பவத்தில் கனகராஜுக்கு அடி விழுந்துருச்சு. உடனே தன்னோட காலேஜிலிருந்து பெரும் படையையே அழைச்சுட்டு வந்து, அவங்க அப்பாவை அடிச்சவங்களை அடிச்சு பெரிய பிரச்னை பண்ணிட்டான். அப்போதிலிருந்தே அவன்கிட்ட பெருசா யாரும் வெச்சுக்க மாட்டாங்க. இங்கிருந்து போனதுக்குப் பிறகு அவன் படிச்ச காலேஜ்லயே லேப்-டாப் எல்லாம் திருடி மாட்டிக்கிட்டதா தகவல் வந்துச்சு. ஃபைனான்ஸ் தொழில் பண்றவருடைய மகன் எதுக்குடா திருடணும்னு யோசிச்சா, அவங்க குடும்பத்தில் என்ன சிக்கல் இருக்கும்னு ஓரளவுக்கு யூகிக்க முடியும். சில மாசங்களுக்கு முன்னாடி அவனோட ஃபேஸ்புக் பக்கத்தில ஒரு வீடியோ போட்டான், “அவங்க அப்பா அம்மாவுக்கு தெரியாமல் சர்ப்ரைஸா ஒரு ஃபைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சுருக்கிறதாச் சொல்லி எல்லாரையும் அதிர வைச்சான். அதெப்படிங்க அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் ஃபைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்க முடியும்? அவனுக்கு பணம் யார் கொடுப்பான்னு அப்போவே ஒரு சர்ச்சை கிளம்புச்சு. இப்போ இந்தத் தகவல்களெல்லாம் வெளியான பிறகே பெண்களை மிரட்டி பணம் சம்பாதித்துள்ளார்கள் என்பது தெரியவருகிறது.

திருநாவுக்கரசு மற்றும் அவனது கூட்டாளிகளான ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்த், தினேஷ் ஆகியோர்களைப் பற்றி அறிந்த பொள்ளாச்சி இளைஞர்கள் சிலரிடம் பேசினோம், “இவர்கள் நான்குபேரும் எப்படி இணைந்தார்கள் என்பதே யாருக்கும் தெரியவில்லை. இப்போது விசாரித்தால்தான் இவர்கள் நான்குபேருக்கும் உள்ள ஒரே கனெக்‌ஷன் பொண்ணுங்கதான்னு தெரியுது. பொண்ணுங்களுக்காகவும் பணத்துக்காவும் இவனுங்க செய்திருக்கும் காரியம் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாதது. ஒரு மாசத்துக்கு முன்னால பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரோட்டுல இவனுங்க கார்ல இருந்து ஒரு பொண்ணு இறங்கி ஓட ட்ரை பண்ணியிருக்கு. ஆனால், விடாம அடிச்சி இழுத்துட்டுப் போயிருக்காங்க. ஒரு பெரியவர் இதைப்பார்த்துட்டு வீடியோ எடுக்க நினைச்சுருக்கார். ஆனால், பதற்றத்துல அவர் ரெக்கார்டு பட்டனை `ஆன்’ பண்ணாம விட்டுட்டார். இது ஒரு சாம்பிள்தான். இவர்கள் இன்னும் என்னென்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்று நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்’’ என்று மிரள வைக்கிறார்கள்.

கைப்பற்றப்பட்டது நான்கு ஆபாச வீடியோக்கள்தாம் என்று அடித்துச் சொல்கிறார் கோவை எஸ்.பி பாண்டியராஜன். ஆனால், எல்லோரும் சொல்வதைப் பார்த்தால், நிறைய பெண்களை இவர்கள் சீரழித்திருப்பதும், ஆபாச வீடியோ எடுத்திருப்பதும் உறுதியாகத் தெரிகிறது. உண்மையை மறைத்து, யாரைக் காப்பாற்றப் பார்க்கிறது காவல்துறை என்பதுதான் புரியாதபுதிராக இருக்கிறது.

நன்றி – விகடன்