இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

கணவனையும் அவரது தந்தையையும் தனது அந்தரங்க நண்பனுடன் சேர்ந்து கொன்று எரித்த பானுப்பிரியாவும் நண்பனும் பிடிபட்டது எப்படி?

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரான கணவர், அவரது தந்தையை, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று எரித்த பெண்ணை, அவரது நண்பருடன் போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் வெப்பாலம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை எரிந்த நிலையில் ஒரு ஆணின் சடலம் கிடந்தது. அந்த இடத்தில் இருந்து அரை கி.மீ. தொலைவில் கொடுகூரில் மற்றொரு ஆண் சடலமும் எரிந்த நிலையில் கிடப்பது தெரியவந்தது. அவற்றை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரரான பெல்லாரம்பள்ளியைச் சேர்ந்த மகேஷ்குமார் (43), அவரது தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் செல்லப்பன் (62) ஆகியோர் காணாமல்போனது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களின் வீட்டிற்குச் சென்ற போலீஸார், ராணுவ வீரர் மகேஷ்குமாரின் மனைவி பானுப்பிரியாவிடம் (30) விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியதால், அவர்மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், பானுப்பிரியா தனது ஆண் நண்பர் மேல்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பூவரசன் (24) உதவியுடன், தனது கணவர் மகேஷ்குமார், அவரது தந்தை செல்லப்பன் ஆகியோரை கொலை செய்து உடல்களை எரித்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பானுப்பிரியா, பூவரசன் (24) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கைதான பூவரசன் கூறியுள்ளதாவது:

வேன் ஓட்டுநரான எனக்கும், மகேஷ்குமாரின் மனைவி பானுப்பிரியாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. மகேஷ்குமார் ஜம்மு- காஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம். இது மகேஷ்குமாருக்கு தெரியவந்ததால் அவர் பானுப்பிரியாவை கண்டித்தார்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பானுப்பிரியா கைப்பேசி மூலம் என்னை தொடர்புகொண்டு தனது கணவர் வந்துள்ளார் எனத் தகவல் அனுப்பினார். அதையும் மகேஷ்குமார் கண்டுபிடித்து பானுப்பிரியாவை கண்டித்தார். மகேஷ்குமார் உயிரோடு இருக்கும்வரை நம் உறவைத் தொடரமுடியாது என பானுப்பிரியா என்னிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, கடந்த 10ஆம் தேதி இரவு மகேஷ்குமாரின் வீட்டுக்கு சென்ற நான், தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்த அவரை கத்தியால் குத்தினேன். அப்போது மகேஷ்குமார் கூச்சலிட்டதால், அருகில் இருந்த அவரது தந்தை செல்லப்பன் ஓடிவந்தார்.

அவரையும் நான் கத்தியால் குத்தினேன். பானுப்பிரியா மற்றொரு கத்தியால் 2 பேரையும் குத்தினார். இதில் 2 பேரும் உயிரிழந்தனர்.

பின்னர் சாக்குப் பைகளில் மகேஷ்குமாரின் உடலையும், அவரது தந்தை உடலையும் தனித்தனியாக கட்டி எடுத்துச் சென்று தீவைத்து எரித்தோம் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட பூவரசன், பானுப்பிரியா ஆகியோரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக பானுப்பிரியாவின் 10 வயது மகனையும் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.