பெட்டிக்கடையில் 4,000 கருக்கலைப்பை நடாத்திய தம்பதிகள் சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் பெட்டிக்கடை ஒன்றில் கடந்த 10 வருடங்களாக கவிதா என்ற பெண் தன் கணவர் பிரபுவுடன் சேர்ந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துவந்தது தெரிந்து அவர்களைக் கைது செய்துள்ளது போலீஸ்
கவிதா
அவலூர்பேட்டை சாலையில் பெண் ஒருவர் சட்டவிரோத கருக்கலைப்பு செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்திக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் சட்டவிரோத கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில், 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த கவிதா அவலூர்பேட்டை சாலையில் சிறியதாகப் பெட்டிக்கடை ஒன்றை நடத்திவந்துள்ளார். அவரது கணவர் பிரபு அதே பகுதியில் ஆங்கில மருந்துக்கடை வைத்துள்ளார். இந்நிலையில், பிரபுவும் அவரது மனைவி கவிதாவும் சேர்ந்து பெட்டிக்கடையிலேயே கருக்கலைப்பு செய்து வந்துள்ளனர். கலசபாக்கம் அடுத்த கடலாடியைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பமான நிலையில் அங்குள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தொடர் செக்கப் செய்துவந்துள்ளார். ஆனால், தீடிரென அவர் செக்கப் செய்துகொள்வதை நிறுத்தியுள்ளார். இதுகுறித்து, சுகாதாரத் துறையினர் விசாரித்தபோது அவர் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் போலி மருத்துவர்களான திருவண்ணாமலையில் உள்ள பிரபு-கவிதா தம்பதியிடம் கருக்கலைப்பு செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கவிதாவின் கடை
இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி தலைமையிலான போலீஸார் நேற்று பிரபுவின் மருந்துக் கடையிலும் மனைவி நடத்தி வந்த பெட்டிக்கடையிலும் சோதனை நடத்தினர். அப்போது அங்குக் கருக்கலைப்பு செய்யப் பயன்படுத்தப்பட்டு வந்த மருந்துகள் மற்றும் கருக்கலைப்புக்குத் தேவையான உபகரணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை போலீஸார் கைப்பற்றினார். அந்த தம்பதியிடம் நடத்திய விசாரணையில் கடந்த 10 ஆண்டுகளாக கருக்கலைப்பு செய்து வந்ததாகவும், தினமும் 3 அல்லது 4 பேர் கருக்கலைப்பு செய்ய வருவதாகவும் ஒப்புக்கொண்டனர். இதுவரை 4 ஆயிரம் சிசுக்களை அழித்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி தகவல் கிடைத்ததும் அவர் உடனடியாக விசாரணையில் இறங்கினார். அங்குச் சோதனை செய்தபோது சட்டவிரோதக் கருக்கலைப்பு செய்தது தெரியவந்துள்ளது. கணவன் மனைவி இருவரையும் கைது செய்துள்ளோம் அவர்கள் மீது தீவர நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு சுகாதார இணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ஸ்கேன் சென்டர்கள் மற்றும் மருந்துக் கடைகள் அனைத்திலும் சோதனை செய்ய உள்ளோம் என்றார்.